For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணைய பூத் சிலிப்பை கொண்டும் வாக்களிக்கலாம்: பிரவீண் குமார்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை வைத்தும் ஓட்டுப் போடலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.

பணம் மற்றும் இலவசப் பொருட்கள் வாங்காமல் ஓட்டுப்போட வேண்டும் என்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக யூத் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் என்னும் தொண்டு நிறுவனம் பிரசார சி.டி. ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த சி.டி.யை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட, முதல் சி.டி.யை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பி.அமுதா பெற்றுக் கொண்டார்.

பின்னர் பிரவீண் குமார் நிருபர்களிடம் கூறியதாவது,

இந்த விழிப்புணர்வு ஆடியோ சி.டி. தேர்தலில் ஓட்டுப்போடுவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், சுதந்திரமாகவும், நியாயமாகவும் ஓட்டுப்போட வேண்டும் என்பதை வலியுறுத்தவும் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒருபுறம் தேர்தல் நேரத்தில் பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் போன்றவற்றை கொடுத்து வாக்காளர்களை கவர்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மறுபுறம் வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை, பணம் வாங்காமல் ஓட்டுப்போட வேண்டும் என்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. ஆயிரம், இரண்டாயிரம் என்று பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடக்கூடாது. அவ்வாறு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டால் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.விடம் சென்று எந்த உதவியையோ, கோரிக்கையையோ முன்வைக்க முடியாது.

பணம் கொடுத்தேன், வாக்களித்தீர்கள் கணக்கு சரியாகிவிட்டது. இனி அடுத்த தேர்தலில் பார்ப்போம் என்று கூறிவிடுவார்கள். எனவே, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'எழுவோம் வா' என்ற தலைப்பில் பாடல் சி.டி. வெளியிட்டுள்ள யூத் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பை பாராட்டுகிறேன்.

இதுபோல தேர்தல் ஆணையமும் நடிகர்கள், பிரபலங்கள் போன்றவர்களை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பிரசார சி.டி.யை தயாரித்துள்ளது. ஓரிரு நாளில் அந்த சி.டி.வெளியிடப்படும். வானொலி, டி.வி., சினிமா, வீடியோ வேன் மூலமும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. வாகன சோதனையில் ரூ.20 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாகன சோதனையின்போது பணம் எடுத்து சென்ற வியாபாரிகள் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, அதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. வாகன சோதனையின்போது வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்பை அரசியல் கட்சியினர் மட்டுமே வழங்கி வந்தனர்.

அப்போது முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்காளர் புகைப்படத்துடன்கூடிய பூத் சிலிப்பை தேர்தல் ஆணையமே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்பை கொண்டு ஓட்டுப் போடலாம். அவ்வாறு பூத் சிலிப்பை வைத்து ஓட்டுப்போடும்போது, வேறு எந்த மாற்று ஆவணங்களும் தேவையில்லை. வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்களும் இந்த பூத் சிலிப்பை பயன்படுத்தி ஓட்டுப்போடலாம்.

தேர்தல் பிரசாரத்திற்கு கட்சித்தலைவர்கள் போகும் போது அவர்களின் வாகனத்திற்கு பின்னால் அதிகபட்சம் 10 வாகனங்கள்தான் செல்ல வேண்டும். அவை தவிர பாதுகாப்பு வாகனங்களும் உடன் செல்லலாம். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இதுவரை துணை ராணுவத்தினர் 5 ஆயிரம் தமிழகம் வந்துள்ளனர். மேலும், 15 ஆயிரம் போலீசார் (150 கம்பெனி) ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு வருகின்றனர்.

சுயஉதவி குழுக்களுக்கு பணப்பரிவர்த்தனையை மாவட்ட கலெக்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இரண்டு தொகுதிகளுக்கு ஒரு பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வரும் 26-ம் தேதிக்கு பிறகு வருவார்கள். வேட்பாளர்களின் செலவுக் கணக்கை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டு உள்ள 58 செலவு பார்வையாளர்களில் 3 பேர் தவிர 55 பேர் வந்துவிட்டனர். வாக்குப்பதிவு நாளன்று பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு அதிகாரிகள் நுண் பார்வையாளர்களாக பணியாற்றுவார்கள்.

தமிழகம் முழுவதும் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவிற்காக 65 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 95 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயாராக உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 விதமான சோதனைக்கு உட்படுத்தப்படும். முதல்கட்டமாக ஒட்டுமொத்தமாக சோதிக்கப்படும். பிறகு வேட்பாளர்கள் பட்டியல் இறுதியான பிறகு வேட்பாளர்களின் பெயர்களும், சின்னங்களும் பொருத்தப்பட்டு சரிபார்க்கப்படும்.

மூன்றாவது கட்டமாக அந்தந்த வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டு வாக்குப்பதிவிற்கு தயாராக இருக்கிறதா என்று சோதிக்கப்படும். தற்போது முதல் கட்ட சோதனை முடிவடைந்துள்ளது என்றார்.

பேட்டியின்போது, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பி.அமுதா உடனிருந்தார்.

English summary
Tamil Nadu chief electoral officer Praveen Kumar released an audio CD to create awareness among the voters. Later he told that voters can use the booth slip with voter's photo as an id proof to vote. Unlike other election, EC is issuing the booth slips.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X