For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரதட்சணையில் கெடுபிடி - மிரட்டிய மாப்பிள்ளைகள் - உதறித் தள்ளிய புரட்சிப் பெண்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வரதட்சணையை முழுசாக கொடுத்தால் தாலி கட்டுவோம் என மிரட்டிய இரு மாப்பிள்ளைகளை அவர்கள் கல்யாணம் செய்யவிருந்த பெண்கள் நிராகரித்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் ஒரு பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் நடந்தது. இன்னொரு பெண் கண்ணீருடன் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஆந்திராவில் நெல்லூர் அருகே இந்துபூர்பேட்டையை சேர்ந்த உக்கால கிருஷ்ணய்யா-வெங்கடம்மா ஆகியோரின் மகள் சந்தோஷ் குமாரி (24). பி.எஸ்.சி. பி.எட் பட்டதாரியான இவர், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவருக்கும், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மால கொண்டய்யாவின் மகன் மாலயாத்திரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மாலயாத்திரி மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார்.

வரதட்சணை ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணமும், 7 சவரன் நகை என பேசப்பட்டது. சென்னை பெரம்பூர் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு ரூ.1 லட்சம் பணத்தை மாப்பிள்ளையிடம் கொடுத்து மீதிப்பணத்தை தாலி கட்டும் நேரத்தில் தருவதாக பெண் வீட்டார் கூறினர்.

நேற்று காலை முகூர்த்த நேரம் வரை வரதட்சணை பாக்கி வராததால், 'மணமகன் கோபித்துக்கொண்டு சென்று விட்டார். திருமணம் நடக்காது' என்று மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர்.

இதனால் இருதரப்பிற்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பும் நடந்து விவகாரம் போலீஸ் வரை போய்விட்டது. இந்த நிலையில், தலைமறைவான மாப்பிள்ளை மாலயாத்திரி, போலீஸ் நிலையத்திற்கு வந்து மணமகளிடம், வரதட்சணை வேண்டாம், நாம் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து கல்யாணத்திற்கு மீண்டும் அனைவரும் தயாரானார்கள். ஆனால் சந்தோஷ்குமாரி, மாலயாத்திரியை நிராகரித்து விட்டார். இப்போதே இப்படி என்றால் நாளை கொலை செய்யக் கூட நீங்கள் தயங்க மாட்டீர்கள் என்று முகத்தில் அடித்தார் போல மாலயாத்திரியிடம் கூறி விட்டார் சந்தோஷ்குமாரி.

இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் மாலயாத்திரி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

புதுச்சேரியில்...

புதுச்சேரியிலும் இதேபோன்ற சம்பவம் நேற்று நடைபெற்றது. ஆந்திர மாப்பிள்ளையைப் போல இந்த புதுச்சேரி் மாப்பிள்ளை தலைமறைவாகவில்லை. முகூர்த்த நேரத்தில் மண்டபத்தின் நடுவில் 'தில்'லாக நின்று, 'பல்சர் பைக் கொடுத்தால் தான் தாலி கட்டுவேன்' என மிரட்டினார்.

ஊர் பெரியவர்கள் எல்லாம் வந்து பஞ்சாயத்து செய்தும் மாப்பிள்ளை மசியவில்லை. இதையடுத்து அந்த மாப்பிள்ளையை உதறித் தள்ளினார் மணப்பெண் தவமணி.

மணமகள் தவமணிக்கு சொந்த ஊர் விழுப்புரம் அடுத்த வானூர் திருவக்கரை. இவரின் தந்தை தனசேகர் கவுண்டர் வானூர் அருகேயுள்ள கோரைக்கேணியை சேர்ந்த மலையாளத்தான் மகன் வெங்கடேசன் (25) என்பரை தவமணிக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருந்தார்.

புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவரும் வெங்கடேனுக்கு முகூர்த்த நேரத்திலேயே மாப்பிள்ளை முறுக்கு தலைக்கேறி அவமானப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை பெண் அழைப்பு நிகழ்ச்சி வரை எல்லாம் சுமுகமாகவே இருந்துள்ளது. முகூர்த்த நேரம் முடிய 10 நிமிடம் இருக்கும் போது வெங்கடேசன் திருமண மண்டபத்துக்குள் 'சிங்க நடை' போட்டபடி வந்து நின்று, டிவி, வாஷிங்மெஷின், மிக்சி, பிரிட்ஜ், பல்சர் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சீர்வரிசையாக கொடுத்தால் தான் பிரியா கழுத்தில் தாலி கட்டுவேன் என்று முரண்டு பிடித்தார்.

கேட்ட பொருட்களை வாங்கித்தர ஊர் பெரியவர்கள் வாக்குறுதி தந்ததால், ஒருகட்டத்தில் தாலிகட்ட தயாரானார். முகூர்த்த நேரத்தில் களேபரமாகி கண்ணீர் சிந்த மணவறையில் அமர்ந்திருந்த தவமணி, இந்த மாப்பிள்ளை வேண்டாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

தவமணி தரப்பு நியாயத்தை புரிந்துகொண்ட அங்கிருந்த பெரியவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு, தவமணியின் அத்தை மகனான திண்டிவனம் பேரடிக்குப்பத்தை சேர்ந்த விஜயகுமாரை திடீர் மாப்பிள்ளையாக்கி விட்டனர்.

மண்டபத்தின் அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் விஜயகுமார்-தவமணி திருமணம் இருவரின் சம்மதத்துடன் நடந்தது.

அவமானத்தில் கூனிக் குறுகிப் போன வெங்கடேசன், நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி ஓசி சவாரியாக அங்கிருந்து அகன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X