For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் பிரச்சனை: காலம் கனிந்து வருவதை இலங்கை பயன்படுத்தி கொள்ள வேண்டும்: எஸ்.எம்.கிருஷ்ணா

By Chakra
Google Oneindia Tamil News

கொழும்பு: 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அளித்த பொங்கல் விருந்தில் கலந்து கொண்டார்.

இலங்கை அதிபர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இலங்கை பிரதமர் டி.எம்.ஜெயரத்ன, வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எஸ்.எம். கிருஷ்ணா 4 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய அவரை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் வரவேற்றார். அதையடுத்து அவர்கள் முக்கிய பிரமுகர்கள் அறைக்குச் சென்று பேசினர்.

பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தம் மற்றும் பிரதிநிதிகள், முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கிருஷ்ணாவுடன் தாங்கள் மேற்கொண்ட சந்திப்பு பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது மற்றும் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக இலங்கை அரசுடன் கடந்த ஒரு வருட காலமாக பல முறை பேச்சு நடத்தினாலும், அதில் முன்னேற்றம் ஏதும் வரவில்லை என்பதை கிருஷ்ணாவிடம் விளக்கினோம்.

இந்தியாவிடம் பல முறை வாக்குறுதிகளை அளித்த்திருந்தும், இழுத்தடிப்பு செய்யும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டினோம். அதிபர் ராஜபக்சேவிடம் அதிகாரப் பகிர்வுக்கு இணங்கும் எண்ணம் இல்லை. எனவே இந்தியா, இலங்கையிடம் இந்த விஷயம் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அரசு அதிகாரங்கள், போலீஸ் கட்டுப்பாடு போன்றவற்றை வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகங்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதில் ராஜபக்சே உறுதியாக இருக்கிறார் என்று நாங்கள் உணர்கிறோம் என்றார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கிருஷ்ணா சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராஜப‌க்சேவை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கிருஷ்ணா, இலங்கையில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அரசியல் அதிகாரம் வழங்கப்படும் என்றும், அரசியல் அதிகாரம் வழங்கும் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதாகவும் ராஜ‌பக்சே உறுதியளித்தார்.

தமிழர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். காலம் கனிந்து வருவதை இலங்கை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டணிடனான பேச்சுவார்த்தையின் போது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டேன். இதனை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றார்.

இந் நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, காலே ஆகிய இடங்களுக்கு செல்லும் கிருஷ்ணா அங்கு மறுவாழ்வுப் பணிகளை பார்வையிடுகிறார்.

கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையின் நினைவு சின்னத்தில் அவர் மரியாதை செலுத்தவிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு 49,000 வீடுகள் கட்டிக் கொடுக்க இந்தியா ரூ.1,319 கோடி நிதி அளித்துள்ளது. அதில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள 50 வீடுகளை தமிழர்களுக்கு எஸ்.எம். கிருஷ்ணா வழங்குகிறார். இது தவிர தமிழர்களுக்கு 10,000 சைக்கிள்களையும் வழங்குகிறார்.

கிளிநொச்சி செல்லும்போது கிருஷ்ணா அங்குள்ள தமிழர்களுக்கு மருந்துப் பொருட்கள் வழங்குகிறார். காலே நகரில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை அவர் துவங்கி வைக்கிறார்.

English summary
External affairs minister SM Krishna who is in Sri Lanka will meet president Rajapakse today. He will hand over the houses built by India in Jaffna to the ethnic Tamils. He is also meeting Lankan PM D. M. Jayaratne and external affairs minister G.L. Pieiris.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X