For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலாறு காணாத ஓட்டுக்களுடன் ஐ.நா. பாதுகாப்பு சபை தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு

Google Oneindia Tamil News

UNSC Logo
ஐ.நா.: மொத்தம் உள்ள 190 ஓட்டுக்களில் 187 ஓட்டுக்களைப் பெற்று வரலாறு காணாத ஓட்டுக்களுடன் ஐ.நா. பாதுகாப்பு சபை தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்தியா.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த நாடும் இதுபோல அதிகபட்ச ஓட்டுக்களைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியா போட்டியிட்டது. இதற்காக நடந்த வாக்கெடுப்பில் இந்தியாவுக்கு மொத்தம் உள்ள 190 உறுப்பினர்களில் 187 பேர் வாக்களித்து அமோகமான முறையில் இந்தியாவை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இது மிகவும் சிறப்பான வெற்றி. பல செய்திகளை இது கூறுவதாக உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த நாட்டுக்கும் இவ்வளவு அதிக அளவிலான வாக்குகள் கிடைத்ததில்லை என்பது முக்கியமானது என்றார்.

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தேர்வானதைத் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் ஐ.நா. அலுவலகத்தில் சாம்பெய்ன் பாட்டிலை திறந்து கொண்டாடினர். மேலும், சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது - அதில் சைனீஸ் வகை உணவுகள்தான் அதிகமாக இருந்ததாம்.

ஐ.நா.வின் நிறுவன உறுப்பினரான இந்தியா, 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாதுகாப்பு கவுன்சிலுக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மொத்தம் 6 முறை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்துள்ளது இந்தியா. தற்போது 7வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, ஜெர்மனி, போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் பாதுகாப்பு சபைக்கு தேர்வு செய்யப்பட்டன.

பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட கனடாவுக்குத்தான் மிகக் குறைந்த வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து 2வது கட்ட வாக்கெடுப்பின்போது அது போட்டியிலிருந்து விலகி விட்டது.

ஏற்கனவே உறுப்பினராகஇருந்து வந்த ஆஸ்திரியா, ஜப்பான், மெக்சிகோ, துருக்கி, உகாண்டாவுக்குப் பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகியவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த உறுப்பினர் பதவிக்காக கடுமையாக முயன்று வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

உறுப்பினர் பதவிக்கான போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு அவை சார்ந்த பிராந்தியங்களிலிருந்து எந்தப் போட்டியும் இல்லை. அதேசமயம் ஜெர்மனி, கனடா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு அவை சார்ந்த பகுதியில் கடும் போட்டி நிலவியது.

இதில் ஜெர்மனி முதல் ஓட்டிலேயே (128 வாக்குகள் பெற்றது) தேர்வாகி விட்டது. கனடாவுக்கு மிகவும் குறைந்த வாக்குகள் கிடைத்ததால் அது விலகியது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தியா பாதுகாப்பு சபை உறுப்பினராக பதவி வகிக்கும்.

சர்வதேச அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டதுதான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இது 1946ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவற்றில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்பு நாடுகளாகும். இவற்றுக்கு மட்டும் வீட்டோ அதிகாரம் உண்டு. அதாவது இந்த ஐந்து பேரில் ஒரு நாடு, தான் நினைத்தால் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானம் அல்லது முடிவை நிராகரிக்க முடியும்.

மற்ற பத்து நாடுகளும் பிராந்திய வாரியாக தற்காலிகமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில்தான் தற்போது இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது உறுப்பினர்களாக உள்ள 10 தற்காலிக உறுப்பினர்களில் ஆஸ்திரியா, ஜப்பான், மெக்சிகோ, துருக்கி, உகாண்டா ஆகியவற்றின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடத்திற்குத்தான் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ள போஸ்னியா-ஹெர்ஸகோவினா, பிரேசில், கபான், லெபனான், நைஜீரியா ஆகியவை 2011ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X