For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்மாவட்டங்களை இன்றும் ஆட்டிப்படைக்கும் நாட்டாண்மை தீ்ர்ப்புகள்

Google Oneindia Tamil News

Nattamai culture still rules southern districts
- கே.எம்.கே.இசக்கிராஜன்

தேசம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து மாறி ஜனாநாயக கட்டமைப்புகளுக்கு வந்து 60 ஆண்டுகளை தாண்டி கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விஞ்ஞான வளர்ச்சி என மனிதன பல்வேறு புதிய பாதைகளை நோக்கி புத்துணர்ச்சியோடு பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தாலும் இன்றும் இத்தேசத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நாட்டாண்மை தனம் குறைந்தபாடில்லை.

சொம்பு, வெள்ளைத் துண்டு, வாயில் வெற்றிலை குதப்பல், எகத்தாளப் பேச்சு, கனல் கக்கும் பார்வை சகிதம் ஆலமரத்தடியின் கீழோ, ஊர் பொது இடத்தில் உட்கார்நதோ, கோவில் வளாகத்திலோ உட்கார்ந்து, இவர்களாக ஒரு தீர்ப்பெழுதி அதை உத்தரவாக்கி, நிறைவேற்றாதவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் சண்டித்தனம் இன்றும் இருந்து கொண்டுதான் உள்ளது.

காவல்துறை, நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை சட்டம் என்று எத்தனை சட்டங்கள் வந்தாலும் பழசுகளின் முறுக்கு மீசை தீர்ப்புகள் இன்றும் நம் தமிழக கிராமங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நாட்டாமை தீர்ப்புகள் படிக்காத பாமரன் முதல் படித்து பட்டம் பெற்று உயர்ந்த அந்தஸ்தில் உள்ள அரசு பதவிகளில் இருப்பவர்களையும் ஆட்டி படைக்கிறது. இதே ஸ்டைலில்தான் கந்து வட்டி சம்பவங்களும், அதனால் ஏற்படும் கற்பழிப்பு சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தின் சில வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் நாட்டாண்மை தீர்ப்புகள், நடமாட முடியாத ஊரடங்கு சட்ட உத்திரவுகள் போல் உள்ளூர் கிராமங்களில் பல்வேறு தண்டனைகளும், கட்டுபாடுகளும் கலியுகத்திலும் கண்முன்னே நடந்து வருகின்றன.

மெஜாரி்ட்டியான சமூக மக்கள் வசிக்கும் பல்வேறு கிராமங்களில் அந்தந்த ஜாதியினம் தங்களது சமுதாய மண்டபங்களில் (சமுதாய மடம்) அல்லது கோயில்களில் வைத்து மாதத்திற்கொரு முறை நல்லது, கெட்டது குறித்து கூட்டம் நடத்துவது, வாடிக்கை. இந்த சமுதாய கூட்டங்கள் பலமுறை கட்டபஞ்சாயத்து கூட்டமாகவும், மாறி வருகிறது.

உதாரணத்திற்கு ஒரே சமூக மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் ஒரே குடும்பத்தினர் பெரும்பான்மையாகவும், சில குடும்பத்தினர் குறைவாகவும் இருக்கும்போது பெரும்பான்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும், அவர்களுக்கு சாதகமாக அங்கு தீர்ப்பு வழங்கப்படும். மேலும் ஊர் சமுதாய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் காவல்துறைக்கு சென்றால் அந்த குடும்பம் அங்கு தனி மரமாக தண்ணீர் கூட குடிக்க தெருக்குழாய் பக்கமோ, கிணற்று பக்கமோ போக முடியாத அளவுக்கும் கொடூரமான தீர்ப்புகள் வழங்கப்படுவதும், இன்றும் தொடர்கிறது.

பொரும்பான்மை சமூக மக்கள் வசிக்கும் கிராமத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த சில குடும்பங்கள் குடியிருந்தால் பெரும்பான்மை சமூக இளைஞர்கள் வேறு சமூக பெண்களிடம் செய்யும் தவறுகளும் கண்டு கொள்ளப்படாமல் அது இருக்கும். ஒருவேளை பாதிக்கப்படுபவர்கள் கோபம் கொண்டு சண்டை சச்சரவுகள் உருவானால் அக்குடும்பம் அனைத்தையும் இழந்து வேறு இடத்திற்கு இடம் பெயரும் நிலையும் இங்கு அரங்கேற்றம் காணுகிறது. இதுபோன்ற நாட்டாண்மை தீர்ப்புகள் சில கிராமங்களில் நியாயமாகவும், பல கிராமங்களில் அநியாயமாகவும் நடந்தேறி வருகின்றன.

ஒரு தலைமை ஆசிரியை சமூகத்திறகு கட்டுப்படவில்லை என்பதால் அவர் பணிபுரியும் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்பாமல் அந்த ஆசிரியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், மாணவர்களின் மாற்று சான்றிதழை ஒட்டு மொத்தமாக வாங்கிய சம்பவமும் நடந்துள்ளது.

இளம்பெண் மொட்டையடிக்கப்பட்ட சம்பவங்களும், தற்கொலையை கூட உடல் நலக்குறைவு மரணமாக மாறியதும், தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவத்தில் காவல்துறையினர் பாதிக்கப்படுவதும் நடக்கிறது. காவல்துறை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடி பிடித்து விசாரித்தாலும் உண்மைகள் கிராமங்களில் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் ஒரு கொலை தற்கொலையாகி எஸ்ஐ ஒருவர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

இதே போல் ஜாதி சமுதாயங்களில் வட்டிக்கு விடும் தொழிலிலும் ஜாரூராக நடக்கிறது. சமுதாய பணத்தை வட்டிக்கு வாங்கிய சமுதாய நபர் அதனைக் கட்டவில்லை என்றால் அவரது வீட்டிலுள்ள பொருட்கள் சமுதாய கூடங்களை அலங்கரித்து விடும் நிலையும் தென் மாவட்டங்களில் அதிகமாக அரங்கேறி வருகிறது.

அரசு சட்ட உதவி முகாம்களும், காவல்துறையும், தகவல் அறியும் உரிமை சட்டம், கிராமங்களை தேடி எந்த சட்டம் வந்தாலும் நம் நாட்டாண்மை தீர்ப்புகளை மீறி எதுவும் எடுபடுவதாக இல்லை. அந்த அளவுக்கு நாட்டாண்மை தீர்ப்பு மக்களிடம் தாக்கத்தையல்ல...நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காத்திருப்போம் சமூக கட்ட பஞ்சாயத்துக்கள் ஓழிக்கப்படும் நாட்களை எண்ணி....

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X