For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போபால் விஷவாயு இரவு- 27 ஆண்டுகளை கடந்த பின்னும் மாறாத வடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Bhopal Gas Tragedy
போபால்: போபால் விஷவாயு சம்பவம் நிகழ்ந்து 27 ஆண்டுகளை கடந்து விட்டது. இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை மக்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற நீதி கிடைக்கவில்லை. உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை.

விடியும் என்ற எண்ணத்தில்தான் உறங்கப் போனார்கள் போபால் நகர மக்கள். ஆனால் கண்ணுக்குத் தெரியாத காலனால் காவு வாங்கப்படுவோம் என்று நினைக்கவில்லை அவர்கள்.

விஷவாயு விபத்து

1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் நள்ளிரவு நேரம் போபால் நகரத்தை மீளாத்துயரத்தில் ஆழ்த்திய அந்த சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் துணை அமைப்பான யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தில் இருந்து வெளியான நச்சுத்தன்மையுடைய வாயுவான மெதில் ஐசோ சயனைட் வாயு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தது.

முதலில் கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலை மட்டுமே மக்களால் உணர முடிந்தது. என்னவென்பதை உணரும் முன்பே அந்த வாயு அரக்கன் தன் கொடூர கரங்களால் மக்களை கபாலிகரம் செய்து விட்டான். மக்கள் கூட்டம் நிறைந்திருந்த அந்த இடம் விடிவதற்குள் சுடுகாடாகிப் போனதுதான் மிச்சம்.

விபத்து நடந்தபின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் விஷவாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனடியாகக் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், 21 குழந்தைகள் குறையுடன் பிறந்ததாகவும், 27 குழந்தைகள் இறந்தே பிறந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த ஆலையானது, விபத்து ஏற்பட்ட பிறகு அரசால் மூடப்பட்டது.

26 ஆண்டுகள் கழித்து தண்டனை

இந்த விபத்தில் 25,000 பேர் இறந்தனர். லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சரி செய்ய முடியாத அளவிற்கு சுற்றுசூழல் நாசம் ஏற்பட்டது. உலகின் மிகப் மோசமான தொழிற்சாலை விபத்தென உலகமே அலறியது. ஆனால் அன்றைக்கு இந்தியாவை ஆண்டவர்களின் கண்களும், காதுகளும் மூடிக்கொண்டன. விபத்திற்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்க கோரியும், இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்பீடு கோரி பல வழக்குகள் தொடுக்கப்பட்டன.

நீதிமன்றங்கள் தங்களுக்கு விரைவில் நீதி வழங்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் ஏற்பட்டது. நீதித்துறை இவ்வழக்கை மிகவும் தாமதமாக நடத்தியது. இறுதியில் 178 சாட்சிகளுடன் 30,000 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கில் 26 ஆண்டுகள் காத்திருக்கும்படி செய்தார் நீதிபதி மோகன் திவாரி.

காலம் கடந்து 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவு பிறப்பித்தார். யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ஆண்டர்சன் குறித்து தீர்ப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.

லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு

மத்திய அரசு 2006 அக்டோபர் 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த உறுதிமொழி அறிக்கையில் மொத்தம் 5,58,125 பேர் விஷவாயு விபத்தின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 92.5% அதாவது 5,16,406 பேர் மிகவும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 38,478 பேர் (6.8%) தற்காலிக நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் வெறும் 0.7 சதவீதத்தினர், அதாவது 3,241 பேர் மட்டுமே முழு அளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவெனில் நுரையீரல் பாதிப்புகளும், குடல் பாதிப்புகளும் சிறு அளவிலான பாதிப்புகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதுதான். பாதிப்புகளின் அளவைக் குறைத்துக் கூறுமாறு மருத்துவர்களை மத்தியஅரசு கடுமையாக அழுத்தம் கொடுத்தாக, போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

மரணத்தின் மடியில் மக்கள்

விபத்து நடந்து பத்து ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற ஆய்வின் போது அந்த ஆலையில் 44,000 கிலோ நச்சு தாரும், 35,000 கிலோ அல்பா நெப்தாலுமர் என்ற ரசாயணமும் திறந்த வெளியில் டிரம்மிலும், கோனிப்பையிலும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் போட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 23,000 டன் வேதிப்பொருட்கள் தரையில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இன்றைக்கும் 18,000 டன் நச்சுக்கழிவுகள் அங்கிருக்கும் விஷகுளத்தின் அடியில் புதையுண்டுள்ளது. அத்தொழிற்சாலை தொடங்கி நாற்பது ஆண்டுகளாக அவை மழையால் பெரும்பகுதி மண்ணிலும், நிலத்தடி நீரிலும் கலந்து தொடர்ந்து இன்றும் மக்களுக்குக் கெடுதலை எற்படுத்தி வருகின்றது என்பது அச்சத்திற்குரிய விசயமாகும்.

மரணத்தின் மடியில் இருந்தாலும் இன்றைக்கும் நீதி கேட்டு போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர் மக்கள். ஆனால் வழக்கம் போல அரசாங்கமும்,ஆள்பவர்களும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாய் இருக்கின்றனர்.

English summary
With the 27th “anniversary” of the Bhopal Gas Tragedy coming up on 3 December, a new movement, the Rail Roko (Stop the trains) Andolan, is set to begin. Organised by the International Campaign for Justice in Bhopal, a coalition of people’s organisations, non-profit groups and individuals, activists and survivors plan to go to their closest railway tracks and stand in front of any train on the Delhi or Mumbai route.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X