For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2006 முதல் சென்னையில் சங்கிலிப் பறிப்பு இரண்டு மடங்காக உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகரில் கடந்த 2006ம் ஆண்டிலிருந்து கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சங்கிலிப் பறிப்புச் செயல்கள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. இருப்பினும் பல கொலை வழக்குகளையும், பிற குற்ற வழக்குகளிலும் போலீஸார் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

துரிதமாக செயல்படும் போலீஸார்...

கடந்த ஆண்டு திருட்டுப் போன பொருட்களில் 68 சதவீதம் மீட்கப்பட்டன. இந்த ஆண்டு அது இதுவரை 79 சதவீதமாக உயர்ந்துள்ளது. போலீஸாரின் துரிதமான நடவடிக்கையை இது காட்டுவதாக உள்ளது.

குற்றச் செயல்களைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஒரு மூத்த காவல்துறை அதிகாரி இதுகுறித்துக் கூறுகையில், சந்தேகப்படுபவர்களை கண்காணிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா நகர், கோயம்பேடு போன்ற பகுதிகளில் குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

முன்பு போலீஸாரிடம் போதிய அளவில் வாகனங்கள் கிடையாது. ஆனால் தற்போது இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன என்றார்.

295 பேருக்கு குண்டாஸ்...

கடந்த 3 மாதங்களில் மட்டும் மத்திய சென்னையில் 140 சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வட சென்னையில் 110 பேரும், தென சென்னையில் 45 பேரும் இதுபோல குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளே போயுள்ளனர்.

அதேசமயம், போலீஸ் பணியில் அரசியல் குறுக்கீடுகள் நிறைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அயனாவரத்தில் நடந்த விபத்து வழக்கில், உள்ளூர் எம்.எல்.ஏ., அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரை கடுமையாக மிரட்டியுள்ளார். அதேபோல ஒரு தாக்குதல் வழக்கில் கைதான இன்னொரு கட்சிக்காரரை மீட்க அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டு வந்து காவல் நிலையத்தில் ரகளை செய்தனர் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.

அரசியல்வாதிகளே காரணம்...

இதுகுறித்து ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், எல்லாக் குழப்பங்களுக்கும் காரணமே அரசியல்வாதிகள்தான். காவல் நிலையத்தின் முழுமையான, சுதந்திரமான செயல்பாட்டுக்கு அவர்கள் பெரும் தடையாக விளங்குகின்றனர். காவலர்களை சுதந்திராக செயல்பட விடாமல் முட்டுக்கட்டையாக உள்ளனர்.

உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளைப் பெரும்பாலும் பகைத்துக் கொள்வதில்லை. அவர்களுடன் அனுசரித்துப் போய் நல்ல பதவிகளை, பணியிடங்களை வாங்கிக் கொள்கின்றனர். இதனால் அரசியல்வாதிகளுக்கு சாதகமாகத்தான் காவல்துறை உயர் அதிகாரிகள் நடக்க வேண்டிய நிலை உள்ளது என்று வருத்தப்பட்டார்.

குற்றத்தில் தென் சென்னை டாப்...

வழக்கமாக வட சென்னையில்தான் குற்றச் செயல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் வித்தியாசமாக இந்த செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில், வட சென்னையில்தான் குறைந்த அளவிலான குற்றச் செயல்கள் நடந்துள்ளனவாம்.

வடசென்னையில் 49 சங்கிலிப் பறிப்புகளும், 27 வழிப்பறிகளும் நடந்துள்ளன.

அமைதிப் பூங்கா என வர்ணிக்கப்படும் தென் சென்னை இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 161 சங்கிலிப் பறிப்புகளும், 95 வழிப்பறிகளும் நடந்துள்ளன.

மத்திய சென்னையில், 62 சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களும், 31 வழிப்பறிச் சம்பவங்களும் நடந்துள்ளன என காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X