For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தின் ஒப்புதலையோ, தமிழக அரசின் ஒப்புதலையோ பெறாமல், அரசியல் சட்டத்தை திருத்தாமல், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டுள்ளது. எனவே இது ஒரு சட்டவிரோதமான ஒப்பந்தம் என்று திமுக கூறியுள்ளது.

எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று திமுக எம்பி டி.ஆர்.பாலு கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதன் மீது நடைபெற்ற விவாதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சி எம்.பிக்கள் கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விவாதத்தில் பேசிய பாலு, கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம், கடந்த 1974ம் ஆண்டு ஜுன் மாதம் கையெழுத்தானது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஸ்வரண் சிங், தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையும், கடற்பயண உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒப்பந்தப்படி, சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் ஓய்வு எடுக்கவும், வலைகளை உலர்த்தவும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 1976ம் ஆண்டு முதல் நிலைமை மாறியது. இந்திய-இலங்கை செயலாளர்கள் இரண்டு கடித தொகுப்புகளை பரிமாறிக் கொண்டார்கள். அந்தக் கடிதங்கள், கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அங்கமாக ஆக்கப்பட்டன. அதன்படி, இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டது.

இந்த கடிதங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையோ, அப்போதைய தமிழக அரசின் ஒப்புதலையோ பெறவில்லை. அரசியல் சட்டத்தை திருத்துவதன் மூலமும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமும் மட்டுமே, இந்தியாவின் எந்தப் பகுதியையும் பிற நாட்டுக்கு கொடுக்க முடியும். அப்படிச் செய்யப்படாததால், இது ஒரு சட்டவிரோதமான ஒப்பந்தம்.

எனவே, கச்சத் தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும்.கச்சத் தீவு பகுதி, உலகிலேயே இறால் மீன்கள் அதிகமாக கிடைக்கும் பகுதி.

ஆனால் அங்கு செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இத்தகைய தாக்குதலைத் தடுக்க, இந்திய கடற்படையின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றார்.

அதிமுக எம்பி தம்பிதுரை பேசுகையி்ல்,

கச்சத் தீவு, தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. ஒப்பந்தம் கையெழுத்தானபோது, தமிழக அரசை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதால், இதுவரை 500 மீனவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரம் பேர் முடமாக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரம் பேரைக் காணவில்லை.

எனவே, இலங்கையுடன் நட்பு வேண்டும் என்பதற்காக, தமிழக மீனவர்களின் நலன்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. தமிழ்நாடு- இலங்கை தமிழ் மீனவர்கள் இடையிலான தொப்புள் கொடி உறவை துண்டிப்பதற்காகவே, இந்த ஒப்பந்தம் போடப்பட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா முகாமிட முயன்று வருகிறது. அங்கு சீனா நிலைகொண்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆகவே, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்.

வெறும் கடிதம் எழுதுவதால் மட்டும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றார் தம்பிதுரை.

அவர் இவ்வாறு கூறியதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு கட்சி எம்பிக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என்றார்.

பின்னர் மார்க்சிஸ்ட் எம்.பி. நடராஜன், மதிமுக எம்.பி கணேசமூர்த்தி ஆகியோரும் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று பேசினர்.

அது இலங்கைக்கே சொந்தம்-கிருஷ்ணா:

இந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,
கச்சத் தீவு, இலங்கைக்கே சொந்தம். அதை திரும்பப் பெற முடியாது. இரு அரசுகளுக்கிடையிலான அந்த புனிதமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. இலங்கை, நமது நட்பு நாடு. அந்த அம்சத்தை மனதில் கொள்வது அவசியம்.

மீன்பிடி விவகாரம் தொடர்பாக, கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியா-இலங்கை இடையே ஒரு புரிந்து கொள்ளல் ஒப்பநதம் ஏற்பட்டது.

அதன்பிறகு, தமிழக மீனவர்கள் பிடிக்கப்படுவதும், சுடப்படுவதும் கணிசமாக குறைந்துள்ளது. 2008ம் ஆண்டு, 1,456 மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், 2009ம் ஆண்டு, அது 127 ஆகக் குறைந்தது. இந்த ஆண்டு ஜுலை மாதம்வரை, 26 மீனவர்கள் மட்டுமே பிடித்துச் செல்லப்பட்டனர்.

கடந்த 2008ம் ஆண்டு 5 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 2009ம் ஆண்டு, யாரும் கொல்லப்படவில்லை. நடப்பு ஆண்டில், ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்துள்ளது.

எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் இலங்கை அரசின் கவனத்துக்கு அதை எடுத்துச் செல்கிறோம். ஆனால், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று இலங்கை மறுத்து விடும். தங்களது கடற்படை, இந்திய கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்றும் கூறும்.

எனவே, இத்தகைய சம்பவங்கள் இலங்கை கடல் எல்லைக்குள்தான் நடக்கின்றன என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். ஆகவே, எல்லையை மதிக்க வேண்டும் என்றும், இலங்கை பகுதிக்குள் நுழையக்கூடாது என்றும் நமது மீனவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

அதுபோல, இலங்கை மீனவர்களும் நமது பகுதிக்குள் வரக்கூடாது என்று இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

ஆனால், கிருஷ்ணாவின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, அதிமுக, மதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக எம்பிக்களும் அவரது பதிலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் டி.ஆர்.பாலு தொடர்ந்து கேள்விகள் எழுப்பியபடி இருந்தார். ஆனால், விவாதத்தை இத்துடன் முடிப்பதாக அறிவித்து அடுத்த அலுவலை எடுத்துக் கொண்டார் சபாநாயகர் மீரா குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X