For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியாவை காங்கிரஸ் தலைவராக்க நரசிம்ம ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்: அர்ஜுன் சிங்

By Chakra
Google Oneindia Tamil News

Narasimha Rao and Sonia Gandhi
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு சோனியாவை காங்கிரஸ் தலைவராக்க நரசிம்ம ராவ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் என்று மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் சிங் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய பிரதேச முதல்வருமான, மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் சிங் எழுதிய சுயசரிதை புத்தகமான 'A Grain of Sand in the Hourglass of Time' வெளியிடப்பட உள்ளது.

சிங்குடன் சேர்ந்து அசோக் சோப்ரா என்பவர் அதை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அர்ஜூன் சிங் மறைவையடுத்து, இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்கும் நிலையில் உள்ளார். அந்தப் புத்தகத்தில் சிங் கூறியிருப்பதாவது:

அரசியலின் அசிங்கமான முகங்களை நானே நேரடியாக பார்த்திருக்கிறேன். காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

காங்கிரசுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை சரிக்கட்ட காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியை நியமிக்கலாம் என்று நான் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பி.வி.நரசிம்ம ராவிடம் கூறினோம்.

சிறிது நேரம் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக இருந்த நரசிம்ம ராவ் திடீரென பட்டாசாக வெடித்தார். முகத்திலும், வார்த்தையிலும் கடுமையான கோபம் வெளிப்பட்டது.

காங்கிரஸ் கட்சி என்ன ரயில் பெட்டிகளா? நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் என்ஜினாக (தலைவராக) இருக்க வேண்டுமா?. கட்சியில் தலைவர் பதவிக்கு வேறு ஆட்களே கிடையாதா? என்று வெடித்தார் ராவ்.

அவரது கோபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும் அமைதியாக இருந்துவிட்டேன்.

அவரது பேச்சு மூலம் அவரது நேரு குடும்ப எதிர்ப்பு மனநிலையை தெளிவாக உணர முடிந்தது.

ஆனாலும் அப்போதைய காங்கிரஸ் பொருளாளர் சீதாராம் கேசரி விடவில்லை. முதலில் சோனியாவிடம் கேட்டுப் பார்ப்போம். அவர் தலைவராக ஒப்புக் கொண்டால் அவரை தலைவராக்குவோம் என்றார்.

மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்த ராவ் உடனே தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

கட்சியில் தலைவராக முதலில் சோனியா காந்தி ஒப்புக் கொள்வாரா என்று பல்டி அடித்து பேச ஆரம்பித்தார். இதற்கு எங்களிடம் பதில் இல்லை. சோனியாவிடம் பேசிவிட்டுத் தான் எதையும் சொல்ல முடியும் என்று கூறிவிட்டேன்.

முன்னதாக சோனியாவை தலைவராக்கலாம் என்ற கருத்தை நான் தான் ராஜிவின் உதவியாளர் வின்சென்ட் ஜார்ஜ், மூத்த தலைவர் எம்.எல்.பொதேதார், கேசரி ஆகியோரிடம் முன் மொழிந்தேன். லேசான தயக்கம் இருந்தாலும் சோனியாவை ஆதரிக்க கேசரி முன் வந்தார் என்று கூறியுள்ளார் அர்ஜூன் சிங்.

உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து தனியாக ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார் அர்ஜூன் சிங். அதிலும் நரசிம்ம ராவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தகவல் வந்தவுடன் அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் தனது வீட்டில் தன் அறைக்குள் போய் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதைப் பார்த்தபோது ரோம் நகரமே எரிந்து கொண்டிருக்கும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதைதான் நினைவுக்கு வந்தது.

மசூதி இடிப்பையடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ராவுடன் பேச அவரது வீட்டுக்கு போன் செய்தேன். ஆனால், அவர் யாருடனும் பேச மாட்டார் என்று தான் பதில் கிடைத்தது.

நரசிம்ம ராவ் வீட்டில் இருக்கிறாரா அல்லது டெல்லிக்கு வெளியே போய்விட்டாரா என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த ராவின் பி.ஏ, அவர் ஒரு ரூமுக்குள் உள் பக்கமாக தாளிட்டுக் கொண்டுவிட்டார். யார் கேட்டாலும் தன்னை டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் என்றார்.

இதையடுத்து பஞ்சாபில் இருந்த நான் உடனடியாக டெல்லிக்குப் புறப்பட்டேன். என் மனமெல்லாம் மசூதி இடிப்பையடுத்து என்னவெல்லாம் வன்முறைகள் நடக்கப் போகிறதோ என்ற அச்சத்திலும் வேதனையிலும் இருந்தது.

இத்தனைக்கும் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாளான 1992ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி நான் உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங்கை சந்தித்துப் பேசினேன். மாநில நிலைமையை ஆராய்ந்துவிட்டு டெல்லிக்கு விரைந்தேன்.

மசூதியை இடிக்கப் போகிறார்கள்.. நடவடிக்கை எடுங்கள் என்று நரசிம்ம ராவிடம் நேரடியாகவே சொன்னேன். அதை அவர் காதிலேயே வாங்கவில்லை.

நான் மீண்டும் மீண்டும் நடவடிக்கை எடுக்குமாறு நெருக்குதல் தரவே, மசூதியை எல்லாம் இடிக்க மாட்டார்கள் என்றார்.

பாஜக- இந்துத்துவா சக்திகளின் திட்டத்தைத் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என்று நான் கூறியவுடன், மசூதியை எப்போது இடிப்பார்கள் என்று கேட்டார் நரசிம்ம ராவ். நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்றேன். ஆனால், அடுத்த நாளே அதை இடித்துத் தள்ளுவார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

மசூதி விவகாரத்தில் ஒரு கட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாப் தியோராஸை நேரில் சந்திக்கக் கூட நரசிம்ம ராவ் திட்டமிட்டார். அதை நான் கடுமையாக எதிர்த்ததால் அந்தத் திட்டத்தை கைவிட்டார்.

பாபர் மசூதி விவகாரத்தை நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு மிக மோசமாகக் கையாண்டது. நான் எத்தனையோ அரசுகளை பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட ஒரு அரசை பார்த்ததில்லை.

அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டிக் கூட்டங்களின் பைல்கள் எப்போது பொது மக்களின் பார்வைக்குத் திறக்கப்படுகின்றனவோ அப்போது தான் நரசிம்ம ராவ் அரசின் செயல்கள் இந்த உலகுக்கு முழுமையாகத் தெரிய வரும் என்று தனது சுயசரிதையில் கூறியுள்ளார் அர்ஜூன் சிங்.

English summary
Why should the Congress party be hitched to the Nehru-Gandhi family like train compartments to the engine was how the late PV Narasimha Rao reacted to the suggestion that Sonia Gandhi be made the Congress chief after the assassination of her husband Rajiv Gandhi in May, 1991. This has been stated by late Congressman Arjun Singh in his soon-to-be-released posthumous autobiography 'A Grain of Sand in the Hourglass of Time'. Singh has said that he came face to face with the "ugly face of politics and was truly disgusted" after hearing Rao's response to the suggestion that was made to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X