மின்னணு எந்திரம்-'புகாரை யாரும் நிரூபிக்கவில்லை'
ஜெய்ப்பூர்: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்யலாம் என்று கூறிய யாருமே அதை நிரூபித்துக் காட்டவில்லை. இதன் மூலம் யாராலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்று சில அரசியல் கட்சிகள் கூறி வந்தன. அந்த கட்சியின் பிரதிநிதிகள் டெல்லி வந்து பார்த்தார்கள்.
அவர்கள் முன், தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அவர்களால், அதில் தவறுகள் செய்ய முடியும் என்று நிரூபிக்க முடிய வில்லை.
நாம் பயன்படுத்தும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை, மிகவும் தரமானவை. ராணுவ தளவாடங்கள் செய்யும் நிறுவனம் ஒன்றும், அணுசக்தியை உருவாக்கும் நிறுவனம் ஒன்றும், இந்த மின்னணு எந்திரங்களை செய்து கொடுக்கின்றன.
யாருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை என்பதை குறிக்கும் பட்டனை, தற்போதைய மின்னணு எந்திரத்தில் பயன்படுத்தலாமா? என்று மத்திய அரசின் அனுமதியை கேட்டு இருக்கிறோம்.
இந்த அனுமதி கிடைத்தால், எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப்போட விரும்பாத ஒருவர், இந்த பட்டனை அழுத்திவிட்டு சென்று விடலாம். அப்போது அவரது ஓட்டு பதிவாகாது. ஆனால் அதே நேரத்தில் அவரது பெயரில் வேறு யாரும் கள்ள ஓட்டு போட முடியாது.
ஒரு வாக்காளர், அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் எந்த வேட்பாளருக்கு ஓட்டளித்தனர் என்பதை ரகசியமாகவே தேர்தல் கமிஷன் வைத்துக்கொள்ளும். அதை வெளியிட மாட்டோம். அதை வெளியிட்டால், தேர்தல் மோதல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
2 வகையான வாக்காளர் பட்டியல்களை நடைமுறையில் பயன்படுத்துகிறோம். நாடாளுமன்றம் மற்றும் சட்ட மற்ற தேர்தலுக்கு ஒரு வாக்காளர் பட்டியலும், பஞ்சாயத்து, நகராட்சி தேர்தலுக்கு ஒரு வாக்காளர் பட்டியலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதை மாற்றி ஒரே பட்டியல் பயன்படுத்த வேண்டும் என்று விண்ணப்பங்களை கட்சிகள் கொடுத்து இருக்கின்றன. இதுபற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிடாமல், 'லெட்டர் பேடுகளில்' மட்டுமே இருக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இதற்காக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்.
கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட விசாரணை கைதிகள், தேர்தலில் போட்டியிடுவது தடுக்கப்பட வேண்டும். ஒருவர் குற்றம் புரிந்து, அதற்கான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டு அல்லது அதற்கு மேலான தண்டனை கிடைக்கும் என்பது உறுதியானால், அவர் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தின் அடிப்படையில், இந்தப் பிரச்சனை குறித்து முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமித்தது. கமிட்டியில் இடம் பெற்ற ஒவ்வொரு உறுப்பினரும் தேர்தல் கமிஷனின் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், எங்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதனால் மீண்டும் ஒரு முறை அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம் என்றார்.