For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன்னியர் சங்கம் போல தனி இயக்கம் தொடங்க வேல்முருகன் திட்டம்- ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

Google Oneindia Tamil News

கடலூர்: பாமகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் தனிக் கட்சி அல்லது தனி இயக்கம் தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விசுவாசமாக இருந்தவர் வேல்முருகன்.இதனால் இவருக்கு கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வரை வேகமாக ஓடி வந்தது. ஆனால் 2ம் நிலை தலைவர்கள் இவரது வளர்ச்சியைப் பார்த்து பொறுக்க முடியாமல் வேல்முருகனை சாய்க்க காலம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடலூரில் இவர் பேசிய பேச்சை காரணமாக வைத்து கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.

இதனால் கொதிப்படைந்த வேல்முருகனின் ஆதரவாளர்கள், கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்தனர். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு உள்ளிட்டோரின் படங்களையும் உடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று கடலூரில் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தைக்கூட்டி ஆலோசனை நடத்தினார் வேல்முருகன். இதில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாள்களிடம் வேல்முருகன் பேசுகையில்,

பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேரால் நான் தேர்ந்து எடுக்கப்பட்டு இணைப் பொதுச் செயலாளரானேன். கட்சியின் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு என்னை நீக்க அதிகாரம் இல்லை. பொதுக்குழுவைக் கூட்டித்தான் முடிவு எடுக்க வேண்டும். உயர்மட்டக் குழுவில் 14 பேர்தான் உண்மையான உறுப்பினர்கள். 10 பேர் போலியானவர்கள்.

நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன். கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசுவேன். அவர்களின் கருத்தை அறிந்த பின்னரே தனிக்கட்சியா, தனி இயக்கமா என்பதை முடிவு செய்வேன்.

நான் நீக்கம் செய்யப்பட்டற்கு கட்சித் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எனது தரப்பு வாதத்தை எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என் பின்னால் நிற்கும் இளைஞர் பட்டாளத்தை, தொண்டர்களை எந்த அரசியல் கட்சியிடமும் அடகு வைக்க மாட்டேன்.

பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவற்றை எல்லாம் நான் ஏற்கவில்லை. டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்.

இருப்பினும் தீய எண்ணம் கொண்ட சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை கட்சித் தலைமைக்கு தெரிவித்து வருகிறார்கள். கட்சிக்காக கடுமையாக உழைத்த பலர், பல காலக் கட்டங்களில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். கட்சியின் வளர்ச்சிக்காக நான் தெரிவித்த பல்வேறு ஆலோசனையையும், சுட்டிக் காட்டிய தவறுகளையும் எனக்கு எதிராகச் சிலர் திருப்பி விட்டனர் என்றார் அவர்.

English summary
Former PMK MLA Velmurugan may launch an outfit soon. He had a discussion with his supporters in Cuddalore yesterday. He is planning for an organization like Vanniar Sangam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X