பெரியாறு: திமுக அமைச்சர்கள் விலக வேண்டும்-ஜெ
சென்னை: முல்லை பெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதை கண்டித்து மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..
கச்சத்தீவு, காவிரி நதிநீர் என நமது உரிமைகள் அனைத்தும் கருணாநிதியின் ஆட்சிகாலத்தில் தான் பறிபோனது. இலங்கையில் தமிழ் இனம் பாதி அழிந்ததற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.
தமிழர்களின் உரிமைகளை தட்டி கேட்க தயங்குபவர் கருணாநிதி என்பதால் தான் பாலாற்றி்ன் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கைகளை விரைந்து செய்கிறது.
3 ஆண்டுகளில் முடிக்க திட்டம்...
தற்போதைய கேரள அரசு முல்லைபெரியாறு அணையின் குறுக்கே ரூ. 300 கோடி செலவில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் முழு ஆதரவுடன் இந்த திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட இருக்கிறது.
புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி கொடுத்ததாக மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து மூன்று நாட்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் கருணாநிதி அதை எதிர்த்து குரல் கொடுப்பார் என நினைத்தோம்.
கருணாநிதி அறிக்கை-கேலி கூத்து...
ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருப்பதோடு, மத்திய அரசில் அங்கம் வைத்திருக்கும் அவர் இது உண்மையா என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.
அதைவிடுத்து தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்காது என அறிக்கை வி்ட்டுள்ளார். இந்த அறிக்கை கேலி கூத்தானது. கண்டனத்துக்குரியது.
தான் கேட்ட அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதால் பதவியேற்பு விழாவை புறக்கணித்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கருணாநிதி, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து தங்களது கட்சி அமைச்சர்களை ராஜினாமா செய்ய சொல்லி மத்திய அரசு எச்சரிக்கை கொடுக்க வேண்டியது தானே?
தமிழ்ப் பண்பாட்டை இழந்து தேசியை ஒருமைப்பாட்டை அமைக்க விரும்பினால் அது பாரதியார் சொன்னது போல் கண்ணிரன்டையும் விற்று சித்திரம் வாங்கியதாக தான் இருக்கும் என்ற பேரறிஞர் அண்ணாவின் வழி வந்தவன் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கும் கருணாநிதியோ, உரிமைகள் என்கிற கண்களை விற்று முதல்வர் என்ற பதவியில் ஒட்டி கொண்டிருக்கிறார். இதைவிட வெட்ககேடு வேறு எதுவுமில்லை.
மாவட்டங்கள் வறட்சியால் தத்தளிக்கும்...
இந்த பிரச்சனையை கருணாநிதி அலட்சியம் செய்தால், கிடைத்து கொண்டிருக்கிற தண்ணீரும் தமிழகத்துக்கு வராமல் போய்விடும் சூழ்நிலை ஏற்படும். முல்லை பெரியாறு அணையை ஒட்டியுள்ள பல மாவட்டங்கள் வறட்சியால் தத்தளிக்கும் நிலைமை உருவாகும்.
வெள்ளம் வருமுன் அணை போட வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப ஆபத்து வரும் முன்பே அதை தடுக்க திமுக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் தமிழக மக்களின் உரிமை பறிபோவதை தடுக்க அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என தெரிவித்து கொள்கிறேன் என அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.