For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா, ஜி.கே.வாசன், மு.கஅழகிரி, ப.சிதம்பரம் மீது கேஜரிவால் ஊழல் புகார்

By Chakra
Google Oneindia Tamil News

Arvind Kejriwal
டெல்லி: வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்தால் ப.சிதம்பரம், மு.க. அழகிரி, ஜி.கே. வாசன், சரத் பவார், எஸ்.எம்.கிருஷ்ணா உள்பட 14 மத்திய அமைச்சர்கள் மீது எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டு இருக்கும் என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

லோக்பால் சட்டம் கொண்டு வரக் கோரி அன்னா ஹசாரே நேற்று டெல்லியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். அதில் பேசிய அரவிந்த் கேஜரிவால்,

மத்திய அமைச்சர்கள் 14 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்களில் முதல் இடத்தில் உள்ளவர் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்ந்து ஸ்பெக்ட்ரத்துக்கு குறைவான தொகையை நிர்ணயித்தார்

அதே போல மத்திய அமைச்சர்கள் அஜீத் சிங், பரூக் அப்துல்லா, ஜி.கே. வாசன், கபில் சிபல், சரத்பவார், மு.க. அழகிரி, எஸ்.எம். கிருஷ்ணா, பிரபுல் படேல், கமல்நாத், அஜித் சிங், ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஸ்முக் ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது. டெல்லி போலீஸா? சிபிஐயா?. யாருக்கும் இது பற்றிய விவரம் தெரியாது. வலுவான லோக்பால் சட்டத்தை அமல்படுத்தியிருந்தால் 14 மத்திய அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் கபில் சிபல் போன்றவர்கள் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கின்றனர். லோக்பால் மசோதாவை, இவர்கள் ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள். ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டே மத்திய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடுகிறேன்.

தற்போதுள்ள எம்.பிக்களில் 162 பேர் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 20 பேருக்கு எதிராக, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

இதே நிலைதான் மாநில அரசுகளிலும் நீடிக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எதியுரப்பாவை மீண்டும் முதல்வராக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்பி, எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

கர்நாடகா சட்டசபையில் அமர்ந்து கொண்டு, பாஜக எம்எல்ஏக்கள், ஆபாசப் படம் பார்க்கின்றனர். சரத் பவார் தாக்கப்பட்டபோது, அதுகுறித்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. ஊழலுக்கு எதிராக போராடிய நரேந்திரகுமார் கொல்லப்பட்டபோது, அதுகுறித்து யாரும் விவாதிக்கவில்லை என்றார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மணல் கொள்ளையர்களால் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் மத்தர்குலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷீன் தந்தை வின்சென்ட், தம்பி சின்னப்பழம் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜி.கே. வாசன் மீது குஜராத் கன்ட்லா துறைமுக நில ஊழல் குற்றச்சாட்டையும், மு.க. அழகிரியின் மனைவி காந்தி மீது உள்ள நில அபகரிப்பு வழக்கு, தினகரன் நாளிதழ் அலுவலகம் கொளுத்தப்பட்ட வழக்கு ஆகியவற்றா தனது பேச்சில் கேஜரிவால் சுட்டிக்காட்டினார். மேலும் திமுக எம்பி கனிமொழி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழல் கறை படிந்த 14 அமைச்சர்கள் மீதும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார் கெஜரிவால்.

English summary
Some of the prominent UPA Ministers on Sunday came under fire from Team Anna at the fast venue of Anna Hazare with the activist's close aide Arvind Kejriwal claiming that cases could have been registered against 14 ministers if there was a Lokpal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X