For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவனிக்கிறோம், நடவடிக்கை எடுக்கிறோம்' என்று சொல்லாதீர்கள்..-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க கூடாது என்ற உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உள்ள மரபுரிமையின்படி அங்கே செல்லும்போது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தி 3 வார காலமாக வேலைநிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், மாநில அரசு அளித்த வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டனர்.

அதைத் தொடர்ந்து மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளிலேயே இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர்; அவர்களது 3 விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசும்- மாநில அரசும் தலையிட்டு தங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கண்ணீர்மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது முதல் கடந்த 40 ஆண்டு காலமாக இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கில் நமது மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இத்தகைய தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதுவதும், கவனிக்கிறோம் - நடவடிக்கை எடுக்கிறோம்' என்று மத்திய அரசு பதில் கடிதம் எழுதுவதும் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இனி, கடிதம் எழுதுவது மட்டுமே போதாது. கச்சத்தீவு கடல் பகுதியில் நமது மீனவர்களுக்கு பரம்பரையாக இருந்து வந்த மீன்பிடிக்கும் உரிமை நிலைநிறுத்தப்பட்டாக வேண்டும். இதற்கு 1976ம் ஆண்டில் இந்திய அரசு பிறப்பித்திருக்கும் தடை ஆணை திரும்பப்பெறப்பட வேண்டும்.

1967ம் ஆண்டில் பதவிக்கு வந்ததும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளுக்காக கோரிக்கை நாள்'' கடைப்பிடிக்க ஆணையிட்டவர் அண்ணா. அவரது நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் இந்த சமயத்தில், தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் நிரந்தரப் பாதுகாப்பை தேடித்தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்திய அரசிடம் அதற்கான உத்தரவாதத்தை பெற்று அண்ணாவின் நினைவிற்கு காணிக்கையாக்க வேண்டும்.

நமது மீனவர்களின் நலனை பாதுகாப்பதற்காக மட்டுமல்லாது, கச்சத்தீவு தொடர்ந்து இலங்கை வசம் இருந்தால், அதன்மூலம் நமது எதிரி நாடுகளிடம் இருந்து நமது பாதுகாப்பிற்கு அதிலும் குறிப்பாக தென்னிந்திய மக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட உள்ள அச்சுறுத்தலையும், ஆபத்தையும் உரிய முறையில் எடுத்துக்கூறி கச்சத்தீவு ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வாதாட வேண்டும்.

அதற்கு முதல்படியாக 1976ம் ஆண்டில் இந்திய அரசு பிறப்பித்த தடை ஆணையை விலக்கிக் கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசும், முதல்வரும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாஜக ஆர்ப்பாட்டம்:

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில்,

ராமேஸ்வரம் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும்போது இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடிப்பதும் உண்டு. கச்சத்தீவை இந்திய அரசு தானம் கொடுத்தபோது கச்சத்தீவையொட்டியுள்ள பகுதி இந்திய-இலங்கை மீனவர்களுக்கு பொதுவான பகுதி என்று ஒப்பந்தமாகியுள்ளது.

எனவே இந்திய மீனவர்களுக்கு அந்தப் பகுதியிலும் மீன் பிடிப்பதற்கு உரிமையுண்டு. விடுதலைப் புலிகளால் இலங்கை அரசு பிரச்சனைகளை சந்தித்த காலங்களில் இந்திய மீனவர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் கூட நடைபெற்று இருக்கிறது.

தற்போது இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

இந்த நேரத்தில் தொடர்ந்து சமீப காலமாகக்கூட மீனவர்கள் தாக்கப்பட்டார்கள். அதன் உச்சகட்டமாக நேற்றைய தினம் இலங்கை கடற்படை பகிரங்கமாக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது. எந்த ஒரு அரசும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்திய அரசு இலங்கை தூதரை அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்திய மீனவர்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில் அரசு செயல்பட வேண்டும்.

நடைபெற்ற சம்பவத்திற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்டோபர் மாதம் 6ம் தேதி தமிழக பாஜக ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை எனது தலைமையில் நடத்தும். ஆர்ப்பாட்டம் குறித்த மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கருணாநிதி மனம் மாற வேண்டும்-விஜய்காந்த்:

தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். 24 நாள் போராட்டத்துக்குப் பிறகு தமிழக மீனவர்கள் கடலுக்குத் திரும்பினர். ஆனால் கடலுக்கு திரும்பிய அன்றே அவர்களை சிங்கள ராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.

இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி தனது மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதியே மாற வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X