• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள்-வீரமணி எச்சரிக்கை

By Chakra
|

Veeramani
சென்னை: எளிமையான வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பயோ மெட்ரிக் முறை என்பது காலம் கடத்தும் முயற்சி ஆகும். நாடாளுமன்றத்தில் இதே கருத்தை லாலு, முலாயம் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தியுனர்.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசரமும் அவசியமும் மிகவும் அதிகமாகும்.

எனவே, முதல்வர் கருணாநிதி இதுகுறித்து பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதி, பயோ மெட்ரிக் முறையை தவிர்த்து, கணக்கெடுப்பு படிவத்தில் ஒரு வரி கூடுதலாக சேர்த்து தகவல் திரட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான அம்சம் இடம்பெற்றால்தான், சமூகநீதி இட ஒதுக்கீடு குறிப்பாக மக்கள் தொகையில் மிகப்பெரும் எண்ணிக்கையைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை, துல்லியமாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற கட்சி பேதமின்றி ஒரு குரல் கொடுத்து, கருத்தொற்றுமை ஏற்பட்டதை மத்திய ஆட்சியாளர் ஏற்றுக் கொண்டுள்ளது மிகவும் பாராட்டி நன்றி செலுத்த வேண்டிய ஒன்றாகும்.

கட்சி வேறுபாடின்றி ஜாதிவாரி கணக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெற வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டாலும், இன்னமும் இதுகுறித்து குறுக்குசால் ஓட்டி, கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள் ஓர் அணியாகத் திரளும் பிற்போக்காளர்கள்; இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களாகிய அவர்கள் வசம் சிக்கியுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி முயற்சிக்கின்றனர்.

சமூகநீதிப் போராளிகள் அவர்களை அடையாளம் காணத் தவறக்கூடாது. அத்துடன் அவர்களது சூழ்ச்சியை முறியடிக்கும் வண்ணம் இறுதிவரை விழிப்புடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் மூன்று முட்டுக்கட்டைகள் உள்ளன.

1. அதிகாரிகளான மேல் ஜாதிவர்க்கத்தினர்

2. மேல் ஜாதிவர்க்கத்தினரைக் கொண்ட ஊடகங்கள்-ஏடுகள் தொலைக்காட்சிகள் (டெல்லியில் முக்கிய ஊடகங்களில் 92 சதவீதத்தினர் மேல்ஜாதியினரே பத்திரிக்கையாளர்களாக உள்ளனர் என்பது யோகேந்திர யாதவ் நடத்திய ஆய்வு முடிவு தெளிவாக்கிவிட்டது. இவர்கள் தான் வி.பி.சி்ங் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கியபோது அதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துவிட்டதைப் போல காட்டியவர்கள்)

3. ஜாதியை நிலை நிறுத்திவிடுமே இந்த ஏற்பாடு என்று புரியாமல் குழம்பி, கொள்ளிக் கட்டையை எடுத்து தங்கள் தலையைத் தாங்களே சொரிந்து கொள்ளும் அப்பாவிகளான பாமரத்தன்மை வாய்ந்த மற்ற மக்கள்.

'பயோ மெட்ரிக்" முறை தேவையற்றது மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது போன்று, இப்பிரச்சினையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பயோ மெட்ரிக் என்ற முறையைக் கையாண்டால், அது இந்த யுகத்தில் எளிதில் முடியாது, பல ஆண்டுகள் நீடிக்கும் அபாயம் உண்டு. அது முற்றிலும் தேவையற்றது.

இவ்வாறு கூறியுள்ளார் வீரமணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X