For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் இடிந்தகரை

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடிய 178 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள் என்றும், இடிந்தகரையில் கடைகள் திறக்கப்படும் என்றும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள் என்றும் போராட்டகுழு அறிவித்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை செயல்படுத்தலாம் என தமிழக அரசு கடந்த மாதம் 19ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அன்றே அணு மி்ன் நிலைய அதிகாரிகள் பணிக்கு சென்று வேலையைத் துவங்கினர்.

இதை கண்டித்து இடிந்தகரையில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் கடந்த 19ம் தேதி முதல் நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இடிந்தகரையில் கடைகள் அடைக்கப்பட்டன. குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவில்லை.

ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் போராட்டக் குழுவைச் சேர்ந்த 10 பேருடன் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. விஜயேந்திர பிதாரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது. மேலும் உதயகுமார் உள்பட 15 பேரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். எனினும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுவித்த பின்னரே மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள் என போராட்டக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் போராட்டக்குழுவைச் சேர்ந்த 178 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

அதற்கு பின்னர் போராட்டக்குழுவில் ஒருவரான புஷ்பராயன் கூறுகையில்,

அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடி சிறையில் உள்ளவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை (2ம் தேதி) முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இடிந்தகரை, கூடங்குளத்தில் கடைகள் திறந்திருக்கும். இடிந்தகரையில் உள்ள குழந்தைகள் நாளை முதல் பள்ளிக்கு அனுப்பப்படுவர். எனினும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றார்.

English summary
Idinthakarai to return to normalcy from tomorrow as 178 persons from the protest team were released in bail. But the fast against Kudankulam nuclear power plant will continue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X