For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகாரில் தோல்வியடைந்த ராகுல் காந்தியின் 'உ.பி.பார்முலா'!

Google Oneindia Tamil News

Rahul Gandhi
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு ஓரளவு கை கொடுத்த ராகுல் காந்தியின் பார்முலா பீகாரில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் ராகுல் காந்தியை ஒரு பொருட்டாகவே பீகார் வாக்காளர்கள் கருதவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி படு மோசமாக உள்ள உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கட்சியை வளர்க்கும் பொறுப்பை ராகுல் காந்தி வசம் கட்சி மேலிடம் ஒப்படைத்தது.

இதையடுத்து களம் இறங்கிய ராகுல் காந்தி, இந்த மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸைப் பலப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தினார். இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தும், புதிய இளைஞர்களை கட்சியில் சேர்த்தும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வந்தார்.

அத்தோடு நில்லாமல் தானே பல்வேறு மாநிலங்களுக்கும் விசிட் அடித்து மற்ற கட்சியினருக்கு கிலியை ஏற்படுத்தினார். அவரது இந்த அதிரடி நடவடிக்கைக்கு உ.பியில் மட்டுமே பலன் கிடைத்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் அங்கு தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களில் வென்று பாஜகவை 4வது இடத்துக்குத் தள்ளியது. அங்கு ராகுலின் வருகையால் மாயாவதி சற்றே ஆடிப் போயுள்ளார்.

ராகுல் காந்தியின் உ.பி. பார்முலா பீகாரிலும் எடுபடும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருந்தது. இதனால்தான் அங்கு லாலு அன்ட் கோவுடன் இணையாமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது.

ஆனால் உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா என்ற கதையாகி விட்டது பீகார் காங்கிரஸின் நிலை.

2005ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களில் வெற்றி கிடைத்தது. இந்த முறை, குறைந்தது 2வது இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ராகுல் காந்தியும், காங்கிரஸும் இருந்தனர். ஆனால் கடந்த முறையை விட குறைவான இடங்களே (6 இடங்கள்) கிடைத்துள்ளதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் தோல்வியில் ஆச்சரியம் இல்லை. ஆனால் கடந்த முறையை விட மோசமான தோல்வியை அது சந்தித்துள்ளதால் காங்கிரஸார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்னர்.

காங்கிரஸ் மட்டுமல்லாமல், லாலு பிரசாத் யாதவின் கூட்டணியும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த முறை 65 இடங்களைப் பிடித்த லாலு கூட்டணிக்கு இந்த முறை 30 இடங்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பாதிக்குப் பாதி அக்கூட்டணிக்கு அடி கிடைத்துள்ளது.

ராகுல் காந்தி போட்ட கணக்கு முதல் முறையாக ஒரு சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளதால் காங்கிரஸ் வட்டாரம் பெரும் கவலை அடைந்துள்ளது.

இருப்பினும் இந்தத் தேர்தலில் நிதீஷ் குமார் கூட்டணிக்குக் கிடைத்துள்ள பெரும் வெற்றிக்கு, நிதீஷ் குமார் மட்டுமல்ல, பீகார் மக்கள்தான் முக்கிய காரணமாவர்.

நிதீஷ் குமார் அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது. அதேபோல வளர்ச்சித் திட்டங்களிலும் அதிக அக்கறை காட்டினார் நிதீஷ். ஊழல், வளர்ச்சியின்மை, அரசியல் ரவுடியிசம், வன்முறை, மாவோயிஸ்ட் பிரச்சினை என்று பீகாரை மூடிக் கிடந்த கருப்புப் போர்வையை கஷ்டப்பட்டு விலக்கி, பீகார் மக்களுக்கு புதிய வெளிச்சத்தைக் காட்டியுள்ளார் நிதீஷ் குமார்.

நிதீஷ் குமார் வருவதற்கு முன்பு இருந்த பீகாருக்கும், அவர் முதல்வரான பிறகு உள்ள பீகாருக்கும் இடையே, மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண முடியும். இதை காங்கிரஸே ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் பீகார் சட்டசபைத் தேர்தல் என்றால் அது வன்முறை, அட்டூழியம், முறைகேடு, மோசடி என்றுதான் இருக்கும்.ஆனால் இந்தத் தேர்தல் எந்தவித வனமுறையும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்ததை நாடே ஆச்சரியத்துடன் பார்த்தது.

இத்தனைக்கும் மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடையாது. குறைகளை மட்டுமே சொல்லி வந்த காங்கிரஸ், இடையூறு செய்வதையே அரசியலாகக் கொண்ட லாலு, பீகாருக்கு ஒரு முறை கூட வராத பிரதமர் மன்மோகன் சிங், கூட இருந்தே நெருக்கடி கொடுத்து வந்த பாஜக, மோடி சவால் என பல தடைகளைக் கடந்துதான் தனது இமேஜை இன்று பீகார் மக்களிடம் அழுத்தமாக பதிய வைத்துள்ளார் நிதீஷ் குமார்.

கிட்டத்தட்ட சிங்கிள் ஹேன்டட் ஆக அவர் வெற்றியைப் பறித்துள்ளார். இந்த தேர்தலில் ஜாதி, மதம் ஆகியவற்றை மக்கள் புறம் தள்ளியுள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன. குறிப்பாக ஜாதித் தீயில் அமிழ்ந்து போயிருந்த பீகாரை, பீனிக்ஸ் பறவை போல உயிர்ப்பித்துக் காட்டியுள்ளார் நிதீஷ்.

ஜாதி, மதம், ஊழல் ஆகியவற்றைத் தாண்டி, வளர்ச்சிதான் எங்களுக்குத் தேவை, அமைதியான வாழ்க்கைதான் எங்களுக்குத் தேவை என்ற தங்களது கருத்தை மக்கள் ஆணித்தரமாக எடுத்து வைத்துள்ளனர்.

இந்த தேர்தலில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், மற்ற அனைத்துக் கட்சிகளையும் விட பாஜகவுக்கே பெரும் லாபம் கிடைத்துள்ளது என்பதுதான். உண்மையில் நிதீஷை வட பாஜகவே பெரும் பலனை சந்தித்துள்ளது. கடந்த முறையை விட 20க்கும் மேற்பட்ட இடங்களை அது கைப்பற்றியுள்ளது. அதேசமயம், கடந்த முறையை விட 15 இடங்களையே நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கூடுதலாக வென்றுள்ளது.

இந்த தேர்தல் மூலம் குடும்ப அரசியலுக்கு நிரந்தரமாக சமாதி கட்டியுள்ளனர் பீகார் மக்கள். லாலு பிரசாத் யாதவின் இரும்புப் பிடியில் சிக்கியிருந்த பீகாருக்கு கிட்டத்தட்ட விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளார் நிதீஷ் என்று கூட கூறலாம்.

ராப்ரி போன்றோரை முதல்வராக்கிய லாலுவுக்கு பீகார் மக்கள் சரியான பதிலடியைக் கொடுத்து விட்டனர்.

இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. வெறும் வாய்ஜாலத்தால் மக்களை ஏமாற்ற முடியாது, அவர்களுக்கென்று ஏதாவது செய்துவிட்டு பேசினால்தான் நம்புவார்கள் என்பதை இத்தேர்தல் காங்கிரஸுக்கு நிரூபித்து விட்டது. ராகுல் காந்தியை பெரிய மேதை போல காட்டி வந்த காங்கிரஸை மக்கள் முற்றாக நிராகரித்திருப்பது வியப்புகுரியதல்ல.

அதேசமயம், நிதீஷ்குமார் பேச்சை விட செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தியவர். இன்று இவ்வளவு பெரிய வெற்றியை அவரது கூட்டணி பெற்றும் இதுவரை அவர் எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. ஏன் ஒரு பேட்டி கூட கொடுக்கவில்லை. அவரது வீட்டுக்கு முன்பு தொண்டர் கூட்டம் கூட இல்லை. அவ்வளவு அடக்கமாக இருக்கிறார்.

ரயி்லவே அமைச்சராக நிதீஷ்குமார் இருந்தபோதே நல்ல பெயர் எடுத்தவர். நேர்மையான ஒரு தலைவராக மதிக்கப்பட்டவர். நாட்டின் பிரதமராகக் கூடிய தகுதி படைத்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்டவர். இன்று தனது தலைமைத்துவ சிறப்பை அவர் நிரூபித்து விட்டார். பீகார் என்றாலே பயப்படும் அளவுக்கு இருந்து வந்த இமேஜே அப்படியே துடைத்துப் போட்டு புதிய கெளரவத்தைக் கொடுத்துள்ளார்.

நிதீஷ்குமாரிடமிருந்து காங்கிரஸ் கற்க வேண்டிய பாடம் நிறையவே உள்ளது.

தேர்தல் முடிவால் பீகார் மாநில காங்கிரஸாரும், லாலு, பாஸ்வான் கட்சியினரும் பெரும் சோகமடைந்துள்ளனர். இவர்களது கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

ராகுல் காந்தியின் பார்முலா, அவர் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே படு தோல்வி அடைந்திருப்பதால் காங்கிரஸ் வட்டாரமும் தனது நிலையை மறு ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது.

பீகார் தேர்தல் முடிவைப் பொறுத்து அடுத்தாண்டு மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பல அதிரடி முடிவுகளுக்குத் திட்டமிட்டிருந்த காங்கிரஸ் தற்போது அவற்றை அப்படியே ஓரம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X