பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலி டிக்கெட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பணியாற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கடந்த 13ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பலரும் ஆம்னி பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கு சக்தி டிராவல்ஸ் என்ற பெயரில் ஒரு நபர் பஸ் டிக்கெட்களை விற்றுக் கொண்டிருந்தார். அவரை நாடி வந்த பயணிகளுக்கு போலி பயண சீட்டுகளை விற்றார். 40க்கும் மேற்பட்டோர் அவரிடம் டிக்கெட்களை வாங்கிக் கொண்டு பஸ்ஸுக்காக காத்திருந்தனர். ஆனால் இரவு 10 மணியாகியும் பஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் டிக்கெட் கொடுத்தவரிடம் தகராறு செய்தனர். அவர் டிராவல்ஸ் உரிமையாளர் வருவார் என்று கூறி மழுப்பினார்.
இதன்பிறகு பொறுமை இழந்த பயணிகள் கோயம்பேடு போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் டிக்கெட் கொடுத்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசீலன்(32) என்பதும், சக்தி டிராவல்ஸ் என்ற பெயரில் பஸ் இயக்கப்படுவதில்லை என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலி பஸ் டிக்கெட்களை விற்ற ஜெயசீலனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் பிரான்சிஸ் அருள் என்பவரை தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இடையே இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!