For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கசாப் தூக்கால் காங்.குக்கு எதிரான அஸ்திரத்தை இழந்தது பாஜக.. அதேசமயம், காங்.குக்கும் லாபமில்லை!

Google Oneindia Tamil News

Sonia, Kasab and Advani
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதன் மூலம் பாஜக, காங்கிரஸுக்கு எதிராக பயன்படுத்தி வந்த அஸ்திரத்தை இழந்துள்ளது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், காங்கிரஸுக்கும் இதனால் பெரிய அளவில் அரசியல் லாபம் கிடைத்து விட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் சொல்லியுள்ளனர்.

குறிப்பாக குஜராத் சட்டசபைத் தேர்தலில் கசாப்பை வைத்து பாஜகவால் பெரிய அளவில் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் அப்சல் குருவை இன்னும் தூக்கில் போடாமல் இழுத்தடித்து வருவதால் காங்கிரஸ் கட்சிக்கும் கசாப்பை வைத்து பெரிய அளவில் பாலிட்டிக்ஸ் செய்ய முடியாத நிலையே இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பைக்குள் புகுந்த பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகளுடன் கமாண்டோப் படையினர் நடத்திய கடுமையான சண்டையில் 9 பேர் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் சிக்கினான். அவனை நான்கு வருடமாக பாதுகாத்து, பத்திரப்படுத்தி வந்த மத்திய மாநில அரசுகள் நேற்று திடீரென தூக்கில் போட்டு விட்டனர்.

இது காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஸ்டண்ட் என்று பரவலாக வர்ணிக்கப்படுகிறது. இருப்பினும் முற்றிலும் சட்டநியதிகளுக்குட்பட்டே கசாப்பை தூக்கிலிடும் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசும், காங்கிரஸும், மகாராஷ்டிர அரசும் விளக்கியுள்ளன.

ஆனால் நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கசாப் தூக்கிலிடப்பட்டதுதான் காங்கிரஸ் மீதான சந்தேகப் பார்வையை அனைவர் மத்தியிலும் எழுப்பியுள்ளது. மேலும், குஜராத் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டும் காங்கிரஸ், கசாப்பை காவு கொடுத்திருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகரான அஸ்வின ராய் கூறுகையில், குஜராத் தேர்தலை மனதில் கொண்டும், குளிர்காலக் கூட்டத் தொடரை மனதில் கொண்டும் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கசாப்பைத் தூக்கிலிடுவது என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே இதை யாரும் பெரிய சாதனையாக கூற முடியாது. தாமதமான ஒரு முடிவு, அதேசமயம், நல்ல முடிவு. இதில் அரசை யாரும் குறை சொல்ல முடியாது. நிச்சயம் இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.

அதசேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் தேர்தலில் கசாப் தூக்குத் தண்டனை பெரிய அளவில் லாபம் தராது என்றே தோன்றுகிறது. ஒருவேளை கசாப் இன்னும் முன்னதாகவே தூக்கிலிடப்பட்டிருந்தால், அதாவது மும்பை பயங்கரவாத சம்பவம் நடந்த உடனேயே விரைவிலேயே அவனை தூக்கிலிட்டிருந்தால் அது காங்கிரஸுக்கு உதவியிருக்கக் கூடும். ஆனால் தற்போது இது காங்கிரஸுக்கு உதவாது என்றே தோன்றுகிறது.

குஜராத் சட்டசபைத் தேர்தலில் கசாப் விவகாரம் பெரிய அளவில் பயன்படும் என்று தெரியவில்லை. அங்கு மோடி மற்றும் அவரது அரசின் செயல்பாடுகள் மட்டுமே மக்கள் மத்தியில் பிரதானமாக விவாதிக்கப்படும் பொருளாக உள்ளது. முற்றிலும் உள்ளூர் அம்சங்கள்தான் அங்கு எடுபட முடியும்.

அதேசமயம், பாஜகவைப் பொறுத்தவரை அவர்களது பிரசார பிரச்சினைகளில் ஒன்று குறைந்து விட்டது என்று கூறலாம். கசாப்பை வைத்து அவர்கள் பிரசாரம் செய்ய முடியாது.

ஒருவேளை கசாப்பை மத்திய அரசு தூக்கிலிட்டிருக்காவிட்டால், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அதை அவர்கள் பெரிய பிரச்சினையாக்க காத்திருந்தார்கள். மக்களும் கூட நான்கு வருடமாக கசாப்பை பாதுகாத்து் வைத்து வரும் அரசின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தியுடன்தான் இருந்தனர். எனவே கசாப்பை வரும் 26ம் தேதிக்குள் தூக்கிலிட்டிருக்காவிட்டால் மத்திய அரசுக்கும், காங்கிரஸுக்கும் அது பெரிய கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்திருக்கக் கூடும் என்றார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் நிசார் உல் ஹக் கூறுகையில், நிச்சயம் கசாப்பை வைத்து இனி பாஜக அரசியல் செய்ய முடியாது. கசாப்பை தூக்கிலிட்டதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா, முக்கியத்துவம் இருக்கிறதா என்பதை என்னால் சொல்ல முடியாது. அதேசமயம், பாஜகவுக்கு ஒரு பிரச்சினை பறி போய் விட்டது என்றார்.

சுப்ரதா முகர்ஜி என்ற இன்னொரு அரசியல் விவகார நிபுணர் கூறுகையில், நிச்சயம் இது காங்கிரஸுக்குப் பலன் தராது. ஒருவேளை அப்சல் குருவையும் அது தூக்கிலிட்டிருந்தால் லாபம் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது. இருவரையும் சேர்த்து தூக்கிலிட்டிருந்தால் நிச்சயம் காங்கிரஸுக்குப் பெரும் பெயர் கிடைத்திருக்கலாம்.

பாஜகவைப் பொறுத்தவரை கசாப் தூக்கு என்பது அதற்கு பெரிய அளவில் பாதிப்பைத் தராது என்றே தெரிகிறது. அதேசமயம், கசாப் பிரச்சினையை அது இனி எழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆனால் காங்கிரஸ் தரப்பிலோ, கசாப் தூக்கிலிடப்பட்டது மகாராஷ்டிராவில் நிச்சயம் காங்கிரஸுக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனராம்.

English summary
The hanging of terrorist Ajmal Kasab for the 2008 Mumbai terror attacks has robbed the BJP of an issue in the Gujarat polls and parliament's winter session, but it is unlikely to be of much electoral advantage to the Congress either, say analysts.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X