For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டுக்களை மனதில் கொண்டு குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை அதிகரிக்கிறது அரசு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மின் வாரியம் பெரும் நஷ்டத்தில் மூழ்கிப் போயுள்ளதால் அதை மீட்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதேசமயம், குடிசைப் பகுதிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை அதிகரிக்கப் போவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவித்து வரும் நிலையில் குடிசைகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தின் அளவை கூடுதலாக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், சலுகைக்கான அனுமதி கேட்டு, மின் துறை விண்ணப்பித்துள்ளது.

ஒரு விளக்கும், இலவச டிவியும்

தமிழ்நாட்டில் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கினாலும், அரசின் சார்பில், இலவச மின்சாரப் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. "ஒரு விளக்கு' என்ற பெயரில், குடிசைகளுக்கு மட்டும், இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில், 40 வாட்ஸ் திறனுள்ள ஒரே ஒரு பல்பு மட்டும், குடிசைகளில் பயன்படுத்தலாம்.

கடந்த தி.மு.க., ஆட்சியில், இலவசமாக "டிவி' கொடுத்ததால், "டிவி'யை பயன்படுத்துவதற்காக, கூடுதலாக 70 வாட்ஸ் திறன் அனுமதி தரப்பட்டது.

'மிக்ஸி, கிரைண்டருக்காக எக்ஸ்ட்ரா பவர்'

தற்போது, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., அரசில், இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது. இவற்றையும், குடிசைவாசிகள் பயன்படுத்தும் வண்ணம், இலவச திட்டத்தின் சலுகையை அதிகரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மிக்சி, கிரைண்டர்,லேப்-டாப், இலவச மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் மற்றும் லேப்-டாப் ஆகியவற்றிற்கு, தலா 40 வாட்ஸ் திறன் என, கூடுதலாக 160 வாட்ஸ் வழங்கப்படும். இதனால், குடிசைகளில், 270 வாட்ஸ் திறன் மின் சாதனங்கள் பயன்படுத்த, சலுகை வழங்கப்படும்.

இலவசப் பொருட்களுக்காக கூடுதல் மின்சாரம் தர அரசு முடிவு செய்தாலும் கூட எதிர் வரும் லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றை மனதில் கொண்டே, கிராமப்புற ஓட்டுக்களை கருத்தில் கொண்டே குடிசைகளுக்கு வழங்கப்படும் மின்சார அளவை அதிகரிக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், சலுகைக்கான அனுமதி கேட்டு, மின் துறை விண்ணப்பித்துள்ளது. இலவச மின்சாரத்திற்கான தொகையை அரசு வழங்கினாலும், கட்டணத்தை மிகவும் குறைவாகவே கணக்கிட்டுத் தருகிறது. இதனால், மின் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.

இலவசத்தால் 24 கோடி நஷ்டம்

தமிழகத்தில், மொத்தம் 17.41 லட்சத்து 131 குடிசை இணைப்புகள் உள்ளன. இவற்றிற்கு, இலவச மின்சாரம் என்பதால், மீட்டர்களே கிடையாது. தோராயமாக ஆண்டுக்கு 120 ரூபாய் என, மின்வாரியம் கணக்கிட்டு, அதற்கு அரசிடம் நடப்பாண்டு மானியமாக, 20.89 கோடி ரூபாய் பெற்றுவருகிறது. இதன்மூலம், ஒரு குடிசைக்கு, மாதம் 10 ரூபாய் என கணக்கிடப்படுகிறது.

ஆனால், 110 வாட்ஸ் திறன் பத்துமணி நேரம் பயன்படுத்துவதாக கணக்கிட்டால், தினமும் 1.1 யூனிட் வீதம், மாதம் 33 யூனிட் செலவாகும். இவற்றிற்கு, வீடுகளுக்கான குறைந்த கட்டணமான யூனிட்டிற்கு, 65 பைசா கணக்கிடும் போது, மாதம் 21.45 ரூபாய் கணக்காகிறது. ஆண்டுக்கு, 257.40 ரூபாய் செலவாகிறது.

அரசின் சார்பில், பாதிக்கும் குறைவான தொகையாக, மாதம் 120 ரூபாய் மட்டும், வாரியத்திற்கு மானியமாக வழங்கப்படுகிறது. இந்த வகையில் மட்டும், குடிசை இணைப்புகளுக்கான இலவச மின்சாரத்தால், வாரியத்திற்கு மாதம் ஒரு குடிசை இணைப்பிற்கு, 137.40 ரூபாய் வீதம், 17.41 லட்சத்து 131 குடிசைகளுக்கான மின் வினியோக கட்டணம், 23.92 கோடி ரூபாய் நஷ்டமாகிறது.

இலவச மின்சாரத்தில் வணிகப்பயன்பாடு மற்றும் ஆடம்பரச் செலவுகளுக்கும் மின்சாரம் திருடப்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் மின் துறையினரின் நீண்ட காலமாக புகார் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரலில் புதிய மின்கட்டணம்

நஷ்டத்தை சமாளிக்க மின்கட்டணத்தை உயர்த்தியே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது. புதிய கட்டண மாற்றம்ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களிடம் கருத்து கேட்க முடிவு

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு, ஒரே விதமான கட்டண முறை அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மின் கட்டணம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விரைவில் விசாரணை நடத்தி, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும்.

இக்கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் நடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும். மின்கட்டணத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஓட்டுக்காக இலவச மின்சாரத்தின் அளவையும் அதிகரிக்க நினைக்கும் அரசின் முடிவு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
TN govt has decided to increase the sealing of free power to village huts. Keeping the rural votes in mind the ADMK govt has decided to increase the power limit to them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X