For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒமர் சர்ச்சை பேச்சு-காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி

By Chakra
Google Oneindia Tamil News

Omar Abdullah
ஸ்ரீநகர்: இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியாக நீடித்து வருவதாக அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா சர்ச்சைக்குரிய வகையில் சட்டசபையில் பேசினார்.

அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பல எம்எல்ஏக்கள் அவையின் மையப் பகுதியில் கூடி முதல்வருக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் அவையைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

காஷ்மீரில் நடந்து வரும் தொடர் கலவரம் தொடர்பாகவும், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டிலும், கலவரத்திலும் நூற்றுக்கணக்கானோர் பலியானது தொடர்பாகவும் அம் மாநில சட்டசபையில் விவாதம் நடந்தது.

அப்போது பேசிய உமர் அப்துல்லா, இந்தியாவுக்கும், காஷ்மீருக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியாக நீடித்து வருகிறது. மற்றபடி இந்தியாவுடன் காஷ்மீர் ஒரு போதும் இணையவில்லை.

இதனால் காஷ்மீரையும் பிற மாநிலங்களைப் போல மத்திய அரசு கருதுவதும், நடத்துவதும் நடத்துவது சரியல்ல.

ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்து இருக்கிறதே தவிர, இணையவில்லை. அந்த ஒப்பந்தத்தை நாங்கள் முறிக்க மாட்டோம். ஆனால் ஒப்பந்தத்தை மற்றவர்கள் உடைத்தால் அது காஷ்மீர் மக்களை கோபத்துக்குள்ளாக்கும். அதை காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்சனை. இதற்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். பிரச்சனையை தீர்க்காத வரை மாநிலத்தில் அமைதி திரும்பாது. இது சர்வதேச அளவில் பல்வேறு மட்டங்களி்ல் கிளப்பப்பட்ட விவகாரம்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாலோ, ரேஷன் கடைகளில் உரிய பொருட்களை வழங்கிவிட்டோலோ இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடாது. இதை மத்திய அரசு உணர வேண்டும்.

இது சாதாரண பிரச்சனை என்றால் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் ஏன் லாகூர் சென்று காஷ்மீர் பிரச்சனை பற்றி பேசினார்?. ஆக்ராவிலும் டெல்லியிலும் ஏன் இரு நாட்டு அரசுகளும் பேச்சு நடத்தின?.

இந்தப் பிரச்சனை மாநில நிர்வாகம் தொடர்பாக பிரச்சனை அல்ல. நான் பதவி விலகினால் காஷ்மீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று யாராவது உறுதி தந்தால், நான் முதல்வர் பதவியை விட்டு மட்டுமல்ல, அரசியலை விட்டே விலகவும் தயார்.

காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தரும் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் என்பது ஹைதராபாத் அல்ல. இதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவதோ தவறு.

இந்த மாநிலம் இந்தியாவுடன் சேர்ந்திருக்க ஒப்பந்தம் போடப்பட்டு, சேர்க்கப்பட்டது. அதன்படி காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியாக நீடித்து வருகிறது. மற்றபடி இந்தியாவுடன் இணையவில்லை. அந்த ஒப்பந்தத்தை நாங்கள் மதித்து வருகிறோம்.

இந்தியாவே வெளியேறு என்று தெருக்களி்ல் கோஷம் போடுகிறார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த கலவரத்தால் வேலைவாய்ப்புகளை இழந்துவிட்ட 30,000 மக்கள் தான் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறு மக்களை பிரிவினைவாதிகள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் வரை பிரச்சனை தீராது.

இந்தப் பிரச்சனை தீர, இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து தருவது தான் ஒரே வழி. அதை பாஜக எதிர்ப்பது எனன நியாயம்?. இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட ஒரு தீர்வை எதிர்ப்பது ஏன்? என்றார் ஒமர்.

மேலும் தனது பேச்சின்போது இந்த விவகாரத்தில் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளையின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்தார்.

சட்டசபையில் கடும் ரகளை:

ஒமர் அப்துல்லாவி்ன் இந்தப் பேச்சுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பல எம்எல்ஏக்கள் அவையின் மையப் பகுதியில் கூடி முதல்வருக்கு எதிராக கோஷமிட்டனர்.

பாஜக மற்றும் என்பிபி எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் காவலர்கள் விரைந்து வந்து அந்த எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற முயன்றனர்.

அப்போது காவலர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதில் 3 பாஜக எம்.எல்.ஏக்கள் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை அடிக்க பாய்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு சென்றனர்.

ஒமரை நீக்க பாஜக கோரிக்கை:

ஒமர் அப்துல்லாவுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை என்பது அவரின் பேச்சின் மூலம் தெளிவாகிவிட்டதாக பாஜக கூறியுள்ளது.

இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக கோரியுள்ளது.

காஷ்மீர் பிரச்சனையில் தலையிட மாட்டோம்-ஜ.நா:

இதற்கிடையே காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தையடுத்து அதில் உலக நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் வற்புறுத்தி வருகிறது.

ஆனால் காஷ்மீர் பிரச்சனையில் 3வது நாடு தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியா உறுதியாக கூறி வருகிறது.

இந் நிலையில் இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் கூறுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும் அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து, இரு நாடுகளும் எங்களை தலையிட அழைத்தால் மட்டுமே அதில் தலையிடுவோம். காஷ்மீர் பிரச்சனையில் நாங்கள் தேவையில்லாமல் தலையிட மாட்டோம்.

காஷ்மீரில் கலவரம்- உயிரிழப்புகள் குறித்து நாங்கள் கவலை அடைந்தோம். எனவே அமைதியை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X