For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ நுழைவுத் தேர்வை முழு மூச்சாய் எதிர்ப்போம்: கருணாநிதி திட்டவட்டம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை முழு மூச்சாக எதிர்ப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மற்றும் கிராமப்புற மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்க தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வை இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி:- நீங்கள் திரைக்கதை வசனம் எழுதி விரைவில் வெளிவவுள்ள "இளைஞன்'' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் உடன் ஒரு மணி நேரம் நீங்கள் கலந்து கொண்டது குறித்து வயிறெரிந்து இரண்டு அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, தற்போது "ஏலகிரி''யில் இரண்டு நாட்கள் ஓய்வெடுத்ததைப் பற்றி அறிக்கை விட்டுள்ளாரே?

பதில்: என் அருகில் இருப்போர் நான் எந்த அளவிற்கு உழைக்கக் கூடியவன், எந்த அளவிற்கு ஓய்வெடுக்கக் கூடியவன் என்பதை நன்கறிவார்கள். என்னுடைய மருத்துவர்களும் இப்படி ஓய்வெடுக்காமல் உழைக்கிறீர்களே என்று தான் கோபித்துக் கொள்வார்கள். ஆனால் ஊட்டி சென்று கொடநாடு எஸ்டேட்டில் மாதக் கணக்கில் ஓய்வெடுக்கின்ற ஜெயலலிதா; தனது அறிக்கையில் முதல் நாள் காலையில் ஏலகிரி சென்று விட்டு, மறுநாள் மாலையில் சென்னை திரும்பிய என்னைப் பற்றி, ஏலகிரியில் ஏகாந்தமாய் பொழுதை கழித்ததாக நொந்து கொண்டிருக்கிறார்.

எனக்கு எப்போதும் ஏகாந்தமாய் பொழுதைக் கழித்துப் பழக்கமில்லை. என்னுடன் தம்பிகள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன், காந்தி, டி.ஆர்.பாலு ஆகியோரும், என்னுடைய செயலர்கள், பாதுகாவலர்கள் என்று அனைவருடனும்தான் பொழுதைக் கழித்தேன். அதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பொது நுழைவுத் தேர்வு, பெட்ரோல் விலை உயர்வு என்று பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பதாக அறிக்கையிலே எழுதியிருக்கிறார்.

பெட்ரோல் விலை உயர்வு என்ற செய்தி நான் ஏலகிரியில் இருந்து திரும்பிய பிறகுதான் ஏடுகளில் வெளிவந்தது என்பதை பத்திரிகை படிப்பவர்கள் நன்கறிவார்கள். நுழைவுத் தேர்வு பிரச்சனையைப் பொறுத்தவரை, அந்தச் செய்தி ஏடுகளிலே வெளிவந்தவுடன் அது பற்றிய உண்மை விளக்கங்களை மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலாளரே ஏடுகளில் விவரமாகச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் ஜெயலலிதா அந்தச் செய்தியைப் படிக்காமலேயே, நுழைவுத் தேர்வுப் பிரச்சனை வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஏலகிரியில் ஏகாந்தமாய் பொழுதைக் கழிக்கலாமா என்று கேள்வி கேட்டிருக்கிறார். இன்னும் விவரமாக இது பற்றிச் சொல்ல வேண்டுமேயானால், மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற இந்திய மருத்துவ குழுவின் முடிவு பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்தவுடனேயே தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனையும் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையையும் பாதிக்கக்கூடும் என அரசு கருதி மேற்கண்ட முடிவை மறுபரிசீலனை செய்து பொது நுழைவுத் தேர்வு முறையை நீக்க வேண்டுமென்று 15-8-2010 அன்றே நான் இந்தியப் பிரதமருக்கும், மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை மந்திரிக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

அக்கடிதத்தில் தமிழக அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஒரு சட்டம் இயற்றி 2007-2008 கல்வியாண்டு முதல் மாணவர்கள் பிளஸ்-2 படிப்பில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று தெரிவித்து இந்த முறை தொடரப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இது குறித்த ஒரு வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டுள்ளது. தொழிற்படிப்பில் சேர்வதற்காக நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வு முறையை நீக்கி 09-06-2005-ல் வெளியிடப்பட்ட அரசாணை செல்லுபடியாகாது என சென்னை உயர்நீதிமன்றம் 27-06-2005 அன்று ஆணை பிறப்பித்தது. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து மீண்டும் 18-02-2006 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணையையும் 27-02-2006 அன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் 24-05-2006 அன்று அறிவிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு 07-07-2006 அன்று அமைக்கப்பட்டது.

அக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு முறையை நீக்குவதற்கு உரிய சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டு 07-03-2007 அன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் 27-04-2007 அன்று இச்சட்டத்தினை உறுதி செய்தது. 2007- 2008 கல்வியாண்டு முதல் மாணவர்கள் பிளஸ்-2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை மந்திரி குலாம் நபி ஆசாத் 27-8-2010 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மருத்துவக் குழுமம் பரிந்துரைத்துள்ள மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு எல்லா மாநிலங்களுடனும், மருத்துவக் கல்வியாளர்களுடனும் கலந்து விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளார்.

இந்திய மருத்துவக் குழுமத்தின் ஆளுநர்கள் குழு 29-8-2010 அன்று கூட்டிய அனைத்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர்களின் கூட்டத்தில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர் கலந்து கொண்டு, இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ள மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளுக்கு தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

30-8-2010 அன்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மையக் குழுமக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் எந்த இறுதி முடிவும் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

பொது நுழைவுத் தேர்வு குறித்த வழக்கு 17-9-2010 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் இதனை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது போன்று மற்ற மாநிலங்களும் இதனை எதிர்க்கலாம் என்றும், எனவே மத்திய அரசு இவ்விஷயத்தில் முடிவெடுக்கும் முன்னர் அனைத்து மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பின்னர், அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் மாநில அரசுகளுடனும், மற்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதைப் பற்றி ஜெயலலிதா தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். இது பற்றி தமிழக அரசின் சார்பில் 23-9-2010 அன்று வெளியிட்ட அறிக்கையிலேயே மத்திய அரசின் அந்த முடிவை தமிழக அரசு எதிர்க்கிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

இதனிடையே மருத்துவ படிப்பிற்கும் மருத்துவ முதுகலை படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு வழி வகை செய்யும் வரைவு விதிகளுக்கு மத்திய அரசு மாநில அரசின் கருத்தினை கோரியது. இவ்வரைவு விதிகள் இவ்வரசுக்கு கிடைக்கப் பெற்றவுடன் இவ்விதி கிராமப்புற மாணவர்களுக்கும் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முறைக்கும் பாதகம் ஏற்படுத்தும் என்பதால் அவ்வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22-11-2010 அன்று மத்திய அரசுக்கு தனது கருத்தை இவ்வரசு அனுப்பியுள்ளது.

இதனிடையே 13-12-2010 அன்று உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் சார்பில்; நடைமுறையில் உள்ள பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு புறம்பாக தற்போது நடத்த உத்தேசித்துள்ள பொது நுழைவுத் தேர்வினால் தமிழக மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என எடுத்துரைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் இந்திய மருத்துவக் குழு சட்டத்திற்குட்பட்டு எந்தவொரு விதிகளுக்கும் திருத்தம் வெளியிடலாம் எனவும் அவ்வாறு வெளியிடப்படும் திருத்தம் செயல்பாட்டுக்கு வரும்போது எந்தவொரு நபரும் சட்ட நடைமுறைக்குட்பட்டு எதிர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கானது, எந்த விதத்திலும் மருத்துவ குழுமம் சட்டத்திற்கு உட்பட்டு அறிவிப்பு வெளியிடுவதற்கு தடையாக இருக்காது எனவும் அவ்வாறு வெளியிடப்படும் அறிவிக்கையை எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை சட்டத்திற்குட்பட்டு அணுகுவதற்கு தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதலால் பொது நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று இந்திய மருத்துவக் குழு விதிகளுக்கு உரிய திருத்தம் வெளியிடுமேயானால் அத்திருத்தத்தை தமிழக அரசு சட்ட நடைமுறைகளுக்குட்பட்டு முழுமூச்சாக எதிர்க்கும்.

தமிழக மாணவர்களுக்கு ஏதும் பாதிப்பு வராத வகையில் தகுந்த நீதிமன்றத்தில் முறையீடு செய்து பொது நுழைவுத் தேர்வைக் கைவிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆதலால் பின் தங்கிய மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் மற்றும் ஏனையோரும் பொது நுழைவுத் தேர்வு பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை.

பொது நுழைவுத் தேர்வு குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை. இப்போது நுழைவுத்தேர்வு முறையை எதிர்ப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் 2011-2012 கல்வியாண்டில் தற்போது உள்ள நிலையே தொடர்வதற்கு தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இத்தனை முயற்சிகளையும் தமிழக அரசின் சார்பில் எடுத்திருக்கும் போது, நுழைவுத் தேர்வு பிரச்சனையில் மத்திய அரசின் முடிவுகளுக்கு திமுக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருப்பதாக ஜெயலலிதா அறிக்கையிலே தெரிவிக்கிறார் என்றால், அது அவரது அறியாமையைக் காட்டுகின்றது என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது!.

அந்தக் காலத்தில் ஏ.வி.எம். தயாரித்த திரைப்படம் ஒன்றில் நடிகர் கே.சாரங்கபாணி நடித்த போது, அடிக்கடி "நான் அந்தக் காலத்தில் காலேஜில் படிக்கும் போது.........'' என்று திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகளையே சொல்லிக் கொண்டே தியேட்டரையே சிரிக்க வைப்பார்! அதே பாணியில்தான் இன்றைய எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவும் தமிழகத்தில் என்ன நடைபெற்றாலும், உடனடியாக உதிர்க்கும் வார்த்தையாக "நான் அந்தக் காலத்தில் முதல்வராக இருந்த போது.......'' என்ற சொற்களை தனது அறிக்கையிலே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது "பழைய நினைப்புடா பேராண்டி'' என்ற பாட்டியின் ஏக்கம் தான் தெரிகிறது! எதையும் புரிந்து கொண்டு பேசவேண்டும்! புரியாமல் புலம்புவது கூடாது.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X