ரூ. 10 லட்சம் கடன் மோசடி: முதியவருக்கு 2 ஆண்டு சிறை, ரூ. 5000 அபராதம்
நெல்லை: கூட்டுறவு வங்கியில் போலியான ஆவணங்களைக் கொடுத்து ரூ.10 லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு நெல்லை மாஜி்ஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
பாளையங்கோட்டை தியாகராஜர் காலனியைச் சேர்ந்தவர் குருவேம்பு. இவரது தந்தை ராமசாமிக்கு சொந்தமான நிலம் வி.எம். சத்திரம் பகுதியில் உள்ளது. ராமசாமி இறந்து விட்டதை அடுத்து கடந்த 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி போலியான ஆவணங்களைச் சமர்பித்து வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் குருவேம்பு ரூ.10 லட்சம் கடன் பெற்றார். ஆனால் அவர் கடனைத் திரும்பச் செலுத்தவில்லை.
கடனை திரும்பச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் வெளியிட்ட நோட்டீஸுக்கும் அவர் உரிய பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் நேரடி விசாரணை செய்ததில் குருவேம்பு தனது தந்தையின் பெயரில் உள்ள சொத்துகளின் பேரில் போலியான ஆவணங்களைத் தயாரித்து வங்கியில் கடன் பெற்றிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து வங்கி நிர்வாகம் தரப்பில் நெல்லை வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட குருவேம்பு, இதற்கு உடந்தையாக இருந்த மாணிக்கம், சேகர், கில்டா, கந்தசாமி, மரியதுரை, பரமசிவன் ஆகியோர் மீது நெல்லை 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி குருவேம்புக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், மாணிக்கம், சேகர், கந்தசாமி, மரியதுரை ஆகியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். கில்டா மற்றும் பரமசிவனை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.