மதுரை வரக் கூடாது-ஜெ.வுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்து கடிதம்
சென்னை: ஜெயலலிதா தேதியை மாற்றி மதுரைக்கு வந்தாலும் விட மாட்டோம் என்று மிரட்டி ஜெயா டிவிக்கு வைகைப் புயல் பாலு என்பவரது பெயரில் கடிதம் வந்துள்ளது.
ஏற்கனவே இதே பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் சமீபத்தில் வந்திருந்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இதே பெயரில் கடிதம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதத்தில் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து கடிதம் வந்திருப்பது இது 3வது முறையாகும். இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவுக்கு போதிய அளவில் பாதுகாப்பு தரப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்திருந்தார். மேலும், தமிழக அரசும், பத்திரிகைகளில் பெரிய அளவில் விளம்பரமாகவே ஜெயலலிதாவின் பாதுகாப்பு விவரங்களை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. இன்லான்ட் கடிதத்தில் அது ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் மற்றும் மனோஜ்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, செந்தமிழன் ஆகியோர் சென்னை கோட்டையில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து புகார் கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்,
மதுரையை சேர்ந்த வைகை புயல் பாலு, முத்துப்பாண்டியன் ஆகியோர் பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், மதுரை கூட்டத்துக்கு வராதே. என்னதான் தேதியை மாற்றி வந்தாலும் நிச்சயம் நீ திரும்ப மாட்டாய். ஒரே நேரத்தில் வீடு, அலுவலகம் அனைத்தும் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கடிதம் பற்றி போலீஸ் டி.ஜி.பி.யிடம், ஜெயா டி.வி. நிர்வாகம் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் உள்துறை செயலாளரையும், தலைமை செயலாளரையும் சந்தித்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினோம். மேலும் ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுள்ளோம் என்றார்.