For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: தமிழக அரசு வல்லுநர் குழு

By Mathi
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து, அந்த பகுதி கிராம மக்களிடம் அச்சம் ஏற்பட்டு இருப்பதால், அணுஉலையை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் மாதக் கணக்கில் நடைபெற்று வருகிறது.

மத்திய குழு

கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு சார்பில் வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக் குழுவுடன், போராட்டக் குழுவினர் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து கூடங்குளம் சுற்றுவட்டார மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளவும் தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியனை ஒருங்கிணைப்பாளராக கொண்ட இந்த குழுவில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர்.

கூடங்குளத்தில் தமிழக குழு

தமிழக குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் நெல்லை சென்றது அக்குழு. நெல்லை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திவிட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து கூடங்குளம் குழுவினர் போராட்டக் குழுவினரை நேற்று சந்தித்துப் பேசியனர்.

அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் 9 பேருடன் தமிழக அரசின் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

பாதுகாப்பானது

3 மணிநேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழக வல்லுநர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இனியன் கூறியதாவது: எங்கள் குழுவினருக்கு இரண்டு முக்கிய பணிகள் கொடுக்கப்பட்டன.

ஒன்று அணுமின் நிலைய கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்களை பார்வையிடுவது. மற்றொன்று கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம், உணர்வுகளை அறிந்து அரசுக்கு அறிக்கை அளிப்பது ஆகும். அதன்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தை நேரில் ஆய்வு செய்தோம். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சுனாமி வந்தாலும் பாதிப்பு ஏற்படாது.

நிலநடுக்கத்தால் பாதிப்பு இல்லை

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு வராது. அதாவது கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு உள்ள நிலத்திலேயே 6.5 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணுமின் நிலையம் பாதிக்கப்படாது.

சிறு நில அதிர்வுகள் வந்தால் கூட, அணுமின் நிலையம் தனது செயல்பாட்டை தானே நிறுத்திக்கொள்ளும் அளவுக்கு சிறப்பான தொழில்நுட்பங்கள் உள்ளன. இயற்கையாகவே அணுஉலையை குளிரூட்டும் தொழில்நுட்பம் கூடங்குளத்தில் மட்டும்தான் உள்ளது.

அணுமின் நிலையத்துக்கு மின்தடை ஏற்பட்டாலும் ஆபத்து இல்லை. அணுமின் உலை மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அணுமின் நிலையத்தின் மேல்தளத்துக்கு சென்றும் பார்வையிட்டோம். அங்கு உயர்திறன் கொண்ட டர்போ சார்ஜிங்' வசதி கொண்ட ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு இருப்பதை பார்த்தோம். 7 விதமான நவீன பாதுகாப்பு அம்சங்களை பார்க்க முடிந்தது.

மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளும் வகையில், போராட்டக்குழு பிரதிநிதிகள் 9 பேருடன் பேசினோம். அவர்கள் மூலம் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டோம். இத்துடன் எங்களுடைய 2 பணிகளும் முடிவடைந்துவிட்டன.

மக்களுடன் சந்திப்பு இல்லை

கூடங்குளம் பகுதி மக்களை சந்திக்கும்படியோ, அவர்கள் அமைத்த நிபுணர் குழுவை சந்திக்கும்படியோ எங்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை. எங்களுக்கு கிராமம், கிராமமாக செல்லும் பணி கொடுக்கப்படாததால், நாங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதை போராட்டக் குழுவினரிடம் கூறிவிட்டோம்.

நாங்கள் சென்னைக்கு சென்று அவர்கள் கொடுத்துள்ள ஆவணங்களையும், தகவல்களையும் ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிப்போம். கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகமும் எங்களிடம் ஆவணங்களை கொடுத்துள்ளது. அதையும் பரிசீலிப்போம்.

7 பாதுகாப்பு அம்சங்கள் எந்த வகையில் சோதித்து பார்த்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது என்பதை அணுமின் நிலைய நிர்வாகம் ஆவணங்கள் மூலம் தெரிவித்து உள்ளது.

மக்களை சந்திப்பது குறித்து குறிப்பிட்டு கூற முடியாது. நாங்கள் தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கும் வரை, 20 பேரை மட்டும்தான் அணு உலைக்குள் வேலைக்கு செல்ல அனுமதிப்பதாக போராட்டக் குழுவினர் அறிவித்து இருப்பது நிர்வாகம் சார்ந்த பிரச்சினை ஆகும்.

நாங்கள் சென்னை திரும்புவதால் இந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டதாக கருதிவிட முடியாது. கூடங்குளத்தில் அளிக்கப்பட்ட 2 பணிகளும் முடிந்துவிட்டாலும், அறிக்கை அளிக்கும் வரை எங்கள் பணி தொடரும். பேச்சுவார்த்தை சுமுகமாகவே இருந்தது. எங்களை பொறுத்தவரை நல்லபடியாகவே அமைந்தது என்றார் இனியன்.

எம்.ஆர். சீனிவாசன்

அரசு குழுவில் இடம்பெற்றுள்ள எம்.ஆர்.சீனிவாசன் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நேரில் சென்று, அங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்பங்கள், கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டோம். கடலில் இருந்து அணு உலைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் இடம், குளிரூட்டும் வசதிகள் ஆகியவற்றையும் ஆராய்ந்தோம்.

கடல் தண்ணீர் எடுக்கும் இடத்தில் மீன்கள் எந்த காரணத்தினாலும் அணு உலைக்குள் வராதவாறு வசதி செய்யப்பட்டு உள்ளது. அப்படியே வந்தாலும் மீன்கள் உயிரோடு மீண்டும் கடலுக்கு திரும்பிவிடும் அளவுக்கு வசதிகள் உள்ளன. இதையும் ஆராய்ந்தோம். அணு உலையில் நிறுவப்பட்டு உள்ள டீசல் ஜெனரேட்டர்கள் மிகவும் முக்கியமானவை. திடீர் மின்தேவையை பூர்த்தி செய்யும் மிகமுக்கிய உபகரணம் இதுவாகும்.

சுனாமி பேரலை தாக்காத வகையில் 25 அடி உயரத்துக்கு மேல், ஜெனரேட்டர்கள் சிறந்த தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அணு உலை கட்டிடத்தின் மீது ஏறிச் சென்றும் பார்வையிட்டோம். "பேசீவ் ஹீட் ரிமூவல் சிஸ்டம்'' என்ற சிறப்பு வசதி உலகத்திலேயே கூடங்குளம் அணுமின் நிலையத்தில்தான் நிறுவப்பட்டு உள்ளது.

"கோர் கேப்சர் சிஸ்டம்'' என்ற வசதியும் உள்ளது. இதன் மூலம் அணுமூலப் பொருட்கள் உருகும் போது கதிர்வீச்சு ஏற்படாமல் தடுக்கப்படும். இது, 3-வது தலைமுறை தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக கொண்ட அணுஉலை ஆகும்.

15 ஆயிரம் கோடி ரூபாயை கூடங்குளத்தில் முதலீடு செய்து இருக்கிறார்கள். அணுமின் நிலையம் செயல்படாததால் மாதந்தோறும் ரூ.750 கோடி இழப்பு ஏற்படுகிறது. அணு உலையை செயல்படாமல் வைத்து இருப்பது நல்லதல்ல. என்னைப்பற்றி அவர்கள் சந்தேகப்படுவது தேவையற்றது என்றார் அவர்.

English summary
The four-member committee set up by Tamil Nadu Government today virtually gave a clean chit to the Koodankulam Nuclear Power Plant (KKNPP), saying it was well-equipped to withstand natural calamities, be it earthquake or tsunami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X