For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தானே புயலை சந்திக்க சென்னை, புதுவை, கடலூர் நகரங்கள் தயார்

Google Oneindia Tamil News

சென்னை: தானே புயல் கரையைக் கடக்கும்போது ஏற்படும் பாதிப்புகளை சந்திக்கும் வகையில் சென்னை முதல் கடலூர் வரை அத்தனை நகரங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள், அதிரடி மீட்புப் படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தானே புயல் நாளை காலை அல்லது பிற்பகலில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயலின் நகர்வு குறித்தும் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து அது மக்களுக்குத் தகவல் தெரிவித்து வருகிறது. இதையடுத்து மாநில அரசும் உஷார் நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கி விட்டது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் உஷார் நிலையில் இருக்குமாறு அது கேட்டுக் கொண்டிருந்தது. தற்போது புயல் கடலூர் மற்றும் சென்னை இடையே கரையைக் கடக்கலாம் என்று தெரிவதால் இந்தப் பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னை...

தானே புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 24 மணிநேரமும் ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு உதவி பொறியாளர் கொண்ட குழு சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம் தேங்கினால் தண்ணீரை இரைத்து வெளியேற்றுவதற்காக இயந்திரங்களும், சாலைகளில் மரங்கள் சாய்ந்தால் உடனடியாக அப்புறப்படுத்த மர அறுவை இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பேசின் பிரிட்ஜ், சிந்தாதிரிப்பேட்டை, கோபாலபுரம், பெரம்பூர் பேரக் ரோடு ஆகிய 4 நிவாரண மையங்களும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடலூர், நாகையிலும் உஷார் நிலை

இதேபோல கடலூர், நாகையிலும் உஷார் நிலையில் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளனர். கடலூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர். தேவனாம்பட்டினம், சில்வர்பீச் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

கடல் கொந்தளிப்பு

புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பட்டிணப்பாக்கம், மெரினா, எண்ணூர், உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றமடைந்து தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

அதேபோல, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. 25 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரத்தில் கடல் 200 அடி வரை கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர். இதேபோல கன்னியாகுமரியிலும் கடல் உள்வாங்கியது.

புதுச்சேரியில் 10ம் எண் புயல் கூண்டு

இதற்கிடையே, புதுச்சேரியில் 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் அங்கு பீதி அதிகரித்துள்ளது. காரணம், புயல் எந்தப் பகுதியைத் தாக்குமோ அங்குதான் 10ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். எனவே புதுவையை புயல்தாக்குமா என்ற அச்சம் அங்குள்ள மக்களிடம் எழுந்துள்ளது.

எண்ணூர் , கடலூர், நாகை துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu officials are ready to face Cyclone Thane. Various precautionary activities have been taken in Chennai, Cuddalore, Nagai dts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X