For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன மழை- நாகை மாவட்டம் பெரும் பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Heavy rain reported in many areas of Tamilnadu
சென்னை: மீண்டும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்திருப்பதால் மழை மேலும் வலுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று முன்தினம் முதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள டெல்டா பகுதிகள் முழுவதும் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணி முதல் கன மழை தொடங்கியது. இந்த மழை இன்று வரை நீடித்து வருகின்றது.

50,000 பேருக்கு வேலை பாதிப்பு...

தொடர் மழையாலும், கடல் சீற்றத்தாலும் கடந்த மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால், மீன்பிடித் தொழிலின் சார்பு தொழிலான ந்த டீசல் விற்பனை, ஐஸ்பேக்டரி, மீன் ஏற்றுமதி, மீன் விற்பனை போன்ற தொழில்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 10 கோடி ரூபாய்-க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், நாகை மற்றும் வேதாரண்யம், கோடியக்கரைப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் நீரில் மிதக்கின்றன. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். விவசாயிகளும் கவலையில் உள்ளனர்.

இந்த கன மழையால் பொது மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கன மழை...

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. திருவாரூரில் அதிக பட்சமாக 75 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நேற்று முன்தினம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டியது. அதே போல நேற்றும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகலில் அவ்வப்போது லேசான தூறல் காணப்பட்டது. இருப்பினும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

பலத்த மழைக்கான வாய்ப்புகள் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருச்சியில் பலத்த மழை...

திருச்சியில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீர் என இடி மின்னலுடன் பலத்த மழை கொட்ட தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

அய்யப்பன் கோவில், வெஸ்ட்ரி ரவுண்டானா ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அடைப்பு காரணமாக தண்ணீர் சாலையில் தேங்கி நின்றது.

பாபநாசம் அணை நிரம்பியது...

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வேகமாக உயர்ந்தது.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 139.15 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி இருந்ததால் நீர்மட்டம் நள்ளிரவில் 141 அடியை தாண்டியது.

அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதற்கிடையே அணையின் கீழ் பகுதியிலும், விக்கிரமசிங்கபுரம், அம்பை சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 107.40 அடியாக இருந்தது. தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 118 அடியாகும்.

நெல்லை நகரில் நேற்று அதிகாலையில் லேசான மழை பெய்தது. காலை 9 மணிக்கு பலத்த மழை பெய்தது. பகலில் வெயில் அடித்தது. பின்னர் விட்டு, விட்டு தூறல் மழை பெய்தது.

குற்றாலத்தில் குளிக்கத் தடை...

குற்றாலம் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது. நேற்றும் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகரித்தது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

தூத்துக்குடியில் நேற்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 120 மில்லி மீட்டர் மழை பெய்தது.

திருச்செந்தூர் பகுதியில் நேற்று அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரை விட்டு, விட்டு மழை பெய்தது. பின்னர் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. லேசான வெயில் அடித்தது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X