எம்.பி.பி.எஸ். சேர்க்கை: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கட்-ஆஃப் 194.75

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய கட்-ஆஃப் மதிப்பெண் 195.75 முதல் 194.75 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்புரம், திருவாரூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
அதே போல சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை திருவேற்காட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்தக் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு தலா 97 (65 சதவீதம்) எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.
இதனால் கட்-ஆஃப் மதிப்பெண் 197.75லிருந்து 197.50ஆகக் குறைகிறது.
சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகள், செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை மற்றும் விழுப்புரம், திருவாரூர் கல்லூரிகளையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தமுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
மாணவர் சேர்க்கைக்கு விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பொதுப் பிரிவினருக்கான 31 சதவீத இடங்கள் 460லிருந்து 512ஆக அதிகரித்துள்ளன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான 26.5 சதவீத இடங்கள் 393லிருந்து 439ஆக அதிகரித்துள்ளன.
பொதுப் பிரிவினருக்கான மொத்த இடங்கள் 512 ஆக அதிகரித்துள்ளதால் அவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு 200க்கு 197.5ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் 200க்கு 195.75 ஆகவும்,
பிற்படுத்தப்பட்ட (இஸ்லாமிய) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் 194.75 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் 193.5 ஆகவும் இருந்தது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் 189.25 ஆகவும், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பைச் சேர்ந்தோருக்கு கட்-ஆஃப் 181.5 ஆகவும், பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு கட்-ஆஃப் 178.75 ஆகவும் இருந்தது.
பொதுப் பிரிவினருக்கான இடங்களில் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் இடம்பெறுவது வழக்கம்.
மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என தனியாக 26.5 சதவீத இடங்கள், அதாவது மொத்தம் 439 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய கட்-ஆஃப் மதிப்பெண் 195.75 முதல் 194.75 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பழைய பிளஸ் 2 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் விண்ணப்ப வினியோகம்:
இந் நிலையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க இன்று முதல் விண்ணப்பம்
வழங்கப்படுகின்றன.
சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி,தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி, புதிதாகத் திறக்கப்பட உள்ள விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகின்றன.
மொத்தம் 20,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.
ரூ.500க்கு டி.டி. அளித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆதிதிராவிட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்ப வினியோகம் மே 31ம் தேதி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசி நாள் மே 31ம் தேதியாகும்.
வரும் ஜூன் 11ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 21ம் தேதி தொடங்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி ரத்து:
இந் நிலையில் மதுராந்தகம் அருகே கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.
இந்தக் கல்லூரியிலிருந்து கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தன. இப்போது இந்த மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
இந் நிலையில் இந்தக் கல்லூரியில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி நடப்புக் கல்வியாண்டில் புதிதாக மாணவர்களைச் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இப்போது எம்.பி.பி.எஸ். படித்து வரும் மாணவர்கள் படிப்பைத் தொடர்வதில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications