For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் தான் இறையருள் கிடைக்கும்: ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் மட்டுமே இறையருள் கிடைக்கும் என்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் சே.கு. தமிழரசன், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், நிதியமைச்சர் பன்னீர்செல்வம், தலைமை ஹாஜி முகம்மது சலாபுதீன் அய்யூப், ஆற்காடு இளவரசர் முகமது அலி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், அதிமுக சார்பில் ஒவ்வோர் ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நான் விடுத்த அழைப்பினை ஏற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றி.

மதத்தின் மீது பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பிருத்தல், இரவலர்க்கு தர்மம் செய்தல், புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகிய 5 கடமைகளில் ஒன்றான நோன்பிருத்தலை இந்தப் புனித மாதத்தில் மேற்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீர் அருந்தாமல், உணவு உட்கொள்ளாமல் இறைப் பற்றுடன் இந்த நோன்பினை இஸ்லாமியப் பெருமக்கள் மேற்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில், இறையருள் யாருக்குக் கிடைக்கும்? என்பது குறித்த ஒரு செய்தியை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வறண்ட பூமி. அங்கே ஒரு மனிதர் நடந்து போய்க் கொண்டிருந்தார். மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்து ஆகாயத்தைப் பார்த்தார் அந்த மனிதர். அப்போது "இன்னாருடைய தோட்டத்தில் மழை பொழிவாயாக'' என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழை பொழிந்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த மனிதர், ஓடிய அந்தத் தண்ணீரை பின்தொடர்ந்து போனார். அங்கே ஒரு தோட்டக்காரர் மண்வெட்டியால் அந்தத் தண்ணீரை திருப்பிவிட்டு தன் தோட்டத்துக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தார். அந்த தோட்டக்காரரிடம் அவர், உங்கள் பெயர் என்ன என்று விசாரித்தார். அந்தத் தோட்டக்காரரும் தன் பெயரைக் குறிப்பிட்டார்.

உடனே அந்த மனிதர் "கொஞ்ச நேரத்துக்கு முன்பு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது உங்கள் பேரைச் சொல்லி உங்கள் தோட்டத்தில் மழை பெய்யும்படியாக என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது'' என்று கூறினார். அப்படியா? என்றார் அந்த தோட்டக்காரர்.

உடனே அந்த மனிதர் "இந்த அளவுக்கு உங்களுக்கு இறையருள் கிடைத்திருக்கிறதே, அதற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்'' என்று வினவினார். அதற்கு அந்தத் தோட்டக்காரர், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் தோட்டத்தில் எது விளைந்தாலும் அதை மூன்றாக பிரித்து விடுவேன். ஒரு பகுதியை தர்மம் செய்து விடுவேன். இரண்டாவது பகுதியை எனது குடும்பத்திற்காக வைத்துக் கொள்வேன். மூன்றாவது பகுதியை இதே நிலத்தில் மீண்டும் பயிர் செய்து விடுவேன் என்றார்.

இறை வழிபாட்டுடன், ஏழை, எளியவர்களுக்கு தர்மம் செய்யும் கடமை உட்பட இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து கடமைகளையும் மேற்கொண்டு இறையருளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்றார் ஜெயலலிதா.

நிகழ்ச்சியில் இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் பிரெசிடெண்ட் முகம்மது அபுபக்கர், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், இந்திய குடியரசு கட்சி தலைவர் சே.கு.தமிழரசன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

English summary
Chief Minister and ADMK general secretary Jayalalithaa on Friday hosted an Iftar party at tahe Trade Centre at Nandambakkam. A large number of dignitaries from the Muslim community took part in the party. Speaking on the occasion, the ADMK chief said only those who discharged their duties with a sense of responsibility towards all sections of society would receive the grace of the Almighty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X