For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாற்று திறனாளி மாணவர்களுக்கு தனிக் கட்டணம் ரத்து: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில வசூலிக்கப்படும் தனிக் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி பயிலுவதற்கு ஏதுவாக அவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டிலிருந்து தனிக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

மேலும், மாநில அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர்கள் பெற்றிட வருவாய் உச்சவரம்பும் முற்றிலும் நீக்கப்படுகிறது.

அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனிக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

நலத் திட்ட உதவிகளைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இதனால் மொத்தம் 22,685 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுவர். இந்த உத்தரவு காரணமாக, ஆண்டுக்கு ரூ.7.71 கோடி கூடுதல் செலவாகும் என்று கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு 48 வகையான நலத் திட்ட உதவிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடும் அளுக்கிறது.

எம்.பி.பி.எஸ். மாற்றுத் திறனாளிகள் ரேங்க் பட்டியல்:
இதற்கிடையே எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு்ள்ளது.

எம்.பி.பி.எஸ். மொத்த இடங்களில் 3 சதவீத இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதன்மூலம் மொத்தம் 42 எம்.பி.பி.எஸ். இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் மொத்தம் 78 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 51 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கட்-ஆப் மதிப்பெண் 193.5ல் தொடங்கி, 105.50 வரை பெற்றுள்ள மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் 24 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், 3 பேர் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பையும், 12 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், 9 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பையும், 3 பேர் தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களது ரேங்க் பட்டியல் www.tnhealth.org மற்றும் www.tn.gov.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.

தசை சிதைவு நோய்-பயிற்சி மையங்களுக்கு ரூ.49 லட்சம்:

தமிழக அரசு வெளியிட்டுள்ள இன்னொரு செய்திக் குறிப்பில்,
இந்தியாவிலேயே முதன்முறையாக 2008-09ம் ஆண்டு முதல் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் பராமரிப்பு உதவித் தொகை அஞ்சல் பணவிடை மூலமாக அவர்களின் இல்லங்களுக்கே அனுப்ப முதல்வர் கருணாநிதி ஆணையிட்டார்.

தசைச் சிதைவு நோய் தாக்கப்பட்ட அனுராதா என்பவர், 15.2.2010 அன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க அரசு சார்பில் விடுதியோ, மருத்துவமனையோ தொடங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

அதை முதல்வர் கனிவுடன் பரிசீலிப்பதாக தெரிவித்தார். அதன்படி மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான தசைப் பயிற்சி அளிக்கவும், ஆலோசனை வழங்கவும், பகல் நேர பராமரிப்பு மையங்களை முதல் கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த மாவட்டங்களில் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்க ஒரு மையத்திற்கு ரூ.8.16 லட்சம் வீதம் 6 மையங்களுக்கு ரூ.48.96 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

ஒப்பளிக்கப்பட்டுள்ள மொத்த தொகையில் தசைப் பயிற்சியாளர், பாதுகாவலர் ஆகியோருக்கு ஊதியமாகவும், வாடகை, மின்சாரம், மருத்துவம் எதிர்பாரா செலவினம் மற்றும் உள்ளுறைவாளர்களின் பயணச் செலவு ஆகியவை அடங்கும். மேலும் ஒவ்வொரு மையத்திற்கும் தசைப் பயிற்சி உபகரணங்கள் ரூ. 2 லட்சம் அளவில் வழங்கப்படும்.

சிறப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பகல் நேர பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தனியே வாகனம் வைத்து வீட்டிலிருந்து அழைத்து வருவதல் மற்றும் அவர்களை வீட்டிலேயே கொண்டு விடுதல் ஆகிய பணிகளை இம்மையங்கள் மேற்கொள்ளும். மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சரியான தொண்டு நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X