தமிழகத்தை ஜெவிடம் ஒப்படைப்போம்-ஓ.பி சபதம்
தஞ்சாவூர்: தமிழகத்தை மீண்டும், ஜெயலலிதா கையில் ஒப்படைப்போம். அதற்காக நாம் அனைவரும் சபதம் ஏற்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சபதம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டம், தஞ்சையில் நடைபெற்றது.
அதில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் பயணத்தை முடித்து வைத்த பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். அப்படிப்பட்ட மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வந்தவர் அவர்.
இன்றைக்கு தமிழ் வாழ்வதற்கும், வளர்வதற்கும் காரணமாக அவர் விதைத்த விதை தான், இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது. அவரது கொள்கை, கோட்பாடுகளை கருணாநிதி மறந்த காரணத்தால் தான், அ.தி.மு.க - வை எம்.ஜி.ஆர் துவக்கினார்.
அவர் மறைவுக்குப்பின் இயக்கம் அழிந்து போகும் என சிலர் நினைத்த போது, இயக்கத்தை காப்பாற்ற ஜெயலலிதா வந்தார்.
அண்ணா, எம்.ஜி.ஆரின் கொள்கைகள் நாடு உள்ளவரை பறை சாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, 38 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையை ஜெயலலிதா துவங்கியுள்ளார்.
காவிரி பிரச்னையில் காங்கிரஸ் அரசும், தி.மு.க., அரசும் தஞ்சை மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்து விட்டது.
மீண்டும் தமிழகத்தை ஜெயலலிதா கையில் ஒப்படைப்போம். அதற்காக அனைவரும் சபதம் ஏற்போம் என்றார்.