செப். 20 முதல் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக்
நெய்வேலி: 10 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக என்எல்சி நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால், செப்டம்பர் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் என்எல்சி நிர்வாகத்திடம் ஆகஸ்ட் 19-ல் வேலைநிறுத்தக் கடிதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து செப்டம்பர் 2-ல் புதுச்சேரியில் உதவி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து காலவரையறையின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் முடிவு மேற்கொண்டு, அதற்கான சங்க பேரவைக் கூட்டத்தை செப்டம்பர் 14-ல் வட்டம் 24-ல் உள்ள ஏஐடியுசி தொழிற்சங்க வளாகத்தில் கூட்டியது.
இக் கூட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, வியாழக்கிழமை (செப். 16) புதுச்சேரியில் உதவி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து, வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.