For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு 'வரியில்லாத பட்ஜெட்' என்பதா? - கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை முடிந்தவரை சுமத்திவிட்டு, தற்போது 'வரியில்லாத பட்ஜெட்' என்று புகழ்ந்து கொள்வது சரிதானா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா அரசின் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேரவைக்கு அளித்த நிதிநிலை அறிக்கையில் இரண்டாவது பத்தியிலேயே "மாநில அரசு ரூ.1 லட்சம் கோடிக்குக் கூடுதலான கடன் சுமையில் மூழ்கியுள்ளது'' என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து, மாநில அரசின் கடன் சுமையை குறைப்பதற்கு பல்வேறு வகையான திட்டங்களையும், யோசனைகளையும் நிதிநிலை அறிக்கையிலே தெரிவிப்பார் என்று எண்ணி அதை முழுவதும் படித்த போது- இறுதியாக இந்த 2011-2012-ம் ஆண்டுக்கு அரசு பெறப்போகும் கடன் ரூ.17 ஆயிரத்து 261 கோடி என்றிருப்பதைக் கண்டு, நான் பெரும் ஏமாற்றமடைந்தேன்.

மாநில அரசின் கடன் சுமையைப் பற்றி ஏதோ தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது, கடன்களை வாங்கி அவற்றையெல்லாம், ஜெயலலிதாவின் தலையில் வைத்து விட்டுப் போய்விட்டதைப் போல ஆதங்கப்பட்டு அடிக்கடி சிலர் பேசி வந்த நிலையில், அவர்களும் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். இந்த ஆட்சியினர் மீது 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தி.மு.க. அரசு ஏற்றி வைத்து விட்டதாகத் திரும்பத் திரும்ப சொல்வது தவறு.

முடிந்தவரை வரிகளை சுமத்திவிட்டார்களே...

31.3.2006 அன்றே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பிறகு, தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு ரூ.57 ஆயிரத்து 457 கோடியாகும். இது ஜெயலலிதா, தி.மு.க. அரசின் மீது ஏற்றி வைத்துவிட்டுச் சென்ற கடன் சுமை.

அந்தக் கடன் சுமையை குறைக்க தி.மு.க. அரசு எந்த வரியையும் விதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்திற்குள்ளாகவே சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு - நிதிநிலை அறிக்கையை அவையிலே படிப்பதற்கு முன்பாகவே அவசரம் அவசரமாக - வரிகளை சுமத்தியிருக்கிறார். அவ்வாறு நிதிநிலை அறிக்கையைப் படிப்பதற்கு முன்பு வரிகளை சுமத்திவிட்டு, தற்போது 'வரிகளே இல்லாத பட்ஜெட்' என்று புகழ்ந்து கொள்வதிலே என்ன பொருள் இருக்க முடியும்?

தி.மு.க. அரசு இலவசத் திட்டங்களை அறிவித்த போதெல்லாம், மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கும் திட்டங்கள் என்று கேலியும், கிண்டலும் செய்த ஜெயலலிதா, தற்போதைய நிதி நிலை அறிக்கையிலே இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

இந்த இலவசத் திட்டங்களைத் தவிர, நிதி நிலை அறிக்கையிலே உள்ள மற்ற திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களாகவும், தி.மு.க. அரசின் திட்டங்களாகவும் உள்ளன.

திமுக அரசின் மின் திட்டங்கள்:

நிதிநிலை அறிக்கையில் பத்தி 6-ல் "மின் ஆளுகை முயற்சிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது'' என்றும், பத்தி 50-ல் "உலக அளவில் தமிழ்நாடு உற்பத்தி சார்ந்த தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக கருதப்படுகிறது'' என்றும், பத்தி 56-ல் "நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிலம் ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனம் 25 இடங்களில் 2,256 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது'' என்றும், தி.மு.க. அரசுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தி.மு.க. அரசு தொடங்கிய நதிநீர் இணைப்புத் திட்டம், பொதுவிநியோகச் சிறப்புத் திட்டம், திறன் வளர்ப்புத் திட்டம் போன்றவையும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 4,183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த மின்சார திட்டங்கள், அ.தி.மு.க. ஆட்சியினருக்குத்தான் பயனை அளிக்கப்போகின்றன என்பதே உண்மை.

நல வாரியங்களுக்கு மூடுவிழா:

நிதிநிலை அறிக்கையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்கள் திறம்பட செயல்படாத நிலையில் உள்ளதால் இந்த அரசு இவ்வாரியங்களை சீரமைத்து அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த வாரியங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியிலே தொடங்கப்பட்டன என்ற ஒரே காரணத்திற்காக அவைகளையெல்லாம் சீரமைத்து மேம்படுத்தப்போவதாக அறிவித்துவிட்டு, அவைகளுக்கும் மூடுவிழா நடத்தப் போகிறார்கள் என்பதுதான் நடக்கப்போகிறது.

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK president M. Karunanidhi on Thursday described the budget as a compilation of notes sent by every department and the announcements of the AIADMK government in the last three months. Recalling Ms Jayalalithaa's argument that the hike in stamp duty and registration fee and other taxes was inevitable as the DMK government had left a debt to the tune of Rs 1.1 lakh crore, Mr. Karunanidhi said despite her claim the debt in three months had been projected to increase by another Rs. 17,000 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X