For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றது தான் இஸ்லாம்: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறி தான் இஸ்லாம் எனறு முதல்வர் கருணாநிதி புனித ரம்ஜான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

உலகெங்கம் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒருமாத காலம் தமது உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு, கடுமையான நோன்பிலிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து சகிப்புத்தன்மையோடு அன்பு, இரக்கம், கருணை, ஈகை என்னும் பண்புகள் சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.

பேரறிஞர் அண்ணா, “இஸ்லாம்" என்பது ஒரு வாழ்க்கை நெறி என்கிறார். அதாவது: உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றது தான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மார்க்கமாக அமைந்திருக்கிறது.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஏதாவது ஒரு பிரச்சனை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளில் இருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை காண முடியும் என்கிறார்.

இப்படி வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறியாகவே அமைந்துள்ள இஸ்லாமிய நெறியைப்பின் பற்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் நலமும் வளமும் எய்தி வாழ வேண்டுமென்பதற்காகத் தமிழக அரசு, நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி, உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து,

ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2,000 என்பதை 2,400 வரை உயர்த்தி, உலமா ஓய்வூதியத் திட்டத்தைத் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித்து மாதந்தோறும் 750 ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கி, உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து உதவிகள் வழங்கி,
தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்-2009 குறித்து இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தும்,

உயர் கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது உள்பட பல்வேறு சலுகைகளை நல்கி இஸ்லாமிய சமுதாய மக்களை இந்த அரசு தொடர்ந்து அரவணைத்து வருவதை இந்நன்னாளில் நினைவு கூறுகிறேன்.

இந்த நினைவுகளோடு இஸ்லாம் வலியுறுத்தும் இன்றியமையாக் கடமைகளில் ஒன்றாகிய நோன்புக் கடமையைச் செம்மையாக நிறைவேற்றி, இன்று ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

தலித்-இஸ்லாமியர் கூட்டணியை உருவாக்குவோம்-திருமா:

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,

“இறைவனை வணங்குவோம்; இல்லாதோருக்கு வழங்குவோம்" என்னும் உயரிய கருத்தை உலகுக்கு உயர்த்தும் வகையிலான திருநாளாக ஈகைத் திருநாள் இஸ்லாமிய பெருங்குடி மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுது ஏழை-எளிய மக்களுக்கு உதவிகள் செய்து மாந்த நேயத்தை செழுமைப்படுத்தும் வகையில் ரமலான் மாதத்தின் நிறைவிலும் 'ஷவ்வால்" மாதத்தின் துவக்கத்திலும் மூன்றாம் பிறை காணும் நாளில் ஈத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவை 'மனித நேயத் திருவிழா" என்றே அழைக்கலாம். இவ்விழாவின் உள்ளீடான கருத்தானது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொருந்துவதாகும்.

அத்தகைய சிறப்புக்குரிய ஈகைத் திருநாளில் இஸ்லாமியச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், இந்த மண்ணில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளரவேண்டும் என்றும் 2016ல் தலித் மற்றும் இஸ்லாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட இந் நன்நாளில் உறுதியேற்போம் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுகிக்கிறோம்.

'உனக்கு", 'எனக்கு" என்கிற இடைவெளியைத் தவிர்ப்போம்;
'நமக்கு" 'நமக்கு" என்னும் நல்லுணர்வை வளர்ப்போம்!""என்று கூறியுள்ளார் திருமா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X