For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை - வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மழை பாதித்த பகுதிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் இடைவிடாமல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. நகரெங்கும் வெள்ளக்காடாகியுள்ளது.

சென்னை நகரமே கிட்டத்தட்ட மிதக்கும் நிலையில் உள்ளது. பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்துத பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார்.

சூளை அவதான பாப்பையா சாலைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு கூடுதலாக மோட்டார் வைத்து தண்ணீரை அகற்ற உத்தரவிட்டார்.

பின்னர் மாம்பலம் கால்வாயில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்தார். தியாகராயநகர் ஜி.என். செட்டி ரோடு, அபிபுல்லா சாலை, ஆகிய இடங்களிலும் வெள்ளம் தேங்கி இருந்ததை பார்வையிட்டு அவற்றை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அயோத்தியா குப்பத்தில் மாநகராட்சி சார்பில் மழைக் கால சிறப்பு மருத்துவ முகாமை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிகிச்சை அளிப்பதையும் அவர் பார்வையிட்டார். மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விரைந்து செயல் பட்டு மழைநீர் தேக்கத்தை வெளியேற்றவும் உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 40 செ.மீட்டராக இருந்த மழை அளவு, தற்போது 30 செ.மீட்டர் அளவில்தான் உள்ளது.

மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 3 ஆண்டுகளில் 149.58 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ. 81 கோடியே 76 லட்சம் செலவில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டியுள்ளது. அதே போன்று 996 கி.மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

இதனால் தென்சென்னை பகுதிகளான தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலை, சாந்தோம், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் தரமணி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்குவது கடந்த ஆண்டுகளை காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது.

வட சென்னை பகுதியில் வியாசார்பாடி -கணேஷ்புரம், புளியந்தோப்பு, ஓட்டேரி இடங்களிலும், சுரங்கப்பாதைகளிலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கத்தை மோட்டர் பம்புகள் மூலம் வெளியேற்றம் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது.

தற்போது வரை முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கும் நிலை உருவாகவில்லை. இருப்பினும் மாநகராட்சி முகாம்களில் பொது மக்கள் தங்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான உணவு வழங்க தயார் நிலையில் மாநகராட்சி உள்ளது.

சென்னையில் 10 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோயினை தடுப்பதற்கு சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

துணை முதல்வருடன் மாநகர மேயர் மா.சுப்ரமணியமும் உடன் சென்றார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு..

முன்னதாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தற்பொழுது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவ மழையினால் மாநிலம் முழுவதும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழை மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தடுத்திட, அரசின் பல துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த உயர் மட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6-11-2009 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர், மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

இது போன்ற காலங்களில் களப்பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய துறைகளான வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகள் மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும்.

குறிப்பாக, வருவாய்த்துறையின் சார்பில், மழையினால் ஏற்படும் சேத விவரங்களை உடனுக்குடன் தெரிவிப்பதோடு, தொடர்புடைய மாவட்ட கலெக்டர்கள் மாவட்டங்களில் பிற துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து வித நிலைமையையும் எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டும்.

மனித உயிரிழப்பு, கால்நடை இழப்பு மற்றும் இதர சேதங்களை உடனுக்குடன் கண்டறிந்து தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி உடன் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை மாநகராட்சியிலும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆறுகள், ஏரிகள், குளங்கள், பாசனக் கால்வாய்கள் போன்ற நீராதாரங்கள் உடைப்பெடுக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதோடு, அவை நிரம்புவதற்கு முன்பாகவே நீரின் அளவு, மழையின் அளவினை கணக்கிட்டு, வெள்ள நீர் வடிவதற்கான உரிய ஏற்பாடுகளை உடனுக்குடன் பொதுப்பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள...

மேலும், பொதுமக்களும் தாமாக முன்வந்து நீராதாரங்கள் உடைந்து சேதம் ஏற்படுவதை தவிர்த்திட விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அனைத்து துறையினரும் வெள்ள நிவாரணப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதோடு, தொற்று நோய்கள் பரவாத வண்ணம் குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றை பராமரிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

1077-ஐ தொடர்பு கொள்ளலாம்..

இதற்கிடையே, மழை இடர்பாடுகள் குறித்த தகவல்களை அளிக்கவும், பெறவும் 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்பு கொண்டால் அந்தந்த மாவட்ட நிலவரம் குறித்துத் தெரிந்து கொள்ள முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X