For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை முன்னாள் எம்.பி. மோகன் சென்னையில் மரணம்

Google Oneindia Tamil News

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை லோக்சபா தொகுதிக்கு 2 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.மோகன் சென்னையில் மரணமடைந்தார்.

மதுரை மக்கள் என்றும் மறக்க முடியாத நபர்களில் ஒருவர் மோகன். மதுரை லோக்சபா தொகுதியிலிருந்து 2 முறை வெற்றி பெற்றவர்.

கடந்த லோக்சபா தேர்தலிலும் அவர் சிபிஎம் சார்பில் மதுரையில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் பிரசாரம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. தேர்தலில் மு.க.அழகிரியிடம் தோல்வியுற்றார் மோகன்.

இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் குடலில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. ரத்தக் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நிலைமை மோசமாகவே 10 நாட்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 7 மணியளவில் மரணமடைந்தார்.

மோகன் இறந்த தகவலைக் கேட்டதும், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தி விட்டுத் திரும்பியபோது, அங்கிருந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் வரதராஜனிடம் துக்கம் விசாரித்தார்.

மோகனின் உடல் நேற்று இரவே மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று எல்லீஸ் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உடல் வைக்கப்படும். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் மாலை 5 மணிக்கு தத்தனேரி மயானத்திற்குக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

மக்களின் எம்.பி..

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிறந்தவர் மோகன். அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ படித்தார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மதுரை லோக்சபா தொகுதியிலிருந்து 1999 மற்றும் 2004 ஆகிய தேர்தலில் அடுத்தடுத்து வெற்றி பெற்றார்.

மதுரை மக்களின் அன்பைப் பெற்றவர். சர்ச்சையில் சிக்காதவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் என்ற பெயரெடுத்தவர். யாரையும் கடுமையாக பேசாதவர். அமைதியாக செயல்பட்டவர்.

கருணாநிதி இரங்கல்

மோகன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

தோழர் மோகனின் மறைவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு மாபெரும் இழப்பு. என்னைப் பொருத்தவரையில், ஒரு சிறந்த நண்பரை இழந்துவிட்ட அந்த உணர்வோடு இந்த நிகழ்வை எண்ணிப் பார்க்கிறேன்.

அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோழர் என்றாலும்கூட, என்னிடத்திலே மிகுந்த மதிப்பும், அன்பும் கொண்டவர்.

ஆளுங்கட்சியாக தி.மு.க. இருக்கிற காரணத்தினால் ஒவ்வொரு வாரமும் தொலைபேசி மூலமாக என்னிடம் தொடர்பு கொண்டு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியிலே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருப்பார். தொகுதி மக்களுக்காக அரும்பாடு பட்டவர்.

தொழிலாள தோழர்களுக்காக துணை நின்றவர். அவர்களுக்காக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு குறிப்பாக, மதுரை மாவட்டத்திற்கு அவரது மறைவு, ஒரு மாபெரும் இழப்பு.

என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய மகனுக்கும், அந்த கட்சியின் முன்னணி தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

வரதராஜன் இரங்கல்..

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் விடுத்துள்ள செய்தியில்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை தொகுதி முன்னாள் எம்.பி.யுமான பி.மோகன் மரணத்திற்கு கட்சியின் மாநில குழு செங்கொடி தாழ்த்தி துயர அஞ்சலியை செலுத்துகிறது.

மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்ட மோகன், கட்சியின் மதுரை நகர குழுவின் செயலாளராகவும், பின்னர் மாவட்டக் குழுவின் செயலாளர் பொறுப்பை ஏற்றும் சிறப்பாக செயல்பட்டவர்.

1999-ம் ஆண்டு மதுரை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற பி.மோகன், மீண்டும் 2004 தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் தமிழக மக்கள் பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர்.

தனது எளிமையான வாழ்க்கைமுறை காரணமாக மக்களின் நேசத்திற்குரிய தலைவராகப் பரிணமித்தவர். 2009 பாராளுமன்ற தேர்தல் காலத்தில் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட நேரத்திலேயே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற நேரிட்டது.

அதைத் தொடர்ந்தும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஒரு மாத காலமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று மாலை 6.30 மணியளவில் மரணமடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவருக்கு வயது 60. அவரது மரணம் கட்சிக்கும், ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி பூங்காவனத்திற்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

3 நாள் துக்கம்...

முன்னாள் எம்.பி. மோகனின் மறைவுக்கு தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X