For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணைய அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டாரா ஜெ? - கருணாநிதி கேள்வி

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை கையிலெடுத்துக் கொண்டாரா ஜெயலலிதா, என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

'அவாள்' ஆதிக்க ஏடுகள்...

கேள்வி: 21-4-2011 தேதிய "தினமணி'' நாளேட்டிலும், "இந்தியன் எக்ஸ்பிரஸ்'' நாளேட்டிலும் முதல் பக்கத்தில் ஐ.ஐ.டி. நிலத்தை டாடாவுக்கு தாரைவார்த்து விட்டதைப் போல கொட்டை எழுத்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டிருக்கிறதே?

பதில்: இந்த இரண்டு ஏடுகளுமே தமிழகத்திலே நீண்ட நாட்களாக நடைபெற்று வருபவை. "அவாள்'' ஆதிக்கத்தில் உள்ளவை. அவர்கள் குறிப்பிட்டுள்ள செய்தி கடந்த ஆண்டே 11-5-2010 அன்று சட்டப் பேரவையில் விரிவாக கூறப்பட்டு, அதற்காக அரசாங்கத்தின் சார்பில் பதிலும் கூறப்பட்டாகி விட்டது.

ஆனால் ஓராண்டு காலத்திற்கு பிறகு வேண்டுமென்றே இந்த அரசாங்கத்தை எப்படியாவது குறை கூற வேண்டு மென்பதற்காக அதே செய்தியை அந்த இரண்டு ஏடுகளும் மீண்டும் வெளியிட்டுள்ளன.

ஒரு செய்தியில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளாமலே வேண்டுமென்றே குறைகூறும் இந்தப் போக்கிற்கு பெயர்தான் பத்திரிகை தர்மம் போலும்! அரசுக்கு எப்படியாவது களங்கம் உண்டாக்க முடியாதா என்ற எண்ணத்தோடு அந்த ஏடுகள் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்த போதிலும், அதனைப் படிக்கும் மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சட்டப் பேரவையில் இந்த புகாருக்கு 11-5-2010 அன்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதிலை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

அது வருமாறு: "2007-2008-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தொழில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையினுடைய மானியக் கோரிக்கையின்போது தரமணியில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல்-3) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் குறித்து டிட்கோ நிறுவனம் அரசுக்கு முன்மொழிவினை அனுப்பியது. அதன் அடிப்படையில், தரமணியில் கானகம் மற்றும் திருவான்மியூர் கிராமங்களில் இருக்கக்கூடிய 25.27 ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும், இத்திட்டத்தினை டிட்கோ நிறுவனம் மற்றும் தனியார் முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியாக செயல்படுத்தவும் அரசு ஒப்புதல் அளித்தது.

ஒப்பந்த முறையிலேயே டாடா நிறுவனம் வந்தது...

தனியார் முதலீட்டாளர் என்றதும், தன்னிச்சையாக இந்த அரசு டாடா நிறுவனத்தை தேர்ந்தெடுத்து விடவில்லை. தனியார் முதலீட்டாளரை, டிட்கோ நிறுவனம் ஒளிவு மறைவற்ற திறந்தமுறையிலான டெண்டர் அடிப்படையிலேதான் தேர்ந்தெடுத்தது. 14-5-2007 அன்று முக்கிய நாளேடுகளில் டெண்டர் கோரி விளம்பரம் செய்யப்பட்டது.

முதற்கட்டமாக தகுதியை நிரூபிக்கும் அழைப்பில், 17 நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளிகளுக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு, அவற்றில் 15 நிறுவனங்கள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்திருக்கின்றன. இவைகளில் 7 நிறுவனங்கள் தகுதி வாய்ந்தவைகளாகக் கண்டறியப்பட்டன.

நிலத்தின் விலை, வழிகாட்டி மதிப்பீடு அல்லது சந்தை மதிப்பீடு இவற்றில் எது அதிகமோ, அதை குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்து, அதன் அடிப்படையிலே விலைப் புள்ளி கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வழிகாட்டி மதிப்பீடான சதுர அடி ரூ.12 ஆயிரம் என்பது, அப்போதைய சந்தை மதிப்பான சதுர அடி ரூ.3,520 என்பதைவிட அதிகமாக இருந்ததால், சதுர அடி 12 ஆயிரம் ரூபாய் என்பதை குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்து முதற்கட்டத்தில் தகுதியின் அடிப்படையிலே தேர்வு செய்யப்பெற்ற 7 நிறுவனங்களிடம் விலைப் புள்ளிகள் கோரப்பட்டன.

அந்த 7 நிறுவனங்களில் டாடா ரியாலிட்டி மற்றும் இன்பிராஸ்டச்சர் நிறுவனம் மட்டுமே சதுர அடிக்கு 12 ஆயிரத்து 50 ரூபாய் என விலைப்புள்ளியினைச் சமர்ப்பித்திருந்தது.

இது அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையைவிட அதிகமாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, டாடா ரியாலிட்டி மற்றும் இன்பிராஸ்டச்சர் நிறுவனத்தின் தலைமையின்கீழ் அமைந்த குழுமம் இத்திட்டத்தின் கூட்டு முயற்சி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே...

சில நாட்களுக்கு முன்பு இந்த அரசு டாடா நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டதைப் போலவும், அதிலே ஏதோ தவறுகள் நடைபெற்று விட்டதைப் போலவும் அதற்காக ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் போடப்பட்டது 2008-ம் ஆண்டு. ஆம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. அந்த விவரத்தையும் தெரிவிக்கிறேன்.

இதுகுறித்து, கூட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் டிட்கோ நிறுவனம், முதல்வர் முன்னிலையில் 28-4-2008 அன்று கையெழுத்திட்டது. இந்த நிறுவனத்திடம் இருந்து ஆயிரத்து 412 கோடி ரூபாய் குத்தகை தொகையாக அரசால் பெறப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு மேற்கண்ட நிலம் குத்தகை அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் 40 லட்சம் சதுர அடி பரப்புள்ள தகவல் தொழில்நுட்ப கட்டிடம் ஆயிரத்து 500 பேர் அமரும் வகையில் பன்னாட்டு கூட்ட அரங்கம் மற்றும் எல்லா வசதிகளுடன் கூடிய 275 தங்கும் இல்லங்கள் ஆகியவை 2 ஆயிரத்து 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கத் திட்டமிடப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

20 ஆயிரம் பேருக்கு வேலை

இந்த திட்டம் முடிவடைகின்ற நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலையும் உருவாகும். முதற்கட்டமாக 12 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி அளவில் கட்டடங்கள் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுத் திட்டமும் 2012 மே மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரமணி சிறப்புப் பொருளாதார மண்டலம்...

இதைப்போலவே, சென்னை தரமணி பகுதியில் 26.64 ஏக்கர் பரப்பளவில் மற்றொரு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக திறந்த மற்றும் வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி முறையில் டி.எல்.எப். நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தினர் சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்கு இந்த நிலத்திற்காக அரசுக்கு செலுத்தியபோதிலும், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதமாவதால் அந்த இடத்தை திரும்ப கொடுத்துவிட்டு, அரசுக்குச் செலுத்திய தொகையை திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதிலே, ஏதோ தவறு நடந்துவிட்டது, இதனை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்று இப்போது ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்தவர்களின் ஆட்சியிலே நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

விப்ரோ, சத்யமுக்கு டெண்டரே இல்லாமல் நிலம் கொடுத்த அதிமுக அரசு!

அ.தி.மு.க. ஆட்சியில் 26-5-2005 நாளிடப்பட்ட அரசாணையின்படி 80 ஏக்கர் நிலம் விப்ரோ நிறுவனத்துக்கும், 50 ஏக்கர் நிலம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கும், 20-7-2005 நாளிடப்பட்ட அரசாணைப்படி 50 ஏக்கர் நிலம் எச்.சி.எல். நிறுவனத்திற்கும் எந்த விதமான டெண்டரும் இல்லாமல், வெறும் அரசாணையின் மூலமாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவூட்டுகிறேன்.

அதைப்போலவே, 1-3-2006 நாளிடப்பட்ட அரசாணையின்படி அதாவது சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்திற்கு 20 ஏக்கர் நிலமும், மெகா சாப்ட்வேர் நிறுவனத்திற்கு 25 ஏக்கர் நிலமும், பெஞ்ச் மார்க் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு 25 ஏக்கர் நிலமும், புரோடன் வெப் நிறுவனத்திற்கு 3 ஏக்கர் நிலமும், அட்வான்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு 50 ஏக்கர் நிலமும், ஆக மொத்தம் 123 ஏக்கர் நிலங்கள் எந்தவிதமான டெண்டரும் இல்லாமல், அ.தி.மு.க. ஆட்சியிலே அரசாணை மூலமாகவே இந்த 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

சிறுசேரி விவகாரம்....

சென்னைக்கு அருகே சிறுசேரியில், தமிழக அரசின் "சிப்காட்'' நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொழில் நுட்ப பூங்காவில் நகரியம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்று முடிவெடுத்து, அந்த முடிவை நிறைவேற்றுவதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த லீ கிம் தா ஹோல்டிங் என்கிற நிறுவனத்தோடு 16-9-2003 அன்று அ.தி.மு.க. அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது.

அந்த ஒப்பந்தத்தின்படி, 104 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில், நகரியத்தை உருவாக்கிட வேண்டுமென்றும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் செலுத்த வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த நகரியம் ஏற்படுத்துவது பற்றியோ அல்லது இந்த இடத்தை அந்த தனியாருக்கு ஒப்படைப்பது பற்றியோ எந்தவிதமான டெண்டரும் அ.தி.மு.க. ஆட்சியிலே கோரப்படவில்லை.

கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் எவ்வாறு டெண்டர் இல்லாமல், தன்னிச்சையான அரசாணை மூலமாகவே விரும்பிய நிறுவனங்களுக்கெல்லாம் நிலங்கள் வழங்கப்பட்டன என்பதற்கும், தற்போது டெண்டர் கோரி அதிலே அதிகத்தொகை கேட்டவர்களுக்கு முறைப்படி நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கும் இடையே இருக்கக்கூடிய வேறுபாட்டை இதிலிருந்தே நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்பதை மாத்திரம் எடுத்துச்சொல்லி அமைகிறேன்."

இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே பதிலுரை வழங்கியிருக்கிறார்.

பொய்ச் செய்திகள்...

ஆனால் அதை அப்படியே மறைத்து விட்டு ஏதோ புது செய்தியைப்போல தினமணி நாளிதழ் இதனை வெளியிட்டுள்ளது. இப்படி அடிக்கடி பொய்ச் செய்திகளை வெளியிட்டால்தான், அதுவும் தி.மு.கழக அரசைத் தாக்குகின்ற வகையில் வெளியிட்டால்தான் "தினமணி''யின் அரிப்பு அடங்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். "தினமணி''க்கு பொருந்தும் இந்த உதாரணம் "எக்ஸ்பிரஸ்''க்கும் பொருந்தும் அல்லவா?.

சட்டம் ஒழுங்கு சரியில்லையா?

கேள்வி: அறிக்கை அரசி ஜெயலலிதா ஓய்வெடுக்க கொடநாடு சென்றுள்ள நேரத்திலும் தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், அதைத்தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு நீண்ட பட்டியலை கொடுத்துள்ளாரே?

பதில்: தமிழ்நாடு காவல் துறையினர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி தொடர்ந்து அமைதியை நிலைநாட்டி வருகின்றனர்.

குற்ற நடவடிக்கைகள் என்பது எந்த ஆட்சிக்காலத்திலும் நடைபெறக்கூடிய ஒன்று தான். தமிழக காவல்துறையினர், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, கொலை, கொள்ளை மற்றும் சமுதாய குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தருவதுடன், அவர்களை தடுப்புக்காவலிலும் வைத்து வருகிறார்கள்.

காவல்துறையினர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிக் கும்பல்களை பலமுறை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும், அவர்கள் சட்டங்களில் உள்ள சில சந்து பொந்துகளை பயன்படுத்தி நீதிமன்றங்களில் வாய்தா வாங்கி, வழக்குகளை தாமதப்படுத்தி எப்படியோ தப்பித்துக் கொள்கின்றனர்.

ஆனால் பலரை சில நாட்கள் ஏமாற்றலாம், சிலரை பல நாட்கள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. முன் விரோதம் மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக நடைபெற்ற பின்வரும் ஒரு சில சம்பவங்களை வைத்து, சட்டம் ஒழுங்கு பராமரிப்பை ஒட்டுமொத்தமாக குறை கூறுவது என்பது ஊரை ஏமாற்ற முயலும் காரியமாகும்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் சரகம், வில்லுக்குறியை சேர்ந்த நாகராஜன் என்பவரை 18.04.2011 அன்று, அடையாளம் தெரியாத நபர்கள், திங்கள் நகர் சந்தைக்கு செல்லும் வழியில் கொலை செய்துள்ளனர். நாகராஜன், இரணியல் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு கொண்ட போக்கிரியாவார்.

ஜெயலலிதா மாய்மாலம்

இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 30 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் மூன்று முறை குண்டர் தடுப்பு சட்டத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவராவார். முன்விரோதம் காரணமாக இவரது எதிரிகள், இவரை கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து இரணியல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, எதிரிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் இதை அப்படியே திரித்து ஜெயலலிதா தனது அறிக்கையில் தி.மு.க. வினர் கொலை செய்ததாக சொல்லியிருப்பது மாய்மாலமாகும்.

மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் காவல் நிலைய சரகம், உச்சப்பரம்பு மேட்டில், 18.04.2011 அன்று, சந்துரு என்ற மணிகண்ட வேலன், தனது தேநீர் கடை அருகில், குடிபோதையில் தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்த சிலரை, தள்ளிச் சென்று பேசுமாறு கூறிய போது ஏற்பட்ட தகராறில், மேற்படி நபர்கள் சந்துரு மற்றும் விஸ்வநாதன் என்பவரையும் கொலை செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் ஏழு பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வழக்கில் திமுகவைச் சேர்ந்த யாரும் சம்பந்தப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா இதிலும் தி.மு.க. மீது பழி சுமத்த முயலுகிறார்.

மதுரையில், 14.04.2011 அன்று, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய சரகம், ஹீரா நகரில் பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, பாண்டிக்கண்ணன் என்பவரும், 16.04.2011 அன்று, கீரைத்துறையில் கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் சித்திரைச்செல்வி என்பவரும், 17.04.2011 அன்று, செல்லூர் காவல் நிலைய சரகம், அருள்தாஸ்புரத்தில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட சண்டை தொடர்பாக, சரவணன் என்ற சிறுவனும் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்குகளில், 11 எதிரிகள் கைது செய்யப்பட்டனர். இரண்டு எதிரிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் ஜெயலலிதா தனது அறிக்கையில் மதுரையில் கடந்த 15 நாட்களில் ஏழு பேர் கொலைச் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பது எண்ணிக்கை தெரியாத குற்றமாகும்.

சென்னை, வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்த இளையராஜா என்ற மாணவரின் வருகைப்பதிவு நாட்கள் குறைவாக இருந்த காரணத்தினால், கல்லூரி நிர்வாகம் அவரை தேர்வு எழுத அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, 11.04.2011 அன்று, அம்மாணவர் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, அக்கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றுக்கோரி 18.04.2011 அன்று, சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்தைத் தடை செய்த போது, காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற நேரத்தில், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உயிர் மற்றும் உடைமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கலைந்து போக செய்துள்ளனர்.

ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு தற்போது அப்பகுதியில் எந்தவிதமான பதற்றமும் இல்லை என்பதோடு, அமைதி நிலவிவருகிறது. 18.04.2011

விஜய் வீட்டு மீது கல்லெறிந்த விவகாரம்

அன்று இரவு, சென்னை, சாலிகிராமத்தில் திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் அந்தோணி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வரும், நடிகர் விஜய்க்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் ஒரு சிலர் கல்லெறிந்ததில், அவ்வீட்டின் ஜன்னல் கண்ணாடி ஒன்று உடைந்துள்ளது.

இது குறித்து, விஜய் அந்தோணி கொடுத்த புகாரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், குடிபோதையில் அவ்வழியில் சென்ற யாரோ ஒருவர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

காவல் துறையினர் அந்நபரை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ரவுடிகள் யாரும் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவரவில்லை. ஆனால் ஜெயலலிதா இதற்கும் காது மூக்கு வைத்து கதை சொல்ல முற்பட்டுள்ளார்.

தேத்ல் ஆணைய அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டாரா ஜெ?

இது போலவே தான் அவர் குறிப்பிட்டுள்ள பல சம்பவங்களும் ஆகும். ஆற்றிலே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போன ஒருவன் "உலகம் போச்சு - உலகம் போச்சு'' என்று குரல் கொடுக்க - அவனைக் காப்பாற்றி - "என்னப்பா உலகம் போச்சு என்று குரல் கொடுத்தாயே'' என்று கேட்டபோது - "நீங்கள் என்னை காப்பாற்றா விட்டால் என்னை பொறுத்தவரையில் உலகம் போயிருக்கும் அல்லவா, அதனால் தான் அப்படி கத்தினேன்''என்றானாம்.

அதைப்போல அம்மையாருக்கும் வேறு வழி எதுவும் தெரியாததால் ஏதேதோ குரல் கொடுத்துப்பார்க்கிறார். இவர் வெளியிடும் அறிக்கைகளை பார்க்கும்போது ஆணையத்தின் அதிகாரத்தை அம்மையாரே எடுத்துக் கொண்டாரா என்ற ஐயப்பாடுதான் தோன்றுகிறது.

-இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Chief Minister Karunanidhi questioned whether ADMK general secretary Jayalalitha took over the powers of Election Commission. In his recent statement the chief minister explained how the state government strained to keep the law and order properly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X