வகுப்புக்கு செல்லாத அரசு கல்லூரி ஆசிரியர்களை பிடிக்க தனிப்படை: உயர்கல்வி மாமன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பாடம் நடத்தாமல் டிமிக்கி கொடுக்கும் ஆசிரியர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மாமன்ற துணை தலைவர் ராமசாமி கூறியதாவது:

அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்தாமல், கல்லூரிக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு தன் சொந்த வேலைகளை கவனிக்க சென்று விடுவதாக நீண்ட காலமாக புகார்கள் வருகிறது.

இந்த பிரச்சனையை தீர்க்க உயர் கல்வி மாமன்றம் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தியது.

அப்போது துணை வேந்தர்கள் தெரிவித்த கருத்து:

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பதிவேடு ஒழுங்கான முறையில் கண்காணிக்கப்படுவதாகவும், அதனால் கையெழுத்திட்டு விட்டு வெளியில் செல்வது பல்கலைக் கழகங்களில் குறைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், ஆசிரியர்கள் பல்கலைக் கழகங்களில் இருந்து கொண்டே வகுப்புக்கு செல்லாமல் இருக்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்தனர். எனவே, இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் அனைத்து அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் திடீர் என்று சோதனை நடத்த தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு வராத, வந்து விட்டு பாடம் நடத்தாத பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் அதிக கட்டணம் வசூலித்ததை கண்டு பிடித்தது போன்று வகுப்புக்கு சென்று பாடம் நடத்தாத ஆசிரியர்களையும் பிடித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

தற்போதைய நிதி அமைச்சர் க.அன்பழகன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த போது வீட்டில் இருந்து கல்லூரிக்கு சைக்கிளில் வருவார். காலை 9 மணிக்கு வரும் அவர் மாலை 5 மணி வரை கல்லூரியில் இருந்து பாடம் நடத்தி விட்டு மாணவர்களின் கட்டுரை புத்தகங்களை எல்லாம் திருத்திய பிறகு தான் கட்சி கூட்டங்களுக்கும், சொந்த பணிகளுக்கும் செல்வார். அப்படிப்பட்ட பேராசிரியர் முன்பு இருந்தார்கள்.

ஆனால் தற்போது பல கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த செல்வது கிடையாது என்று அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...