For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமரசம் பேச வந்த கலெக்டர் சத்தியாகிரகத்தில் குதித்தார்!

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்: இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சரி செய்து, அவர்களை சமாதானப்படுத்துவதற்காக வந்த விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிஜி தாமஸ் வைத்யன் திடீரென சத்தியாகிரகப் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் அவர்களில் ஒரு தரப்பினர் கிராமத்தை விட்டு வெளியேறி காரியாபட்டியில் தங்கினர். தங்களுக்குக் கிராமத்தில் பாதுகாப்பில்லை எனக் கூறி வந்தனர்.

அப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வைத்யனை சந்தித்து சமரச முயற்சி மேற்கொண்டால் அதை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினர்.

இதைத் தொடர்ந்து, ஆட்சித் தலைவர் வைத்யன், மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தியுடன் வேப்பங்குளம் கிராமத்துக்கு சென்றார். அங்கு இரு பிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆட்சித் தலைவரின் அறிவுரையைக் கேட்ட இரு தரப்பினரும் இணக்கமாக, ஒற்றுமையாக வாழ்வதாக உறுதியளித்தனர்.

அந்த சமயம் பார்த்து, மனோகரன் என்பவர் அப்படியெல்லாம் வாழ முடியாது என்று கூறி சத்தம் போட்டார். அதிர்ச்சி அடைந்த ஆட்சித் தலைவர், அந்த நபரைப் பிடித்துக் கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். ஆனால் மனோகரன் ஓடி விட்டார்.

இதையடுத்து மனோகரனைப் பிடித்து வவக்குப் பதிவு செய்ய வேண்டும். அதுவரை நான் கிராமத்தை விட்டுப் போக மாட்டேன் என்று கூறி சத்தியாகிரகத்தில் குதித்தார். அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த வேப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலேயே அமர்ந்திருந்தார். அவரிடம் அங்கிருந்த அதிகாரிகள் எப்படியும் அவரை பிடித்து விடுவோம். எனவே சத்தியாகிரகத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் மனோகரனை பிடித்து வழக்குப்பதிவு செய்தால் தான் கிராமத்தை விட்டு புறப்பட்டுச் செல்வேன் என கூறி அங்கேயே அமர்ந்திருந்தார் வைத்யன். கிட்டத்தட்ட 6 மணி நேரம் இந்த சத்தியாகிரகம் நீடித்தது.

அவரை மனோகரன் தரப்பினர் சமாதானப்படுத்த முயன்றனர். காலையில் பிடித்துக் கொண்டு வந்து ஒப்படைத்து விடுவதாக கூறினர். ஆனாலும் கலெக்டர் ஏற்கவில்லை. பிடித்து வந்தால்தான் நகருவேன் என்று தீர்மானமாக கூறி விட்டார்.

இதையடுத்து போலீஸார் காரியாபட்டி முழுவதும் வலை வீசி மனோகரனை ஒரு வழியாகப் பிடித்தனர். அதையடுத்து கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சமரசம் பேச வந்த கலெக்டரே, பிரச்சினைக்குரிய நபரைப் பிடிக்கக் கோரி போராட்டத்தில் குதித்ததால் காரியாபட்டியில் பரபரப்பு ஏற்பட்டது

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X