அண்ணா சாலையில் 5 பாலங்கள் கட்ட முடிவு

சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிக் கொண்டுள்ளது. இப்படியே போனால் நடக்கக் கூட டிராபிக் சிக்னல் வைக்க வேண்டிய நிலை எதிர்காலத்தில் வரும் அபாயம் உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு திமுக அரசு ஏராளமான பாலங்களைக் கட்டி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்டு வருகிறது.
அதேசமயம், நகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் இதுவரை தீர்ந்தபாடில்லை.
இதை சரி செய்ய, அண்ணாசாலையில் வாலாஜா சாலை, ஸ்பென்சர் சந்திப்பு, எல்டாம்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் ஆகிய இடங்களில் 5 புதிய மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலங்கள் ரூ.600 கோடி செலவில் கட்டப்பட இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக 3 மாத காலத்திற்குள் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து பாலங்களில் வாலாஜா சாலை சந்திப்பு, எல்டாம்ஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் கட்டப்பட உள்ள மேம்பாலங்கள் நீளமானவையாக இருக்கும். அதாவது ஒவ்வொன்றும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருக்கும்.
வாலாஜா சாலை மேம்பாலம் எல்ஐசிக்கு முன்பாக முடியும். எல்டாம்ஸ் சாலை மேம்பாலம், அண்ணாசாலை, செனடாப் சாலை சந்திப்பில் முடியும்.
சிஐடி நகர் மேம்பாலம் அண்ணா சாலையிலும், சிஐடி நகர் முதலாவது மற்றும் 3வது மெயின் ரோட்டையும் இணைக்கும்.
ஸ்பென்சர் சந்திப்பில் கட்டப்பட இருக்கும் மேம்பாலம் 600 மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் அது அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு முன்பாக முடிவடையும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஐந்து பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெருக்கடி பெருமளவில் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது கட்டிய ஏராளமான பாலங்களால் சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடி பெருமளவில் குறைந்தது. இப்போது அவர் துணை முதல்வராக இருப்பதால் அண்ணா சாலையில் கட்டப்படும் பாலங்களால் சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடி இன்னும் எளிமையாகும் என்று நம்பலாம்.