For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்: குடியரசு தலைவரிடம் திருமாவளவன் மனு

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ் மொழியை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக இந்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து தொல்.திருமாவளவன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கின்றார்.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் 348[2]ன் படி, உயர் நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில அரசுகளின் அலுவல் மொழியை பயன்படுத்தலாம். அதன்படி மத்தியபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநில அரசுகள் இந்தி அல்லது அம்மாநிலங்களின் அலுவல் மொழிகளை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளன.

கடந்த 06-12-2006 அன்று தமிழை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக பயன்படுத்த தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே தீர்மானத்தை சென்னை உயர்நீதிமன்றமும் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்மானங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திற்கும் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் உச்ச நீதிமன்றம் தற்போதைய சூழலில் தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக பயன்படுத்துவது பொருத்தமாக அமையாது என்று இந்திய அரசுக்கு குறிப்பு எழுதியுள்ளது. இதனால் இந்திய அரசு இது குறித்து முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

தமிழை இந்திய அரசு செம்மொழியாக அறிவித்துள்ள நிலையிலும், அதனை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்காதது ஏன் என்று புரியவில்லை. இந்தியாவிலுள்ள நான்கு மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டு, தமிழ் மொழியை மட்டும் ஏற்க மறுப்பதை இந்திய அரசு தமிழுக்கு எதிராக ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக கருத நேரிடுகிறது.

ஆங்கிலமே வேண்டாம் என்று தமிழகத்தில் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. ஆங்கிலத்துடன் தமிழையும் கூடுதல் அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என்று தான் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

எனவே உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டுவிழா நடைபெறும் இந்த சூழலில் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக' இந்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இதை இந்திய அரசின் சட்டத்துறை அமைச்சரின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.

English summary
Viduthalai Chiruthaigal Katchi leader Thol.Thirumavalavan has gave a petition to President Pranab Mukherjee to announce Tamil as an official language in Chennai HC
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X