For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்கள் மீது பற்று இருப்பதை இந்தியா நிரூபிக்க வேண்டிய நேரம் இது! - விஜயகாந்த்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள அதிபர் ராஜபக்சேயையும், அவரது ராணுவமும் போர் குற்றம் புரிந்தவர்களாக வழக்கு தொடுக்க வேண்டி ஐ.நா.சபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்போதே ஆதரவளிக்க வேண்டும். இதன் மூலம் தமிழர் மீது தனக்கும் பற்றுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும், என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆயுதம் தாங்காத சாதாரண பொது மக்கள் மீது சிங்கள ராணுவம் வெடிகுண்டுகள் வீசிக் கொன்றது எனவும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள் போன்ற பொதுமக்கள் கூடியுள்ள இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன எனவும், காயமுற்றோருக்கு மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டன என்றும், உள்நாட்டில் அகதிகளாக உள்ள தமிழர்களும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற சந்தேகத்திற்குரியவர்களும் கொடுமைப்படுத்தப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன எனவும், ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தந்துள்ளது.

இலங்கை அரசு எவ்வளவோ முயற்சித்தும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க முடியவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன் அவர்கள் இந்த போர்க் குற்றம் பற்றி சர்வதேச குற்ற விசாரணை மன்றத்திற்கு உறுப்பு நாடுகள் அல்லது ஐ.நா. பாதுகாப்பு குழுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழினப்படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

நிரூபிக்க வேண்டிய தருணம்

சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் மகிந்தா ராஜபக்சே போர்க் குற்றவாளி என்றும் ஐ.நா. மன்றமே அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சிங்கள அரசின் இனவெறி அதிபர் ராஜபக்சேயையும், அதன் ராணுவத்தையும் போர்க் குற்றம் புரிந்தவர்களாக வழக்குத் தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவளித்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை இந்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்தியாவிலேயே அதன் ஒரு பகுதியாகி உள்ள தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.

இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகாரிகளிடம் அனுமதி வாங்குங்க! - மே தின அறிக்கை

மே தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:

மே தின நன்னாளை தே.மு.தி.க.வும், அதனைச் சார்ந்த தொழிற்சங்கப் பேரவையும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு தேர்தல் காலம் ஆதலால், மே தின விழாவை கொண்டாட நமது இயக்கத் தோழர்கள் அரசாங்க அதிகாரிகளை அணுகி முறையான அனுமதி பெற்று கொண்டாட வேண்டும்.

நமது தோழர்கள் எந்தெந்த பகுதியில் எத்தகைய விழாக்களை எடுக்க வேண்டுமோ, அதற்கான அனுமதியை முன்கூட்டியே முறையாக அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற்று நடத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

மே மாதம் முதல் தேதியில் இருந்து மே மாதம் 8-ம் தேதி வரை மே தின விழாவை கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

English summary
DMDK president actor Vijayakanth urged Union government to show their care and affection on Tamils at least now and help to bring Rajapaksa to International court for his war crimes against Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X