தலாய் லாமாவின் அருணாச்சல் பயணம் - இந்தியா அனுமதி
டெல்லி: அருணாச்சல் பிரதேச மாநிலத்துக்கு தலாய் லாமா போகக் கூடாது என்று சீனாவின் முட்டாள்தனமான எதிர்ப்பை இந்தியா நிராகரித்து விட்டது. தலாய் லாமா அருணாச்சல் பிரதேசம் செல்ல எந்தத் தடையும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து திட்டமிட்டபடி அருணாச்சல் பிரதேசம் செல்லவுள்ளார் தலாய் லாமா. மேலும், தனது பிரதேசம் என சீனா தொடர்ந்து கூறி வரும் தவாங் பகுதிக்கும் அவர் செல்கிறார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, மாநிலம். தலாய் லாமா இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல உரிமை உண்டு. அதேசமயம், அரசியல் குறித்து மட்டும் அவர் பேசக் கூடாது என்றார் அவர்.
இதற்கிடையே, அருணாச்சல் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனாவின் செயலை திபெத்தியர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து திபெத்திய தலைவர் சாம்டாங் ரின்போச்சே கூறுகையில், சீனா கூறி வரும் அருணாச்சல் பிரதேசப் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் எல்லைக்குள்தான் உள்ளன. இது தெளிவான ஒன்று. ஆனால் இந்தியாவின் லடாக் பகுதிக்குள் சீனர்கள் அத்துமீறி நுழைந்து சிவப்பு பெயின்ட்டால் தங்களது பகுதி என எழுதியிருப்பது அப்பட்டமான அத்துமீறல் நடவடிக்கையாகும்.
இதனால் லடாக் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர் என்றார்.