இனமானப் பேராசிரியர் பல்லாண்டு வாழ்க: கி. வீரமணி வாழ்த்து
சென்னை: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் 90வது பிறந்தநாளையொட்டி திக தலைவர் கி. வீரமணி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இன்று (19ம் தேதி) நம் இனமானப் பேராசிரியர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்புமிகு க. அன்பழகனார் அவர்களது 90ம் ஆண்டு பிறந்த நாள் விழா.
காட்சிக்கெளியர், கருத்துக் கருவூலம், பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை எந்த மேடையிலும் முழங்கத் தவறாத முழுதாய்ந்த பாவலர், தனக்கென சொற்பொழிவு மேடைகளில் தனி பாணியை வகுத்துக் கொண்டு தர்க்கரீதியான வாதங்களை, கேட்போரை ஏற்போராக மாற்றும் சக்தி வாய்ந்த சொலல் வல்லர். மனதிற்பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத மாண்பாளர், எக்காலத்திலும் இரட்டை வேடம் தரிக்காதவர்!
அறிஞர் அண்ணாவின் பாசத்திற்குரிய தம்பியாக, தத்துவ விளக்க கர்த்தாவாகத் திகழ்பவர். கருணாநிதியின் தலைமைக்கு என்றும் மாறாத விசுவாசம் காட்டும் மூத்த முதிர்ச்சியாளர். அவ்விருவரும் வீணையும் நாதமும் போல, சோதனை மிக்க ஆண்டுகளிலும் திராவிடர் அரசியல் இயக்கமாம் திமுகவை நடத்தி வரும் நிலையில், அகவை 90 காணும் அருமைப் பேராசிரியர் அவர்கள் எங்கெங்கும் சென்று எழுச்சியுரையாற்றி திராவிடர் இயக்கத்தின் திறன் மிக்க லட்சியக் கவசமாய்த் திகழ்கிறார்கள்.
அவர்கள் நல்ல உடல் நலத்தோடு, பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து, தாழ்ந்த தமிழகத்தை, திராவிடத்தின் மறுமலர்ச்சியை மீண்டும் உருவாக்கி புதிய வெற்றிகளை இயக்கத்திற்கு, கொள்கை லட்சியங்களுக்குத் தருவார்களாக! அடக்கமும், ஆழமும் அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க வேண்டிய கவினுறு பாடங்களாகும்!
வாழ்க இனமானப் பேராசிரியர்! வளர்க அவர் போன்றவர்களால் பாதுகாக்கப்படும் திராவிடர் இயக்கம்!! என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications