செத்திருப்பீர்கள் என்று ராஜபக்சே சொன்னது ஒரு ஜோக் - திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபாகரனுடன் இருந்திருந்தால் இன்னேரம் செத்திருப்பீர்கள் என்று ராஜபக்சே சொன்னதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.

இலங்கை சென்ற திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவில் இடம் பெற்றிருந்த திருமாவளவன் தனது இலங்கை பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அவதிகளை விவரிக்க வார்த்தை இல்லை..

ஈழத் தமிழர்களை நேரில் கண்டறிவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது. மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும்படி கதறி அழுதனர். அதைத் தாண்டி எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம். எங்கள் ஊருக்கு அனுப்பினால் நாங்கள் உழைத்து பிழைத்துக் கொள்வோம் என்பதை ஒருமித்த கருத்தாக கூறினார்கள். குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

5 லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

பிச்சைக்காரர்களை விட கேவலமான நிலை...

மஞ்சள் காமாலை, தோல் நோய் ஏராளமாக பரவுகிறது. கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க பால், பால் பவுடர் கிடைக்கவில்லை. மாற்று உடைக்கு வழியில்லாமல் அழுக்கு துணியையே அணிந்து வருகிறோம். அரிசி, பருப்பு மட்டும் தருகிறார்கள். காய்கறி, மசாலா சாமான் தருவதில்லை.

பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக அம்மக்கள் கதறி அழுதனர்.

யாழ், மன்னார் பகுதி மக்கள் விடுதலை...

இந்த விவரங்களை எல்லாம் தொகுத்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிடம் விளக்கி சொன்னோம். மழைக் காலத்திற்கு முன்னதாக அனைவரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அனைவரும் ஒரே குரலில் வற்புறுத்தினோம். அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் பேரை விடுவிப்பதாக ஒத்துக் கொண்டனர்.

உறவினர்கள் விண்ணப்பம் செய்த வகையில் 8 ஆயிரம் பேரையும், மொத்தம் 58 ஆயிரம் பேரை 2 வாரத்தில் அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்றி விட்டு மற்றவர்களையும் மீள் குடியமர்த்துவோம் என்று தெரிவித்தனர்.

இலங்கைக்கு சென்று வந்தது ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. எங்களை பார்க்க முதல் முறையாக இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்கள். இந்தியாவிடம் சொல்லி எங்களை சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என்று அவர்கள் கதறி அழுதனர்.

முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை வெளியேற அனுமதித்தது, எங்களுடைய பயணத்தால் கிடைத்த பயன் என்று கருதுகிறேன். மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியை இந்திய அரசு மூலமாக முதல்வர் கருணாநிதி மேற்கொள்வார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இலங்கை சிறையில் அடைபட்ட 40 இந்தியர்களை இந்தியாவில் உள்ள சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உறுதியளித்துள்ளது.

என்னை அறிமுகம் செய்த போது பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்றார் திருமாவளவன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற