For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கருணாநிதி போர்க் குற்றவாளி'-ஐ.நாவிடம் புகார் தரப் போகிறதாம் அதிமுக.!

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முதல்வர் கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை:

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை தலைவரின் இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழைவிசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்சே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக் கூடாது.

பான் கி மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால், இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்சேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் முதல்வரை நம்பினார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் நம்பினார்கள். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் முதல்வரின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும் என சர்வதேச சட்டம் கூறுகிறது.

போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் முதல்வர்.

ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான்.

எனவே, இலங்கைக்கு ஐ.நா. குழுவினர் வரும்போது அதிமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி கருணாநிதி குறித்து புகார் தரப்படும். கருணாநிதி போர்க்குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X