For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக ஆட்சி தமிழர்களின் நற்காலம்! - கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi Presents Award
சென்னை: நான் 6-வது முறையாக முதல்-அமைச்சராக வந்தால் 125 கலைஞர்களுக்கு அல்ல, 225 பேர்களுக்கு விருது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2008, 2009, 2010-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, 2007, 2008-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா, பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இளையராஜாவுக்கு சுப்புலட்சுமி விருது:

விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். பாரதி விருது எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும், சுப்புலட்சுமி விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாலசரஸ்வதி விருது நாட்டியக்கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கும் வழங்கப்பட்டது. நடிகர்கள் சின்னிஜெயந்த், கருணாஸ், ஆர்யா, பப்லு, வி.எஸ்.ராகவன், நடிகைகள் சரோஜாதேவி, ரோகினி, சரண்யா, மாளவிகா, அனுஷ்கா, தமன்னா மற்றும் தமிழறிஞர் தமிழண்ணல், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, பார்வையற்ற இசைக்கலைஞர் காயத்ரி சங்கரன் உள்பட 75 கலைஞர்கள் கலைமாமணி விருதை பெற்றனர்.

நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், பிருத்விராஜ், விஜய் ஆதிராஜ், நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகன்யா, தேவயானி, நளினி, சத்யபிரியா மற்றும் டைரக்டர்கள் ராஜீவ்மேனன், திருமுருகன், கவுதமன், செய்யாறு ரவி, பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் உள்பட 41 பேருக்கு சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டன. கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களான கஞ்சிரா கலைஞர் சோமசுந்தரம், தவில் வித்வான் கே.செல்லப்பா, நாடக நடிகை ரேணுகாதேவி ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

கலைமாமணி விருது விழா மலரை முதல்வர் கருணாநிதி வெளியிட, முதல் பிரதியை கவிஞர் கனிமொழி, எம்.பி. பெற்றுக்கொண்டார்.

கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

பாரதி விருது பெற்ற அன்புக்குரிய நண்பரும், புரட்சி எழுத்தாளருமான நண்பர் ஜெயகாந்தன் பேசும்போது, "இது ஒரு பொற்காலம்'' என்று குறிப்பிட்டார். பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை-எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ - என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கின்ற நிலைமை ஏற்படுகிறதோ அதுதான் பொற்காலம்.

இதைப் பொற்காலம் என்று நான் சொன்னால் "நீ அப்படித்தான் சொல்லிக் கொள்வாய்; ஏனென்றால், ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், இந்த ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று நீ கூறுவதிலே ஆச்சரியமில்லை'' என்று நீங்கள் எண்ணக் கூடும் அல்லது சொல்லக் கூடும். ஆனால், நண்பர் ஜெயகாந்தன், எதையும் விமர்சிக்கக் கூடியவர்; நாணயமாக விமர்சிக்கக் கூடியவர்; நேர்மையாக விமர்சிக்கக் கூடியவர்; அச்சத்திற்கு ஆட்படாமல், எந்த விதமான சலுகைகளையும் எதிர்பாராமல், பட்டதை "பட்'' என்று சொல்லக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.

நல்லவர்களின் வாழ்த்து:

அப்படிப்பட்டவர் இந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று சொன்னதை தமிழகத்திற்கு இது பொற்காலம் என்று கூறியதை இன்றைக்கு உங்களுக்கெல்லாம் வழங்கப்பட்ட பொன்னாலான பதக்கத்தை விட அழகாக வரைந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பட்டயங்களை விட சிறந்த பரிசாக எனக்கு அவர் வழங்கிய பரிசாக நான் நன்றியோடு அதை எடுத்துக்கொள்கிறேன். நல்லவர்களுடைய வாழ்த்து ஜெயகாந்தனைப் போன்ற தமிழ் வல்லுநர்களுடைய வாழ்த்து, இந்த ஆட்சிக்கு, எங்களுக்கு என்றென்றும் தேவை.

மோதிரக் குட்டு:

ஒரு காலத்தில் எங்களைப் போன்றவர்கள் எழுதத் தொடங்கி, அவற்றை எல்லாம் எங்கள் இயக்கத் தோழர்களால் படிக்கப்பெற்றபோது, ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக்கொண்டவரல்ல; எங்களை ஏற்றுக்கொள்ளாதவர்;

எங்களுடைய எழுத்துகளை அன்றைய தினம் பாராட்டாதவர், இன்றைக்கு பாராட்டுகிறார் என்றால், நாங்கள் அப்படிப்பட்ட பாராட்டை பெறுவதற்கு குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்கின்ற அளவிற்கு, அவர் எங்களைத் தாக்கி, மறுத்து எழுதியபோதெல்லாம் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றோம்.

தமிழர்களுக்கு நற்காலம்:

ஏனென்றால் அவருடைய விமர்சனத்தில் பொருள் இருக்கும். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். அவருடைய விமர்சனத்தில் தேவையற்ற வெறுப்பு இருக்காது, உண்மையை உள்ளவாறு எடுத்துக்காட்டி அதை விளக்கக் கூடியவர். இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு நான் எழுத வேண்டுமே என்று ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு. இப்போது ஜெயகாந்தனே ஒப்புக்கொள்கிற அளவுக்கு என்னுடைய எழுத்து இருக்கிறதென்றால், நான் கொடுத்து வைத்தவன்- நான் என்னையே பாராட்டிக்கொள்ளக் கூடிய அளவிற்கு அவர் இன்றைக்கு இந்த விழாவிலே இது பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

பொற்காலத்தைக் கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகின்ற சில பேர் இன்று நாட்டிலே இருக்கிறார்கள். இதைப் பொற்காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தனைப் போன்றவர்களுடைய எழுத்து பயன்படுமேயானால், இது பொற்காலமாகவும் இருக்க வேண்டாம்; கற்காலமாகவும் இருக்க வேண்டாம்; இது தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும் என்பதைச் சொல்லி, அதற்கு ஜெயகாந்தனுடைய தமிழ்ப்பணி பயன்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இலவசம் ஏன்?:

இன்றைக்கு ஏறத்தாழ 120 விருதுகள் சின்னத்திரை கலைஞர்கள் உள்பட அத்தனை பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில், கலைமாமணி விருதுகள் 75 பேருக்கு மேல் வழங்கப்பட்டிருக்கின்றன. காலையிலே ஒரு பத்திரிகையிலே பார்த்தேன். "இலவசங்களை வாரி இறைப்பதைப் போல் கருணாநிதி விருதுகளை வாரி இறைத்திருக்கிறார்'' என்று கிண்டலாகப் போட்டிருந்தார்கள்.

இது ஒரு ஆண்டிற்கான விருதுகள் அல்ல; இரண்டு மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன. இலவசங்கள் என்று சொல்வதின் மூலமாக இந்த விருதுகளை அவர்கள் இழிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆனால், இலவசம் ஒரு ஏழைக்கு கிடைத்தால், பசியோடு இருப்பவனுக்கு கிடைத்தால், இல்லாதவனுக்கு கிடைத்தால் என்ன மகிழ்ச்சி அடைவானோ, அந்த மகிழ்ச்சியை இந்த விருதுகளைப் பெறுகிறவர்கள் அடைவதை விட, இந்த விருதுகளை வழங்கிய நான் பெறுகிறேன் என்று நான் அவர்களுக்கெல்லாம் சொல்லிக்கொள்கிறேன்.

ஆறாவது முறை முதல்வரானால் 225 பேருக்கு விருது!

நான் அவர்களுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு 125 விருதுகள் தரப்பட்டிருக்கின்றன. அந்த பத்திரிகையின் கேலி, கிண்டலுக்கு பிறகு, நான் அறிவிக்கிறேன், நீங்கள் எல்லாம் அனுமதித்து, ஆறாவது முறை நான் பொறுப்புக்கு வந்தால், 125 அல்ல, 225 விருதுகள் வழங்கப்படும்...", என்றார்.

இளையராஜா:

விருது பெற்றவர்கள் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன், இசையமைப்பாளர் இளையராஜா, பத்மா சுப்ரமணியம் ஆகியோர் ஏற்புரை ஆற்றினார்கள்.

குஷ்பு கண்டனம்:

நடிகை குஷ்பு வாழ்த்தி பேசும்போது, கலைமாமணி விருது பெற்றவர்கள் அரங்கை விட்டு வெளியேறிதற்காக கண்டனம் தெரிவித்தார். இவ்வளவு பெரிய தலைவர் மேடையில் இருக்கும்போதே, அரங்கில் இருப்பவர்கள் வெளியேறுவது மரியாதையாக இருக்காது என்று கூறினார்.

English summary
The annual Kalaimamani award ceremony was held at Chennai Valluvar Kottam yesterday. Chief Minister Karunanidhi distributed the awards in a colurful function. The Chief Minister told whether he got the power again in the elections, he would distribute more awards to the artists in forthcoming years. In Kalaimamani award ceremony, Karunanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X