For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தேர்தல்': ராஜபக்சேவுக்கு உதவ சென்ற குழு-ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்த போது போர் நிறுத்தம் என்று நாடகமாடி காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு உதவியவர் ராஜபக்ஷே. இப்போது இலங்கையில் தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதால் தேர்தலில் அவருக்கு உதவவே இங்கிருந்து குழு அனுப்பப்பட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையின் மண்ணின் மைந்தர்களான அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சொந்த நாட்டில் உள்ள அகதி முகாம்களை பார்ப்பதற்கு அனுமதியில்லை. முகாம்களை பார்வையிட அனுமதி கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்றுவரையில் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உங்களை நம்புகிறார்கள்: எங்களை எங்கள் நாட்டு அரசு நம்ப மறுக்கிறது என்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குழுவிடம் அங்குள்ள பிரதான எதிர்க்கட்சி முறையீடு செய்திருக்கிறது.

அந்த அளவுக்கு இங்குள்ள திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மீது இலங்கை அரசு நம்பிக்கை வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அகதி முகாம்கள் என்ற பெயரில் முள் வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களில் முதற்கட்டமாக 58,000 பேரை 15 நாட்களுக்குள்ளாக அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவிடவும், எஞ்சியிருப்போரை படிப்படியாக அனுப்பிவிடவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

இலங்கை சென்ற குழுவினர் சென்னை விமானத்தில் இருந்து இறங்கியதும் முதல்வரிடம் அவசரமாக அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் முதல்வர், இலங்கை அரசின் வாக்குறுதிகளை அவசரமாக செய்தியாளர்களிடம் வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று இங்கே இவரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் எப்படி எல்லாம் தள்ளாடி' கொண்டிருக்கின்றன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும்போது இலங்கை அரசு அளித்த வாக்குறுதி மட்டும் எப்படி படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று மக்கள் நம்புவார்கள்?.

இந்திய அரசுக்கு இலங்கை அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் இந்திய அரசால், மாநில முதல்வருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்த வாக்குறுதியையே நிறைவேற்றாமல் நம்பிக்கை துரோகம் செய்த ராஜபக்சே, இப்போது சில கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் இடம் பெற்ற அதிகாரப்பூர்வமற்ற குழுவுக்கு அளித்த வாக்குறுதியை மட்டும் எப்படி நிறைவேற்றுவார்?.

நல்லது நடக்க நல்லதை நினைப்போம் என்று சொல்வது கேட்பதற்கு இனிக்கிறது. ஆனால், ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வுகளும், உண்மைகளும் கசக்கிறதே. என்ன செய்வது?.

கண்ணி வெடிகளை அகற்ற வேண்டிய பணிகள் தான் மறு குடியேற்றத்திற்கு தடையாக இருக்கிறது என்று நாடகமாடி உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே. அது உண்மையென்றாலும், ஒரு குறுகிய நிலப்பரப்பில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை போர் முடிந்து 6 மாத காலமாக அகற்ற முடியவில்லையா?
சிங்களப் படையினர் நடந்து சென்றால் கண்ணி வெடிகள் வெடிக்காதா? தமிழர்கள் நடந்து சென்றால் மட்டுமே கண்ணி வெடிகள் வெடிக்குமா?.

எனவே கண்ணி வெடிகள் என்று காரணம் சொல்வதெல்லாம் ஏமாற்று நாடகம். ராஜபக்சேவின் இந்த ஏமாற்று நாடகத்தை நம்புவதும், அதனை தமிழர்கள் எல்லோரும் நம்ப வேண்டும் என்று சொல்லுவதும், ஈழத் தமிழர்களின் துயரத்தையும், அவர்களது வேதனையையும் விட உள்ளூர் அரசியல் ஆதாயம் முக்கியம் என்ற நினைப்பே காரணம்.

இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இந்த கண்ணி வெடிகளை அகற்றி உதவிட முடியும். ஆனால், தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணமும், மனமும் இந்திய அரசிடம் கிஞ்சிற்றும் இல்லை என்பதுதான் உண்மை.

இங்கே தேர்தல் நடந்தபோது போர் நிறுத்தம் என்று சொல்லி நாடகமாடி உதவியவர் ராஜபக்சே. இப்போது இலங்கையில் தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டிருக்கிறார். தேர்தலின்போது அவருக்கு உதவிடும் வகையிலேயே இந்திய அரசு செயல்படுகிறது. அதற்காகவே இங்கிருந்து குழு அனுப்பப்பட்டிருக்கிறது.

அகதி முகாம்களிலிருந்து தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என்று முறையிடுவதற்கு குழு அனுப்ப தேவையில்லை. பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சரவோ தொலைபேசியில் அழைத்து அறிவுறுத்தினால் ஒரு மணி நேரத்தில் முள்வேலி முகாம்கள் அகற்றப்பட்டு 3 லட்சம் தமிழர்கள் படிப்படியாக அல்ல, ஒரே நாளில் விடுதலையாகி சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல முடியும்.

ஆனால், இந்திய அரசிடம் அதற்கான மனமும் இல்லை, உறுதியும் இல்லை என்பதுதான் உண்மை. அதை மறைக்கவே இலங்கைக்கு தூதுக்குழு; அதனிடம் வாக்குறுதி என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X