For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடக்காததை ஒளிபரப்பிய ஜியார்ஜியா டிவி - நாடுமுழுவதும் கொந்தளிப்பு!

By Staff
Google Oneindia Tamil News

Georgia Russia Tanks
திபிலிசி: ரஷ்யப் படைகள் நாட்டை கைப்பற்றி விட்டதாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் நிஜமான செய்தியைப் போல ஒளிபரப்பப்பட்டதால் ஜியார்ஜியா நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான ஜியார்ஜியாவில் ரஷ்யாவுக்கு எதிரான மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான கருத்துக்கள் பரவலாக காணப்படுகின்றன.

ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டங்களை இணைக்கும் புவியமைப்பில் உள்ள ஜியார்ஜியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வருகிறது.

ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிலர் ரஷ்யாவுடன் ஜியார்ஜியாவை மீண்டும் இணைத்துக் கொள்வது தொடர்பாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவுடன் கைகோர்த்தால், ஜியார்ஜியாவுக்கு என்ன நேரும் என்பதை விளக்குவதற்காக, 'ஜியார்ஜியாவை ரஷ்யப் படைகள் ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்றிவிட்டன' என நடக்காத நிகழ்வை செய்தியாக 'இமெடி' என்ற தொலைக்காட்சிச் சேனல் வெளியிட்டது.

கடந்த 2008ம் ஆண்டு ரஷ்யப் படைகளுக்கும் ஜியார்ஜிய படைகளுக்கு இடையே நடந்த போரின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை தத்ரூபமாக தற்போது நடப்பது போன்று சித்தரித்து காட்சிகளையும், செய்தியையும் பரபரப்பாக ஒளிபரப்பியது.

அதன் உச்சக்கட்டமாக, ஜியார்ஜியா அதிபர் மிக்கெய்ல் சாகாஷ்வில்லி இறந்து போய்விட்டார் என்றும் அந்த செய்தி அறிக்கை வாசிக்கப்பட்டது.

இதைப் பார்த்து பதைபதைத்துப் போன பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். தலைநகர் திபிலிஸியில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவது போன்று காட்டப்பட்ட காட்சிகளால் அதிர்ச்சி அடைந்த பலர் தங்கள் உறவினர் மற்றும் அவசர உதவிகள் கோரி நாடு முழுவதும் தொலைபேசி அழைப்புகள் பறந்தன.

பின்னர் அந்த செய்தி வெறும் சித்தரிப்பு தான் என விளக்கப்பட்டதும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பரபரப்பு அடங்கியது.

சனிக்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்ட இந்த களேபரத்தில் பலர் திடீர் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தனியார் தொலைக்காட்சி ரஷ்யப் படைகளுடன் கைகோர்த்தால் ஜியார்ஜியாவுக்கு என்ன நேரும் என்பதை தத்ரூபமாக விளக்க முயன்றதாக தெரிவித்துள்ளது.

சினிமா தியேட்டர்களில் சென்சார் சான்றிதழை கடமைக்கு சில வினாடிகள் போடுவதைப் போல, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் முன்பு கடமைக்காக 'இது ஒரு யூகம்' என்று தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், அதை கவனிக்காத பெரும்பாலான பார்வையாளர்கள் செய்தியை உண்மையென்று நம்பி மனரீதியாக பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

இமெடி என்ற அந்த தனியார் தொலைக்காட்சி அதிபர் மிக்கெல் சாகாஷ்வில்லிக்கு ஆதரவானதாக கருதப்படுவது. அதிபரின் தலையசைப்புடன் தான் இந்த வேலை நடந்திருக்கும் என்று தெரிகிறது.

எனவே, இதுகுறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X