For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேதன் தேசாயிடம் ரூ 1800 கோடி ரொக்கம், 1500 கிலோ தங்கம்! - ஊழலில் புது ரெக்கார்ட்!

Google Oneindia Tamil News

Ketan Desai
டெல்லி: ரூ 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் ரூ.1,800 கோடி ரொக்க பணம், 1500 கிலோ தங்க நகைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கேதான் தேசாய், கோடி கோடியாக லஞ்சப்பணம் குவித்த விவகாரம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றபோது டாக்டர் கேதான் தேசாய் கையும், களவுமாக பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவ கவுன்சில் செயலாளர் மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் இருவரும் கைதானார்கள்.

கேதான் தேசாய் கைதானவுடன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.212 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டெல்லி மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 6 இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது.

பெட்டி பெட்டியாக...

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கேதான் தேசாயை, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்காக 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்துக்கொள்ள அனுமதி பெற்றனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் கேதான் தேசாயிடம் சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில், டெல்லி மற்றும் ஆமதாபாத்தில் உள்ள தேசாயின் வீடுகள் மற்றும் லாக்கர்களில் மூட்டை, மூட்டையாக வைக்கப்பட்டு இருந்த லஞ்சப்பணம் மற்றும் பெட்டி, பெட்டியாக தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

1,500 கிலோ தங்க நகைகள்

கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணத்தின் மதிப்பு மட்டும் 1,801 கோடியே 50 லட்சம் ஆகும். மேலும் 11/2 டன், அதாவது 1500 கிலோ எடையுள்ள (1 லட்சத்து 87 ஆயிரத்து 500 பவுன்) தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தங்க நகைகளின் மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.225 கோடி. வங்கி மற்றும் தபால் துறை அதிகாரிகள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டு, நகைகள் சரிபார்க்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் ரூ.2,500 கோடி...

மேற்கொண்டு சோதனை நடத்துவதற்காக, கேதான் தேசாய், இன்று ஆமதாபாத் அழைத்துச் செல்லப்படுகிறார். இதுவரை அவர் வெளியிட்ட தகவலின்படி, தேசாயிடம் இருந்து கைப்பற்றப்பட இருக்கும் லஞ்சப்பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2,500 கோடியாக உயரும் என்று, விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணையின்போது தேசாய் முதலில் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தார். பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய அதிகார மையத்தில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். ஆனால், தங்கள் பாணியில் முறைப்படி அதிகாரிகள் விசாரிக்கத்தொடங்கியதும் அவர் உண்மைகளை கக்கி விட்டார்.

அதிகாரிகள் நடத்திய கடும் விசாரணையின்போது, லஞ்சப் பணத்தை மறைத்து வைத்திருக்கும் இடங்கள் பற்றி முரணான தகவல்களை அவர் தெரிவித்தார். அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறினார்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து, மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, சில ஆவணங்களை மோசடியாக திருத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சில கல்லூரிகளுக்கு, காலக்கெடு முடிவடைந்த பின்னரும் ரூ.30 கோடி வரை பெற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக பல கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பதால், ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்ட அனைத்து மருத்துவ கல்லூரிகள் தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்களை மறு ஆய்வு செய்யவும் சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

கல்லூரிகளில் ஆய்வு செய்வதற்காக மாலதி மெக்ரா, சுரேஷ் ஷா உள்ளிட்ட 20 பேர்களை தனது ஏஜெண்டாக தேசாய் நியமித்து இருந்தார். அவர்கள்தான் லஞ்சப் பணத்தை நிர்ணயம் செய்து வசூலிக்கும் பொறுப்பை ஏற்று இருந்தனர்.

தமிழ்நாட்டில் 3 கல்லூரிகள்

தமிழ்நாட்டில் அங்கீகாரத்திற்காக காத்து இருக்கும் 3 மருத்துவ கல்லூரிகளில் இந்த ஏஜெண்டுகள் சமீபத்தில் ஆய்வு நடத்திய தகவலும் வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டு கல்லூரி நிர்வாகிகள் லஞ்சப்பணத்தை கொடுத்து இருக்கலாம் அல்லது கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு கல்லூரியில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருந்ததால், பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த கல்லூரியின் தலைவரை, டாக்டர் கேதான் தேசாயை சந்திக்கும்படி அந்த ஏஜெண்டுகள் கூறியதும் தெரிய வந்துள்ளது.

உத்தரவில் சந்தேகம்

அங்கீகாரத்துக்கு கல்லூரி ஒன்றுக்கு ரூ.30 கோடி வரை லஞ்சம் வாங்கிய கேதான், நாட்டில் உள்ள 200 சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து தலா 5 இடங்களை (சீட்) ஒதுக்கீடாக பெற்று, அவற்றை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தும் பணம் குவித்துள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் என்ற முறையில் தேசாய் சமீபத்தில் இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.

மருந்து கம்பெனிகளிடம் இருந்து டாக்டர்கள் அன்பளிப்பு பெறக் கூடாது மற்றும் கிராமப்புற டாக்டர்களுக்காக 3 ஆண்டு மருத்துவ படிப்பு ஆகியவைதான் அந்த உத்தரவுகளாகும். கிராம டாக்டர்கள் படிப்புக்காக ஏராளமான சுயநிதி மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படலாம் என்பதால் அதன் மூலமும் கோடிகளை குவிக்க அவர் திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிரபலமான மருந்து கம்பெனிகளிடம் லாபத்தில் 20 சதவீத பங்கை லஞ்சமாக தரவேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர்கள் சம்மதிக்காததால்தான் டாக்டர்கள் அன்பளிப்பு பெறக் கூடாது என்ற உத்தரவை அவர் பிறப்பித்ததாகவும் விசாரணையின்போது அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே இந்த இரு உத்தரவுகள் குறித்தும் சிபிஐ முழுமையாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த லஞ்ச விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் துணை தலைவர் கேசவன்குட்டி நாயர் உள்பட மேலும் சில முக்கிய புள்ளிகளும் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாகவும், அவர்களும் விரைவில் கைதாகலாம் என்றும் சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவித்தன.

மசாஜ் கிளப்...

டெல்லியில் இந்திய மருத்துவ கவுன்சில் அலுவலக கட்டிடத்தின் 2-வது தளத்தில் மசாஜ் கிளப்புகள் செயல்பட்டு வந்தன. டாக்டர் கேதான் தேசாய் கைதான தகவல் வெளியானதும் அந்த கிளப்புகள் மாயமாய் மறைந்துவிட்டன

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X